×

வருமானத்தை மறைத்ததால் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை : ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஜூன் 30ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கின் பிண்ணனி

நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விஜய் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி முன்பு நடந்து முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்த நிலையில் இன்று நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி வழங்கிய தீர்ப்பில், ” விஜய், வருமானத்தை மறைத்த காரணத்தால் அவருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தான் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது. விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை.அபராதம் தொடர்பாக வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் தரப்பில் அணுகியுள்ளனர். மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னர்தான், வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது. கால வரம்பை தவிர்த்து எஞ்சிய அம்சங்கள் தொடர்பாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (appellate authority) விஜய் அணுகலாம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vijay ,iCourt ,Chennai ,Chennai High Court ,Income Tax Department ,
× RELATED ரூ.5 முதல் ரூ.40,000 வரை.. மராட்டியத்தில்...