மாஸ்கோ: கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு முழுசுதந்திரம் உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதன் அடிப்படையில் இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், தனது எக்ஸ் பதிவில், ‘ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. முந்தைய காலங்களிலும் பிற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியுள்ளது. இதில் புதிதாக எதுவும் இல்லை. ரஷ்யா ஒன்றும் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஒரே நாடு கிடையாது என்பது எங்களுக்கு தெரியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
