நன்றி குங்குமம் தோழி
‘‘எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அரிதாரத்தைப் பூசி, காலில் சலங்கை கட்டி, கரகத்தை தலையில் ஏற்றிவிட்டால், என்னையே நான் மறந்து விடுவேன்’’ என்கிற தேன்மொழி ராஜேந்திரன், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற ‘கரகாட்டக் கலைஞர்.’‘‘கரகத்தில் அம்மன் கரகம், சக்தி கரகம், பூங்கரகம், கிளி கரகம், செடி கரகம், ஆட்டக் கரகம், அடுக்குக் கரகம், அக்னிக் கரகம், தீ பந்தக் கரகம் என பலவகை உண்டு. மதுரை கரகத்திற்கும், திருநெல்வேலி கரகத்திற்குமே ஆட்டத்தில் வித்தியாசங்கள் உண்டு.
திருநெல்வேலி மாவட்டத்தில் விடியவிடிய சுத்துக்கு விட்டே கரகம் ஆடவைப்பார்கள்’’ என்கிற தேன்மொழி, ‘‘தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் நாங்கள். என் அக்காதான் முதலில் கரகம் முறையாகக் கற்று அரங்கேற்றம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு ஆட்டத்தை அவர் நிறுத்த, கலை விட்டுப்போய்விடக் கூடாது என நான் கையில் எடுத்தேன்’’ என்கிறார் இவர். ‘‘வறுமையில்தான் கரகம் ஆட வந்தேன். ஆரம்பத்தில் ‘ஆட்டக்காரி’ என எல்லோரும் கேலி செய்வதைப் பார்த்து, வேண்டாம் என்று ஒதுங்கினேன். ஆனால், என் உடல் அசைவையும், நளினத்தையும் பார்த்தவர்கள் சிறப்பாக ஆடுவதாய் சொல்ல, இந்தக் கலையின் வரலாற்றை அறிந்த பிறகே, என் அக்காவிடம் ஆட்டத்தைக் கற்று அரங்கேற்றம் செய்தேன்’’ எனப் புன்னகைக்கிறார்.
‘‘மதுரை ராமநாதபுரம் பகுதியில் இருந்து வந்த அடித்தட்டு மக்களாலதான் கரகாட்டக் கலை தஞ்சாவூரில் பரவியது. இதில் ஒரு சமூகத்தோட வரலாறு இருக்கு. கலைஞர்களோட தவம் இருக்கு. அவங்களின் கண்ணீரும் சந்தோஷமும் இருக்கு. மற்றவர்கள் பார்வைக்கு இந்தக் கலை எப்படி வேண்டுமானாலும் தெரியலாம். என்னைப் பொறுத்தவரை இது தெய்வீகக் கலை.
கரகாட்டத்தோட வேகமும் உணர்ச்சியும் அந்த நேரத்துல வாசிக்கிற நையாண்டி மேளத்தில் இருந்தே வரும். அந்த இசைதான் ஆட்டத்துக்கே உயிர் கொடுக்கும். ஆடுறவங்களுக்கும் வாசிக்கிறவங்களுக்கும் மேடையில உரையாடல் நடக்கும். தவில் வாசிக்க வந்த எனது கணவர் ராஜேந்திரனுக்கும் எனக்கும் காதல் மலர, “அவர் வாசிக்க… நான் ஆட என அந்த இடமே அமர்க்களப்படும்” எனப் புன்னகைத்தவர், ‘கரகாட்டக்காரன்’ பட கவுண்டமணி, செந்தில், கோவை சரளா கரகாட்டக் காட்சிகளை நமக்கு நினைவூட்டினார்.
‘‘எனது கணவர்தான் எனக்கு அடவு, தாளம் மாதிரியான நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். எங்களுக்கு வாழ்க்கையே இந்தக் கலைதான். ஒருநாள் முழுவதும் ஆடச் சொன்னாலும் ஆடிக்கொண்டே இருப்பேன். அரிதாரத்தைக் கலைத்தால்தான் வருத்தமாய் இருக்கும். நளினம், நவரசம், ஜதி ஏற்றுவதில் தொடங்கி, சம நடை, துரித நடை என தாம்பாளத்தில் ஒரு பாட்டு முழுமைக்கும் ஆடுவேன். நான் கரகம் ஆட வந்த துவக்கத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே, கோயில் திருவிழாக்களில் வருடத்திற்கு 200 முதல் 500 வரை நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்திருக்கிறேன். காரணம், வாரத்தில் இரண்டு நாள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களுமே, கொடைவிழா என்கின்ற ஒன்றை அங்கு நடத்துவார்கள்.
