×

பெங்களூரு அருகே தனியார் பேருந்தில் தீ விபத்து: பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது!

பெங்களூரு: பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

துமகுரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ள ஹனுமந்தபுரா கேட் அருகே அதிகாலை 3 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதால் அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். பின்னர் நெலமங்கலா போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் ஓட்டுநர் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும், பேருந்தின் லக்கேஜ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாயின.

சமீபகாலமாக கர்நாடகாவில் இது போன்ற பேருந்து தீ விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவிலிருந்து ராய்ச்சூர் சென்ற பேருந்து அனந்தபுரா அருகே தீப்பிடித்ததும், அதற்கு முன்னதாக கோகர்ணா சென்ற சீபர்ட் பேருந்து தீ விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நிகழ்ந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாக நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BANGALORE ,Nelamanga ,Bangalur-Tumaguru National Highway ,Tumaguru ,
× RELATED சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்:...