நன்றி குங்குமம் தோழி
மூங்கில் பாலம்
பீகாரின் தர்பாங்கா மாவட்டத்துக்குள் பாயும் கமலா நதியின் ஒரு கரையில் ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. இங்கே வசித்து வரும் மக்கள் இன்னொரு கரையில் உள்ள பள்ளி, சந்தை, மருத்துவமனைக்குப் போக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மாற்றுப் பாதையின் மூலம்தான் நதியின் ஒரு கரையிலிருந்து, இன்னொரு கரைக்குச் செல்ல முடியும். இந்த மாற்றுப்பாதையின் தூரம், 40 கிலோ மீட்டர்.
நதியின் ஒரு கரையில் வாழ்ந்து வந்த குழந்தைகள், தினமும் பள்ளிக்கூடம் செல்வதற்குக் கூட, 40 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலை நிலவியது. மக்கள் படும் அவஸ்தைகளை தினமும் கவனித்துக் கொண்டிருந்த பாப்பு குமார் யாதவ்விற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அரசாங்கத்தை நம்புவதைவிட, நாமே ஒரு பாலத்தை கட்டிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார் பாப்பு. பல வருடங்களாக, தான் சேமித்து வைத்திருந்த 12 லட்ச ரூபாயைக் கொண்டு, கமலா நதியின் மீது மூங்கில் பாலத்தைக் கட்டியிருக்கிறார். சுமார் 3,800 மூங்கில்களை கொண்டு பலமாக கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் நீளம், 1.5 கிலோ மீட்டர். முப்பது நாட்களில் பாலத்தைக் கட்டி முடித்திருக்கிறார் பாப்பு.
சர்வதேசப் புகழ்பெற்ற இந்தியப் பெண்
ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட, 30 ஆளுமைகளை பட்டியலிடுவது, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் வழக்கம். இதில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று தனித்தனிப் பட்டியல்கள் இருக்கின்றன. அமெரிக்கப் பட்டியலில் நிதித்துறை சார்ந்து சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட, 30 ஆளுமைகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார், கல்யாணி ராமதுர்கம். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் இயங்கிவரும் நிதித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘கோபால்ட் லேப்ஸி’ன் தலைமைச் செயல் அதிகாரியும் இவரே. வங்கி, நிதி நிறுவனங்களுக்கு உண்டான ஏஐ திறன் கொண்ட மென்பொருட்களை கட்டமைத்து தருவது இந்நிறுவனத்தின் பணி. அதாவது, அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களின் நிதி சார்ந்த செயல்பாடுகள் பாதுகாப்பாக இருப்பதற்கு ‘கோபால்ட் லேப்ஸு’ம் ஒரு காரணம்.
உலகின் அதிவேக ரயில்
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘மேக்னடிக் லெவிடேஷன்’ எனும் ‘மேக்லெவ்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ரயிலை வடிவமைத்திருக்கின்றனர். சக்கரங்கள்
இல்லாமல் காந்த சக்தியில் அதிவேகமாக இயங்குகிறது இந்த ரயில். இந்த மேக்லெவ் ரயிலைச் சோதனை செய்வதற்காக 400 மீட்டர் நீளத்தில் ஒரு ஓடுபாதையை நிறுவியிருந்தனர். வெறும் 2 நொடிகளில் 400 மீட்டரை கடந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது மேக்லெவ் ரயில். இந்த வேகத்தில் சென்றால் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். இதுவரை இவ்வளவு வேகத்தில் எந்த ரயிலும் சென்றதில்லை. உலகின் அதிவேக ரயில் என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தியிருக்கிறது இந்த மேக்லெவ் ரயில்.
மகிழ்ச்சி
காதலிகளுடன் நேரத்தைச் செலவிடுவதை விட, தங்களின் சக ஆண் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும் போது அதிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக 74 சதவீத ஆண்கள் தெரிவித்திருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது. இதற்காக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர். மட்டுமல்ல, காதலிகளுடன் நேரத்தைச் செலவிடும் போது உண்டாகும் மன அழுத்தமும், சண்டைகளும், வாக்குவாதங்களும் ஆண் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும் போது குறைவு என்கிறது அந்த ஆய்வு. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும், இன்னொரு பக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
டாப் 10 நகரங்கள்
கடந்த 2025ம் வருடத்தில் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்த டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது, தாய்லாந்தின் தலைநகரமான பாங்காங். இந்நகரத்துக்கு கடந்த வருடம் மட்டுமே 3.03 கோடி வெளிநாட்டுப் பயணிகள் வருகைப் புரிந்திருக்கின்றனர். இது அந்நகரத்தின் மக்கள் தொகையை விட 2 மடங்கு அதிகம்.
2024-ம் வருடமும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகைப் புரிந்த நகரங்களின் பட்டியலில் பாங்காங்தான் முதலிடத்தில் இருந்தது. இரண்டாம் இடத்தை சீனாவின் ஹாங்காங் நகரம் பிடித்திருக்கிறது. கடந்த 2025-ல் 2.32 கோடி வெளிநாட்டுப் பயணிகள் ஹாங்காங்கிற்கு வருகைப் புரிந்திருக்கின்றனர். 2.27 கோடி வெளிநாட்டுப் பயணிகளின் வருகையுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது, லண்டன்.
தொகுப்பு: த.சக்திவேல்