நான் ஆடும் போது மதுரை புகழ் கரகாட்டக் கலைஞர் லெட்சுமியோடு ஜோடியாக கோயில் விழாக்களில் ஆடியிருக்கிறேன். அவரிடமிருந்தே தாம்பாளத்தில் ஆடுவது, படி மேல் ஆடுவது, உருளை மேல் ஆடுவது, கரகத்துடன் கைகளில் பாட்டில் சுழற்றுவது, பெஞ்சின் மேல் தாம்பாளத்தில் ஆடுவது, சோடா பாட்டில் மேல் ஆடுவது, சிலம்பம் சுற்றுவது, வளையம் சுற்றுவது, பூ பந்து ஆடுவது, தீச்சட்டி, தீ பந்தம் சுற்றுவது, எலுமிச்சை கோர்ப்பது, கண்களால் ஊசி எடுப்பது, தேங்காய் உடைப்பது, வாயில் பணம் எடுப்பது, கரகத்துடன் சைக்கிளை பேலன்ஸ் செய்வது என கற்றுக்கொண்டேன்.
கலைஞர் ஐயா முதல்வராக இருந்தபோது, பாரம்பரியக் கலை மற்றும் கலைஞர்களுக்கு வாய்ப்பும், சம உரிமையும் வழங்கப்பட்டு, மரியாதை கொடுத்து எங்களை மேடையேற்றினார்கள். சென்னை சங்கமத்தில் பரதத்தையும் கரகத்தையும் இணைத்தே மேடையேற்றி ஆடவைத்து சிறப்பித்தார்கள். பரதக் கலைஞர்கள் அனிதா ரெத்தினம் மற்றும் சோபனாவோடு எனது கரகாட்டத்தை மேடையில் அப்போது அரங்கேற்றினேன்.
சிறந்த கரகாட்டக் கலைஞருக்கான கலைமாமணி விருதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு வழங்கினார். சினிமா நடிகர்கள் அதிகம் விருது பெற்ற அந்த விழாவில், நான் மட்டுமே பாரம்பரியக் கலை சார்ந்து, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கலைஞர். அரசு இதழில், விருது பெற்றவர்களை வெளியிட்ட போது, நான் விருது பெற்ற புகைப்படம், நடுப்பக்கத்தில் பிரமாண்டமாக வெளியானது.
முன்பெல்லாம் நுனிவிரல் மட்டும் தெரிய, கெரண்டை கால் வரை கண்டாங்கி சேலை கட்டி, எவ்வளவு நேரம் ஆடினாலும் விரசமின்றி கரகம் ஆடுவார்கள். சினிமா வந்த பிறகே கரககாட்டத்திற்கான ஆடை குறைந்தது. இதில் பாரம்பரிய முறையினை விடாமல் ஆடுகிற எங்களைப்போன்ற கலைஞர்களையும் தவறாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையால், கரகாட்டத்திற்கான உடைகள் குறைந்த பிறகு, உண்மையான பாரம்பரியக் கலைஞர்கள் விலகிவிட்டோம். தமிழகத்தில் பாரம்பரியக் கலைஞர்கள் தற்போது 8 பேர் மட்டுமே இருக்கின்றனர்.
கரகாட்டக் கலையை ஏளனப்படுத்துபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புறேன், சினிமாவுக்காக ஆடுவதெல்லாம் கரகாட்டமே கிடையாது. உண்மையான கரகாட்டக் கலையும், அதன் கலைஞர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்தக் கலையின் உண்மையான வடிவம் அழிவை நோக்கி நகர்கிறது.ஒரு கலை அழியுதுன்னா அதோட சேர்த்து ஒரு வரலாறு, ஒரு அடையாளம், ஒரு வாழ்க்கை முறையும் சேர்ந்தே அழியுது’’ என்றவாறு விடைபெற்றார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
