×

கைத்தறியை மீட்டெடுக்க கை கோர்த்த பயணம் இது!

நன்றி குங்குமம் தோழி

ஆடைகள் உற்சாகத்தையும், அழகினையும் தரும் என்பதை தாண்டி ஆரோக்கியமும் தருமா? என்றால் எல்லோருக்கும் சந்தேகம் எழும். எல்லா வகை துணிகளும் எல்லோருக்கும் செட்டாகாது.சில தரமில்லாத துணியால் ஒவ்வாமைகளை எல்லோரும் சந்திச்சிருப்போம். மக்களை கவர குறைந்த விலையில் வண்ணமயமான ஜரி, நெட் வேலைப்பாடுகள் கொண்ட துணிகளும் சந்தையில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு பளிச்சென பிரமாண்டமாக இருக்கும். ஆனால், சௌகரியமாக இருக்காது. அதனால் இது போன்ற உடைகளை பெரும்பாலான குழந்தைகளும் விரும்புவதில்லை. சில சமயம் இந்த துணிகள் சருமத்தில் அலர்ஜியினை கூட ஏற்படுத்தும்.

காட்டன் ஆடைகள் பார்க்க பிரமாண்டமாக இல்லை என்றாலும், அணிய சௌகரியமாக இருக்கும். குறிப்பாக கைகளால் நெசவு செய்யப்பட்ட கைத்தறி ஆடைகள்தான் எப்போதும் பலருக்கும் பேவரைட். இந்த துணியின் இழைகளில் கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு இடைவெளிகள் இருப்பதால், சருமம் எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். அதனால் செல்கள் சுவாசிக்க வசதியாக இருக்கும்.

இதனால் சருமத்தில் அலர்ஜி போன்ற பிரச்னைகள் ஏற்படாது. இத்தகைய மகத்துவம் மிகுந்த கைத்தறி ஆடைகளின் உற்பத்தி நலிவிலிருந்து தற்போதுதான் சிலரின் முயற்சியால் மீண்டு வருகின்றது. இந்த மீட்பு புரட்சியில் தனக்கான பங்கையும் சிறப்பாக செய்து வருகிறது கோயம்புத்தூரில் இயங்கி வரும் ‘சில்க் வில்லேஜ் ஹாண்ட்லூம் டிரெயினிங் ஆய்வு மையம்’. அதன் உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமான முருகேசனிடம் பேசியதிலிருந்து…

‘‘எனக்கு பூர்வீகம் காரைக்குடி. ஆனால், கோயம்புத்தூரில் செட்டிலாயிட்டோம். நாங்க நெசவாளர் குடும்பம். எனக்கு நெசவு தெரியாது என்றாலும், அதன் அருமை பெருமை தெரியும். இன்று எல்லோருடைய வீட்டிலும் லேப்டாப், செல்போன் இல்லாமல் இருக்காது. அதே போல் கைத்தறி இயந்திரத்தையும் அவசியப் பொருளாக மாற்றணும். இன்றைய மாணவர்கள் பொறியியல், ஐடிஎன கம்ப்யூட்டர் துறையையே தேர்வு செய்கிறார்கள். அதையும் தாண்டி கைத்தறியையும் கத்துக்கணும். மேலும், அவர்களின் தொழில்நுட்பத் திறனை கைத்தறி துறையில் புகுத்த வேண்டும்’’ என்றவர், சிறப்புமிக்க கைத்தறி துறை நலிவடையக் கூடாது என்ற நோக்கத்திலேயே கடந்த வருடம் இந்தப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை தொடங்கியுள்ளார்.

‘‘எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு புடவை, கால் மிதி, டேபிள் மேட், டவல் போன்றவை நெய்யவும், நேச்சுரல் டையிங், எலக்ட்ரானிக் ஜக்கார்டு டிசைனிங், நேச்சுரல் பிரின்டிங், டெக்ஸ்டைல் டிசைனிங் மட்டுமில்லாம இப்ப டிரெண்டிங்ல இருக்கிற ‘AI’ பயன்படுத்தி டிசைன் செய்யவும் சொல்லிக் கொடுக்குறோம். அதனைத் தொடர்ந்து பிசினஸ் செய்வது மற்றும் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கிறோம். நாங்க இந்த பயிற்சி மையம் ஆரம்பித்து ஒரு வருடம் கூட முடியவில்லை. ஆனால்,ஐ.டி மாணவர்கள் பலர் டெக்ஸ்டைல் டிசைனிங் பயிற்சி எடுக்க வருவது நிஜமாகவே மன நிறைவை தருகிறது.

எங்க பயிற்சி மையத்தில் முக்கிய அம்சம் 45 நாட்கள் அளிக்கப்படும் ‘சமர்த்’ பயிற்சி. அதில் மாணவர்கள் கைத்தறியினை நேரடியாக இயக்க கற்றுத் தருகிறோம். இதை நாங்கள் மத்திய அரசு மற்றும் சேலம் நெசவாளர் சேவை மையத்துடனும் இணைந்து செயல்படுத்துகிறோம். இந்தப் பயிற்சியை பெறும் பயனாளிகளுக்கு மத்திய அரசு தினசரி 300 ரூபாய் உதவித் தொகையாக வழங்குகிறது. முழுக்க முழுக்க பெண்களுக்கு பயன்படும் நோக்கில் உருவாக்கப்பட்ட பயிற்சி இது. பயிற்சி நிறைவுக்கான சான்றிதழும் வழங்குகிறோம்.

