×

புலி படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்த குற்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம்: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் இருந்து ரூ.15 கோடியை மறைத்ததாக வருமானவரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-16ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு சோதனை நடத்தியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து, வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விஜய் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடந்தது.

அப்போது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று வாதிட்டார். வருமான வரித்துறை தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாசன் ஆஜராகி, வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த மேல்முறையீடு முடிந்த பின்னர் ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். எனவே, விஜய் தாக்கல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ‘‘வருமான வரித்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை.

குறிப்பிட்ட காலத்திற்குள் அபராத உத்தரவை பிறப்பிக்கவில்லை என்ற விஜய் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. உரிய காலத்திற்குள்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அப்போது, விஜய் தரப்பு வழக்கறிஞர் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல் முறையீடு செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்விலோ அல்லது வருமான வரித்துறை மேல் முறையீடு தீர்ப்பாயத்திலோ விஜய் மேல் முறையீடு செய்ய முடியும். எப்படியிருந்தாலும், அபராத தொகையை தற்போதைய நிலையில் விஜய் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஜனநாயகன் படம் வெளியிட முடியாமல் முடங்கிப்போயுள்ளது. படம் வெளியிட முடியவில்லை.

இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஜனநாயகன் தேர்தல் முடியும் வரை வெளியாகாது. ஏற்கனவே, விநியோகஸ்தர்கள் தாங்கள் கொடுத்த முன் பணத்தை கேட்டு விஜயிடம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிப்போயுள்ளார். இந்தநிலையில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு கரும்புள்ளியாக வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* விஜய் இமேஜூக்கு டேமேஜ்
இது குறித்து வழக்கறிஞர் என்.ஆனந்த் கூறும்போது, புதிதாக கட்சி தொடங்கிய விஜய் ஊழல் என்பது தன்னிடம் இல்லை என்று வெளிப்படையாக பிரகடனம் செய்துள்ளார். ஆனால், தனது வருமானத்தை அவர் மறைத்துள்ளார். இதன் மூலம் அவரும் ஊழல் செய்தவர்தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வரி ஏய்ப்பு செய்து அரசை ஏமாற்றியுள்ளார்.

இதனால் விஜய்க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளதால் இது அவரது தேர்தலை பாதிக்காது. வருமான வரி அபராதத்தால் தேர்தலில் போட்டியிட தடை எதுவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இல்லை. ஆனால், மக்கள் மன்றத்தில் அவர் தன்னை ஊழலற்றவர் என்று இனிமேல் பேச முடியாது. அவரது இமேஜ் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Vijay ,Chennai High Court ,Chennai ,Income Tax Department ,
× RELATED அடையாறு மத்திய கைலாஷ் சாலை...