×

அடையாறு மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள “L” வடிவ மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு

 

சென்னை: அடையாறு மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள “L” வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னட்டு, அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள “L” வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் கட்டுமானப் பணி நிறைவுபெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, இன்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இராஜீவ் காந்தி சாலையானது, மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து துவங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் “T” சந்திப்பில், வடிவிலானதாகும். இச்சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மிகுந்த சிரமத்துடனும் கால விரயத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இந்தச் சாலைச் சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு வாகனச் செறிவுகளின் அடிப்படையில், சர்தார் பட்டேல் சாலையிலிருந்து இராஜீவ் காந்தி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தினை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அடையாறு பகுதியிலிருந்து. கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் OMR சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்களும் தங்குத்தடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலைச் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞையும் விலக்கிக் கொள்ளப்படும். மேலும், இருவழிச் சாலை மேம்பாலத்தினை செயல்படுத்துவதற்கு இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.61 கோடி மதிப்பீட்டில் பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும் (அணுகு சாலை உட்பட). சர்தார் பட்டேல் சாலையிலிருந்து. இராஜீவ் காந்தி சாலைக்குப் பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளைவானது 30 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவுப் பகுதியில் பாலத்தின் அகலம் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே. இந்த வளைவுப் பகுதியில் எவ்வித பயமின்றி பயணிக்கலாம். இருப்பினும், பாலத்தின் மீதான பயணத்திற்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டிற்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்திற்கு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த “L” வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தின் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 16.2.2026 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது என்று பொதுப்பணிகள். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளர் (மெட்ரோ) எஸ்.ஜவஹர், இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் அலுவலர் (தொழில்நுட்பம்) பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Adiyaru Central Kailash Road junction ,Minister ,Chennai ,Central Kailash Road ,Adiyaaru ,Velu ,
× RELATED அடையாறு மத்திய கைலாஷ் சாலை...