அதனை கொண்டு வங்கிக் கடன் வசதியுடன் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். கடனில் 10% மட்டுமே பயனாளிகள் திருப்பி செலுத்தினால் போதும். பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல், பிசினஸ் ெதாடங்குவது முதல் அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது வரை துணை செய்கிறோம். இதுவரை இரண்டு பேட்ச் மாணவர்களை உருவாக்கிவிட்டோம். அதில் வீட்டில் அல்லது கடை அமைக்க விரும்புபவர்களுக்கு அனைத்துவித உபகரண வசதிகளையும் செய்து தருகிறோம்.

இந்தப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள எந்தவித முன்னறிவோ அனுபவமோ தேவையில்லை. 16 வயது முதல் 45 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் பயிற்சியில் பங்கேற்கலாம். பல வருட அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கிறோம். பயிற்சி முடித்தவர்களுக்கும் வெளி நெசவாளர்களுக்கும் துறை சார்ந்த அடையாள அட்டையை பெற்றுத் தர உதவுகிறோம். நெசவாளர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கும் உதவி பெற்றுத் தருகிறோம்.

என் நண்பர்கள் என் நோக்கம் அறிந்து எனக்கு உதவி செய்கின்றனர். ஒருவர் 13 ஏக்கர் இடம் தந்து உதவினார். அங்கு தான் கைத்தறி தொழிலுக்கு தேவைப்படும் அனைத்து மூலப்பொருட்களும் தயாரிக்கும் கூடம் அமைத்திருக்கிறோம். இயற்கை சாயங்கள் தயாரிக்க பூச்செடிகள், மரங்களும் வளர்க்கிறோம். இதை பள்ளி மாணவர்கள் முதல் எல்லோரும் பார்வையிடலாம். விற்பனையகங்களும் உள்ளன.

நாங்க தயாரிக்கும் கைத்தறி ஆடைகளும், மேட்களும் இங்கு கிடைக்கும். இந்திய அளவில் கைத்தறி என்றால் எங்கள் கூடம் அடையாளமாக மாற வேண்டும். கைத்தறி துறையில் ஐ.டி துறை போல் ஏசியில் அமர்ந்து ஷிஃப்ட் முறையில் நெசவாளர்கள் வேலை செய்ய வேண்டும்’’ என்ற எண்ணத்துடன் நண்பர்கள் பலரின் கூட்டு முயற்சியில் கைத்தறி தொழிலை மீட்டெடுக்க முன்வந்துள்ளார் முருகேசன்.

தொழில் தொடங்கப் போகிறேன்!

– சுதா ராணி சந்திரசேகரன், பயிற்சி பெற்றவர்.

‘‘என்னுடைய கல்லூரியில் டெக்ஸ்டைல் துறை எப்போதும் ஆக்டிவா இருப்பாங்க. ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அதில் பெரும்பாலும் கற்பனை திறன் சார்ந்திருக்கும். எனக்கும் அந்த துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பெங்களூரில் NEFTல் டெக்ஸ்டைல் MBA முடிச்சேன். ஆனால், திருமணம் மற்றும் என் குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் நான் இந்த துறையில் என்னை இணைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இங்கு பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்.

கல்லூரியில் பாடமாக படிச்சதை இங்கு செயல்முறையில் செய்த போது எனக்கு அந்த துறை சார்ந்து நிறைய புரிதல் ஏற்பட்டது. ஜக்கார்டு டிசைனிங் பயின்றாலும் நேச்சுரல் டையிங் என்னை மிகவும் கவர்ந்தது. இரண்டிலும் பிராஜக்ட்டு செய்ய இருக்கிறேன். இந்த துறையில் பல வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள்தான் பயிற்சி அளிக்கிறார்கள். பயிற்சி முடிச்சதும் இங்கு கற்றதைக் கொண்டு தொழில் தொடங்கப் போகிறேன்’’ என்றார் சுதா ராணி.

வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவேன்!
– ராணி சம்யுக்தா, பயிற்சி பெற்றவர்.

‘‘எனக்கு சிவகாசி சொந்த ஊர். நான் கோயம்புத்தூர்ல கார்மென்ட் டிசைனிங் முடிச்சேன். எங்கப் பகுதி மக்களுக்கு பட்டாசு தொழில் ஆபத்து என்று தெரிந்தாலும், அங்கு அதைத் தவிர வேறு தொழில் கிடையாது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர விரும்பினேன்.

அதனால் இங்கு சஸ்டெயினபிலிட்டி குறித்து தெரிந்து கொண்டேன். மேலும், இங்கு நேச்சுரல் டையிங், கைத்தறி குறித்தும் கற்றுக் கொண்டேன். என் சித்தி புடவை பிசினஸ் செய்றாங்க. அவர்களுடன் சேர்ந்து நானே நெசவு செய்து ஆடைகளை விற்பனை செய்யப் போகிறேன். இதன் மூலம் எங்க மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர இருக்கிறேன்’’ என்றார்.

செய்தி: கலைச்செல்வி

படங்கள்: சதீஷ் தனபாலன்

Tags : Kumkumam Dozhi ,
× RELATED கிச்சன் டிப்ஸ்