×

தற்சார்பு வாழ்க்கையே தன்னிறைவான வாழ்க்கை!

நன்றி குங்குமம் தோழி

ஒருவருக்கான அடிப்படைத் தேவைகளே பிற்காலத்தில் அவர்களின் தொழிலாக மாறி வருகிறது. அந்த வரிசையில் தன் குழந்தைகளுக்காக வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்த்தவர், தற்போது அதையே மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறார். ‘வானகா பசுமையகம்’ என்ற பெயரில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த நீலாவதி.‘‘செங்கல்பட்டு பக்கத்தில் மதுராந்தகம் கிராமத்தில்தான் நான் பிறந்தேன்.

என்னுடைய ஐந்து வயதில் அப்பாவிற்கு சென்னையில் வேலை மாற்றமானதால், நாங்க சென்னைக்கு வந்தோம். நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது அப்பா காலமானார். எனக்கு இரு சகோதரர்கள். எங்க மூவரையும் அம்மாதான் வீட்டு வேலை செய்து படிக்க வைத்தார். என் மூத்த சகோதரர் மத்திய அரசு ஊழியராக பணியாற்றுகிறார். இளையவர் பொறியியல் பட்டதாரி. அம்மா படிக்கவில்லை என்பதால் எங்க மூவரையும் நன்றாக படிக்க வைத்தார்.

நான் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். இறுதியாண்டு தேர்வின் போது, மருத்துவ கம்பெனி ஒன்றில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். ஆயுர்வேத மருத்துவ தர கட்டுப்பாடு துறையில் வேலை கிடைத்தது. ஆறு வருடத்தில் அந்த துறையில் எனக்கு பணி உயர்வும் கிடைத்து, நல்ல சம்பளம் பெற்று வந்தேன். அப்போது திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளை வீட்டில் என்னை வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னதால், நானும் என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்’’ என்றவர், வானகா பசுமையகம் குறித்து பகிர்ந்தார்.

‘‘கொரோனோ என் குழந்தைகளுக்கு பாதிக்காமல் இருக்க வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். அப்ேபாது என் பாட்டி வேலூர் முள் கத்தரி செடியினை கொடுத்து வளர்க்க சொன்னார். சாதாரணமான ெதாட்டியில் காய்கறி வளருமான்னு முதலில் நான் சந்தேகப்பட்டேன். ஆனால், நிறைய கத்தரிக்காய் காய்த்தது. சுவையும் அலாதியாக இருந்தது. அதன் பிறகு நான் நாட்டுக் காய்கறியின் விதைகள் குறித்த தேடலில் ஈடுபட ஆரம்பித்தேன். ஒவ்வொரு காய்கறிகளையும் பார்த்து பார்த்து வாங்கி வளர்த்தேன்.

அதன் விதைகளை மற்றவர்களுக்கும் கொடுத்தேன். பாரம்பரிய விதைகளுக்கான குழுவில் இணைந்தேன். பல ஊர்களில் உள்ள பாரம்பரிய விதைகள் எனக்கு கிடைத்தது. 260க்கும் மேற்பட்ட காய்கறி, கிழங்கு வகை செடிகளை என்னுடைய மொட்டை மாடியில் பயிர் செய்தேன். அதாவது, அவரையிலேயே பல வகை இருக்கு. சிவப்பு அவரை, கோழி அவரை, மட்டு கொம்பு அவரை, தம்பட்டை அவரை, வாள் அவரை, செடி அவரை, பட்டை அவரை என 15 வகைகள் உள்ளன.

கத்தரியில் 12 வகை உள்ளது. என்னுடைய மொட்டை மாடியில் மட்டுமில்லாமல், நிலம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் இயற்கை விவசாயம் செய்வது மட்டுமில்லாமல் அதில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டியும் உணவாக கொடுத்து வருகிறேன்பொதுவாக பலர் தங்களின் மாடித் ேதாட்டத்திற்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வார்கள். நான் அவ்வளவு எல்லாம் செலவு செய்யவில்லை. உடைந்த பக்கெட்களை அழகான தொட்டியாக மாற்றி அதில் காய்கறிகளை பயிர் செய்வேன். தோட்டக் குழுக்கள் நடத்தும் போட்டிகளில் பங்கு பெற்ற போது மண் தொட்டிகள் பரிசாக கிடைத்தது. அதையும் செடி வளர்க்க பயன்படுத்திக் கொண்டேன். அரிசி பைகளுக்குள்ளும் என் தோட்டத்தில் செடிகளை பார்க்கலாம்.

