சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், வறண்ட வானிலை நீடித்து வருகிறது. இருப்பினும் இலங்கையின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குளிர்கால மழை மேகங்கள் காரணமாக இலங்கையில் மழை பெய்து வருகிறது. மேலும், வடக்கு திசையில் இருந்து குளிர் காற்று வங்கக் கடல் வழியாக தரைப்பகுதிக்குள் நுழைகிறது. இதன் காரணமாக இயல்பைவிட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் நேற்று கடும் பனி மூட்டம் காணப்பட்டது. காற்றில் அதிக அளிவில் காணப்படும் ஈரப்பதம், காற்றின் மிதமான போக்கு, இரவு நேரத்தின் குறைந்த வெப்பநிலை ஆகியவற்றால் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதேநிலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடும் பனிப்பொழி்வு காரணமாக விமான நிலையத்தில் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. எதிரே வரும் நபர்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் சென்னைக்கு வரும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பின. சென்னையில் இருந்து வெளியில் செல்லும் விமானங்களின் புறப்பாடும் ஒத்தி வைக்கப்பட்டன. அதேபோல சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் காலையில் சென்ற வாகனங்்கள் முகப்பு விளக்கு களை எரியவிட்டபடி மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் பல்வேறு சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் காலை நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பனி மூட்டம் காலை 9 மணி வரையும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 12ம் தேதி வரையில் குறைந்த பட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
