×

பிரச்னைகளை தீர்க்க மூவர் குழு அமைச்சர் அறிவிப்பு: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர் ஆகியோருடன் இருமுறை நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் 37வது நாளாக சென்னை டிபிஐ வளாகம் முன் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதனடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப் பிரச்னை சார்ந்த முடிவு எடுக்கப்படும். போராட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர்கள் நலன்கருதி பள்ளிக்கு தொடர்ந்து சென்று கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும், மொத்தமுள்ள இடைநிலை ஆசிரியர்களில் பணிகளுக்கு செல்லாமல் இருக்கின்ற 5,781 ஆசிரியர்களையும் கற்பித்தல் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலர் ராபர்ட் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ அமைச்சர் கோரிக்கையை ஏற்றும், தமிழக அரசு மற்றும் முதல்வர் மீது நம்பிக்கை வைத்தும், மாணவர்கள் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல்நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Secondary Registered Senior Teachers' Association ,SSTA ,School Education Department ,
× RELATED உத்திரமேரூர் அருகே 63 நாயன்மார்கள்...