மண் பொறுத்தவரை காய்ந்த இலைகள், காய்கறி வேஸ்ட், முட்டை தோல், டீ தூள் எல்லாம் சேர்த்து மண்ணில் மக்க செய்து அதனை உரமாக பயன்படுத்துகிறேன். செடி பூ விடும் நேரத்தில் மீன் கழிவுகளை நாட்டுச் சர்க்கரை கொண்டு நொதிக்க வைத்து பயன்படுத்துவேன்.

வாழைப்பழ தோல் கொண்டும் இதனை செய்யலாம். இதன் மூலம் நிறைய காய்கள் மற்றும் பூக்கள் கிடைக்கும். கடந்த ஏழு வருடமாக நான் என் வீட்டில் மாடித்தோட்டத்தினை பராமரித்து வருகிறேன். ஒரு மாதத்திற்கு உண்டான காய்கறிகள், கீரைகள் எல்லாமே நான் இதில் இருந்து தான் பயன்படுத்திக் கொள்கிறேன். தோட்டத்தில் விளையாத காய்கறிகளை மட்டும்தான் கடைகளில் வாங்குவோம்.

மேலும், காய்கறிகளில் இருந்து விதைகளை சேகரித்து அதனை விற்பனைக்கு கொடுத்து வருகிறேன். மாடித் தோட்டத்தினை நம்முடைய பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல் அதனை ஒரு தொழிலாகவும் மாற்ற முடியும். மூலிகை கீரைகள், தோட்டப் பயிற்சிகளின் விதைகள், செடிகளை பதியம் போட்டு நாற்றுகளாக விற்பனை செய்யும் போது கணிசமான லாபம் பார்க்க முடியும் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தாலே அது சார்ந்த விஷயங்கள் எல்லாம் சங்கிலித் தொடர் போல் நம்மிடம் வந்து சேரும். நாங்க எங்க நிலத்தில் இயற்கை விவசாயம் மட்டுமில்லாமல், நாட்டு மரபு ரக விதைகள் மட்டுமே பயிர் செய்கிறோம்.

விதை முதல் விதை வரை என்ற ேநாக்கத்தில் வானகா பசுமையகம் இயங்குகிறது. அதாவது, மரபு ரக விதைகளை கொண்டு காய்கறிகளை விளைவிக்கிறோம், அதே விதைகளை மற்றவர்களுக்கு கொடுக்கிறோம். தரமான உணவினை சாப்பிடுவதால், ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க வழிவகுக்க முடியும். காய்கறிகளை தொடர்ந்து தக்காளி, பச்சை மிளகாய், பாரம்பரிய அரிசிகளையும் விளைச்சல் செய்ய இருக்கிறோம்’’ என்றவர், தான் தயாரிக்கும் மதிப்புக்கூட்டும் உணவுப் பொருட்கள் குறித்து விவரித்தார்.

‘‘பிரண்டை, முடக்கத்தான், தூதுவளை, வாதநாராயண கீரை, கல்யாண முருங்கை, அம்மன் பச்சரிசி போன்றவற்றில் இருந்து 40 வகையான பொடிகளை தயாரிக்கிறேன். இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம், இட்லிக்கு பொடியாகவும் சேர்த்து சாப்பிடலாம். பிரண்டை, புதினா, வல்லாரை, புளிச்சக்கீரையில் தொக்கு வகைகள், சத்து மாவு உருண்டைகள், கஞ்சி மிக்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் மட்டுமில்லாமல் கூந்தல் தைலம், குளியல் பொடி, சீயக்காய் அரப்பு பொடி, மூட்டு தைலம் என மூலிகைகளை கொண்டு என்னவெல்லாம் தயாரிக்க முடியுமோ அவற்றை தயாரித்து தருகிறோம்.

மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் குடும்பத்தில் ஒரு சிலர் இது அவசியமா என்று கேட்பார்கள். ஆனால், அதை எல்லாம் கடந்து நஞ்சில்லாத காய்கறி, கீரைகளை நாமே விளைவித்து சாப்பிடும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. உடலுக்கும், மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதை உணர முடியும். தற்சார்பு வாழ்க்கையே தன்னிறைவான வாழ்க்கை. அதுவே நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறந்தது’’ என்றவர் இதற்கான பயிற்சிகளும் அளித்து வருகிறார்.

செய்தி: திலகவதி

படங்கள்: கவுதம்

Tags : Kumkumam ,Wanaka Greenery'… ,
× RELATED குங்குமப்பூவே… கொஞ்சு புறாவே!