கொழும்பு: இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது. இலங்கை கடல்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை தாக்குதல் நடத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வௌியிட்ட அறிவிப்பில், ‘2026 ஜனவரி 26ம் தேதி இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் தாக்கியதாக வரும் ஊடக செய்திகளில் உண்மையில்லை.
இதுபோன்ற எந்த தாக்குதல்களையும் இந்திய கடற்படையோ அல்லது இந்திய கடலோர காவல்படையோ நடத்தவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்தி உள்ளோம். மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறைகளை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. எந்தஒரு சூழலிலும் வன்முறையை பயன்படுத்த கூடாது எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
