ஊட்டி: சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ரோஜா பூங்கா நர்சரியில் ‘ரோஜா கட்டிங்’(செடிகள்) தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு செல்கின்றனர்.
இவர்கள், இங்குள்ள மலர்களை கண்டு ரசிப்பதுடன், தங்களது வீட்டு தோட்டங்களில் மலர் செடிகளை வளர்க்க, மலர் செடிகளின் விதைகள் மற்றும் கிழங்குகள் ஆகியவைகளை வாங்கிச் செல்கின்றனர். இதேபோல், ரோஜா பூங்காவிற்கு சென்று, பல்வேறு வகையான ரோஜா மலர்களை கண்டு ரசிப்பதுடன் அவைகளின் கட்டிங்குகளை (ரோஜா மொட்டு செடி) வாங்கிச் செல்கின்றனர். இதற்காக, தோட்டக்கலைத்துறை ஆண்டுதோறும் பல ஆயிரம் ரோஜா செடிகளை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் சீசன் முடிந்த நிலையில், பலர் ரோஜா நர்சரியில் வளர்க்கப்பட்ட ரோஜா செடிகளை வாங்கிச்சென்ற நிலையில், தற்போது முதல் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக பல ஆயிரம் ரோஜா செடிகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
