×

ஆஸி ஓபன் டென்னிஸ்: ரைபகினா சாம்பியன்; நம்பர் 1 வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி அசத்தல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நம்பர்-1 வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி எலினா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றார். இவ்வெற்றி மூலம் 2023ம் ஆண்டு தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டார். உலகின் முன்னணி கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ், மெல்போர்ன் நகரில் நடக்கிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று பிற்பகல் நடந்தது. உலகின் நம்பர்-1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவும், 5ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினாவும் மோதினர்.

சபலென்காவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் செட்டை 4-6 என ரைபகினா கைப்பற்றினார். 2வது செட் ஆட்டத்தில் சபலென்காவின் சர்வீஸ் அனல் பறந்தது. இதில், 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் ஆட்டத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இறுதியில் 4-6 என எலினா ரைபகினா வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றார். இதற்கு முன் 2023ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் பைனலில் எலினா ரைபகினாவை வீழ்த்தி, சபலென்கா சாம்பியன் ஆகியிருந்தார். அந்த தோல்விக்கு நேற்றைய தினம் பழி தீர்த்து, சாம்பியன் பட்டத்தை ரைபகினா கைப்பற்றியுள்ளார்.

இதேபோல், மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில், மெர்டென்ஸ் (பெல்ஜியம்)-ஜாங் (சீனா) இணை, அனா டேலிலினா (கஜகஸ்தான்)-குருனிக் (செர்பியா) இணையை 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று, கோப்பையை வென்றனர். ஆடவர் இரட்டையர் இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய ஜோடியான மார்க் போல்மன்ஸ்-ஜேசன் குப்லரை 6-7 (4-7), 4-6 என்ற நேர் செட் கணக்கில் கிறிஸ்டியன் ஹாரிசன் (ஐக்கிய நாடுகள்)- நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) ஜோடி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

* அல்காரஸ், ஜோகோவிச் மகுடம் சூட்டுவது யார்? இன்று அனல் பறக்கும் பைனல்
ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி இன்று (1ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. உலகின் 4ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிசும், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும் மோதுகின்றனர். அரையிறுதி போட்டியில், உலகின் 2ம் நிலை வீரரான நடப்பு சாம்பியன் சின்னரை வீழ்த்தி, ஜோகோவிச் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். அதிக வயதுடைய (38) வீரராக பைனலில் ஆடும் அவர், இப்போட்டியில் வென்றால், 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைப்பார். அத்துடன் நம்பர்-1 இடத்திற்கு முன்னேறுவார்.

அதேவேளையில், மற்றொரு அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஜெர்மனை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தி, பைனலுக்குள் அல்காரஸ் நுழைந்துள்ளார். இதுவரை நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் மிக நீண்டநேரமாக 5.27 மணி நேரம் நடந்த இப்போட்டியில் அல்காரஸ் வென்றார். 5 செட்களிலும் கடும் சவால் அளித்த ஸ்வெரெவ், ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். நட்சத்திர வீரர்களான ஜோகோவிச்-அல்காரஸ் மோதும் இந்த இறுதி போட்டியின் ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 38 வயது கொண்ட அனுபவ வீரருக்கும், 22 வயது கொண்ட துடிப்பான இளம் வீரருக்கும் இடையே நடக்கும் இப்போட்டியில் வென்று, மகுடம் சூட்டப்போவது யார்? என்ற பரபரப்பு டென்னிஸ் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது. இதற்கு இன்று மாலை விடை கிடைத்துவிடும்.

Tags : Aussie Open Tennis ,Rybakina ,Sabalenka ,Melbourne ,Elina Rybakina ,Australian Open women's ,Grand Slam ,Australian Open… ,
× RELATED சாம்பியன்ஸ் டிராபியின் போது ஐசிசி...