×

உத்திரமேரூர் அருகே 63 நாயன்மார்கள் வீதியுலா உற்சவம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

 

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பட்டுவதனாம்பிகை உடனுறை  பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா உற்சவம் கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பட்டுவதனாம்பிகை உடனுறை  பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். 14 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கடந்த 29ம் தேதி விமரிசையாக நடந்தது. இதனைத்தொடர்ந்து, 9ம் நாளான நேற்று 63 நாயன்மார்கள் வீதியுலா மகா உற்சவம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக  பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோயிலில் இருந்து புறப்பட்ட பிரம்மபுரீஸ்வரருடன், அம்பாள், விநாயகர், முருகன் உட்பட 63 நாயன்மார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வீதி எங்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர், நீர்மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் போது பாண்டிச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில், பெருநகர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Tags : 63 Nayanmargal Veedhiyula Utsavam ,Uthiramerur ,Pattuvanambika Udanurai ,Brahmapureeswarar temple ,Thaipusam festival ,
× RELATED தற்காலிக கொடி கம்பம் நடுவதற்கு...