லாகூர்: 20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐசிசி ஆடவர் டி.20 உலக கோப்பை தொடர் வரும் 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் `சி’ பிரிவில் இடம்பெற்றிருந்த வங்கதேசம் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்ததால் அதிரடியாக நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்கு ஆதரவாகவும் பிப்.15ம் தேதி கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் அபராதம் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
இதுபற்றி ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) முன்னாள் தலைவரான எஹ்சான் மணி கூறுகையில், “அரசு உத்தரவுகளை பாகிஸ்தான் பின்பற்றினால், எந்தத் தடையும் விதிக்க முடியாது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை ஆட இந்தியா மறுத்ததன் அடிப்படையே இதுதான். இரட்டை நிலைப்பாடு கூடாது. பிரச்னையைச் சமாளிக்காமல், ஐசிசி. ஒரு பார்வையாளராகவே நின்றது துரதிர்ஷ்டவசமானது, என தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக போட்டி புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் டி.20 அணியின் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில், “நிச்சயமாக நாங்கள் இலங்கைக்கு செல்வோம். ஆனால் இது எங்கள் முடிவு அல்ல. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அரசு மற்றும் பிசிபி தலைவர் என்ன கட்டளையிடுகிறார்களோ, அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதன்பிறகே செல்வோம், அதைச் செய்வோம்’’ என்று தெரிவித்தார்.
ரூ.2289 கோடி வருவாய் இழப்பு அபாயம்
உலக கோப்பை தொடர் என்றால் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு தான் பைனலை விட எதிர்பார்ப்பு அதிகம். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். பாகிஸ்தான் உலக கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ந்து அடி வாங்கினாலும் கூட இரு அணிகள் மோதும் போட்டிக்கு மவுசு குறையவில்லை. 2023-2027ம் ஆண்டு வரை ஐசிசி தொடர்களின் ஒளிபரப்பு உரிமம் சுமார் ரூ.27,465 கோடியாகும். இதில் 40 சதவீதம் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மூலம் கிடைக்கும். இந்தியா -பாகிஸ்தான் மோதும் ஒரு போட்டிக்கு மட்டும் ரூ.2289 கோடி வருவாய் கிடைக்கும். பாகிஸ்தான் இந்த போட்டியை புறக்கணித்தால் ஜியோ ஸ்டார் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். இதனால் அந்நிறுவனம் ஐசிசிக்கு பணம் கொடுப்பது குறையும், ஒளிபரப்பு உரிமை தொகையை குறைக்க வலியுறுத்தும்.
`அந்தர் பல்டி’ அப்ரிடி
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தனது எக்ஸ்தள பதிவில், “அரசியல் கதவுகளை மூடும்போது, கிரிக்கெட் அவற்றை திறக்கும் என்று நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாதது வருந்தத்தக்கது. இருப்பினும், எனது அரசாங்கத்தின் முடிவை நான் ஆதரிக்கிறேன். ஐ.சி.சிக்கு இது ஒரு முக்கியமான தருணம். வெறும் அறிக்கைகள் அல்லாமல், முடிவுகள் மூலம் அது நடுநிலையானது, சுதந்திரமானது மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நியாயமானது என்பதை நிரூபிக்க வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணித்தபோது, அரசியலையும் கிரிக்கெட்டையும் ஒருபோதும் கலக்கக் கூடாது என தெரிவித்திருந்த அப்ரிடி, தற்போது மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, தனக்கு வந்தால் ரத்தம் என்பதுபோல் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
