×

கிராமப்புற மாணவர்களுக்கு இலவச நடனப் பயிற்சி அளிக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

பரதநாட்டியக் கலைஞர், நாடகக் கலைஞர், நடன ஆசிரியர், களரிப் பயிற்சி பெற்றவர், தனியார் வங்கிப் பணியாளர் என பல்வேறு விருதுகள் பெற்றவர்… இவை அனைத்திற்கும் சொந்தக்காரர் சென்னை திருவான்மியூரை சேர்ந்த நிவேதிதா ராகவன். ‘‘சிறு வயதிலேயே எனக்கு நடனம் மேல் தனி ஈடுபாடு இருந்தது. அதை புரிந்துகொண்ட என் பெற்றோர் என்னை கலைமாமணி டாக்டர் லட்சுமி ராமசாமி அவர்களின் முத்ராலயா நாட்டியப் பள்ளியில் நடனப் பயிற்சிக்காக சேர்த்தனர். அப்போது எனக்கு ஐந்து வயது. இன்று வரையும் என் குருதான் என்னுடைய மிகப்பெரிய ஆளுமையாக இருந்து வருகிறார். பள்ளியில் நடைபெறும் நடனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் பெற்றிருக்கிறேன்.

10 முதல் 14 வயதுடைய குழந்தைகளின் கலைப் பயணத்தில் சிறந்து விளங்கும் இளம் நடனக் கலைஞர்களுக்கு கலாச்சார அமைச்சகத்தால் வழங்கப்படும் ஜூனியர் உதவித் தொகையினையும் நான் பெற்றிருக்கிறேன். அதற்கான தனிப்பட்ட பாடத்திட்டத்தை என் குரு உருவாக்கினார். அதில் இலக்கியம், அடவு, பரதநாட்டிய மார்க்கம், ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், பதங்கள், தில்லானா அனைத்தும் உள்ளடக்கி இருந்தது. இந்த உதவித் தொகை என் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை உருவாக்கியது. நான் 8ம் வகுப்பு படித்த போது, பரதநாட்டிய அளவில் கற்பிக்கப்படும் பாடங்களை படிக்கவும், தன்னம்பிக்கைக் கொள்ளவும் உதவியது.

பரதநாட்டியத்தில் ஓர் முக்கிய வேடத்தில் நடிக்கும் போது அது நம்முள் இருக்கும் மன இறுக்கம் அனைத்தையும் மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. அதுவே கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக இருந்தால், ஒரே நேரத்தில் பல விஷயங்களை நடனத்தில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அப்படித்தான் எனக்கு கிடைத்த குரு, கடவுள் எனக்கு கொடுத்த வரம். என்னுடைய தாள உணர்வு, வேகம், திறமை அனைத்தையும் கவனித்து அதற்கான ஊக்கமும் எனக்கு கொடுத்தார்’’ என்றவர் இளங்கலையில் வணிகவியல் துறையை தேர்வு செய்து படித்துள்ளார்.

‘‘எனக்கு பரதம் மேல் ஆர்வம் இருந்தாலும், வணிகவியலை தேர்வு செய்ய முக்கிய காரணம், நிதி நிர்வாகம். திட்டமிடல், நிதிக்கொள்கை வகுத்தல், திட்ட அறிக்கை தயாரித்தல், தொழிலகங்களுக்கு சாதகமான சூழலை ஆராய்தல் ஆகிய முக்கியப் பணிகள் இப்படிப்பில் அடங்கும். அதை மனதில் கொண்டு, அடுத்து சி.ஏ. தேர்வை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டேன்.

முதல் தேர்விலேயே வெற்றிக் கிடைத்தது. ஒரு பட்டயக் கணக்காளராக தகுதி பெற்றவுடன், பெங்களூரில் உள்ள பன்னாட்டு வங்கியில் பணியும் கிடைத்தது. வாழ்க்கை என்பது சீரான பயணம் கிடையாது. பல மேடு பள்ளங்களை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை புரிந்து கொண்டு பயணித்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும். எனக்கும் வாழ்க்கைப் பயணம் பல பாடங்களை கற்றத் தந்துள்ளது. அந்த அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டலாக மாற்ற விரும்பினேன்.

ஒரு கலைஞராக நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் படைப்பாற்றல் மிக்கவராக இருக்க வேண்டும். பொறுமை அவசியம். கலையை மனதார நேசித்தால், நம் வாழ்வின் ஒரு பகுதியாக அது மாறிவிடும். பரதநாட்டிய நடனம் ஒரு தவம் போன்றது. ஒரே நாளில் பெரிய நடனக் கலைஞராக மாறிவிட மாட்டோம் என்பதை இன்றைய மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் இந்தக் கலை பல தலைமுறைகளாக தொடர்ந்து பயணிக்கும். அதற்கு அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும். படிப்பு, நடனம் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வது சிரமமாகத் தான் இருந்தது. ஆனால், எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட நேரம் ஒதுக்கினேன். அது தான் இன்று ஒரு நடன ஆசிரியராக மட்டுமில்லாமல் வங்கிப் பணியாளராகவும் என்னை இயங்க வைத்திருக்கிறது’’ என்று கூறும் நிவேதிதா, பாரம்பரிய நடனங்களை அனைவருக்கும் ஊக்குவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

‘‘பள்ளிப் பாடத்திட்டங்களில் வரும் ஆண்டுகளில் இலவச பரதநாட்டிய வகுப்புகள் எடுத்தால், எதிர்காலத்தில் புதிய கலைஞர்கள் உருவாக வாய்ப்பு அதிகமாகும். கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச நடன வகுப்புகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உள்ளது. தற்போது நான் பணியாற்றி வருவதால், அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை. வருங்காலங்களில் அதனை கண்டிப்பாக செயல்படுத்துவேன். சமூக ஊடகத்தில் இணைய தளங்கள் மூலம் இலவசமாக நடனம் பயிற்றுவிக்கும் திட்டமும் உள்ளது’’ என்றவர், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பி-கிரேடு கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்

Tags : Kungumam ,Nivedita Raghavan ,Thiruvanmiyur, Chennai ,
× RELATED குங்குமப்பூவே… கொஞ்சு புறாவே!