×

இந்த வார விசேஷங்கள்

31.1.2026 – சனி
எம்பார் திருநட்சத்திரம்

ராமானுஜருடைய சீடர்கள் இருவருக்கு ராமானுஜருடைய பெயரே சூட்டப்பட்டது. ஒருவர் ராமானுஜருடைய சிறிய தாயின் மகனான கோவிந்தபட்டர். இன்னொருவர் வடக்கே இருந்து சாஸ்திர தர்க்கத்திற்காக வந்தவர். கோவிந்த பட்டருக்கு எம்பெருமானார் என்கின்ற பெயர் சூட்டப்பட்டவுடன் அது பெயர் குழப்பத்தைத் தரும் என்பதால் தன்னுடைய பெயரை எம்பார் என்று சுருக்கிக்கொண்டார். ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் மழலை மங்கலம் என்ற ஊரில், தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கமல நயனப்பட்டருக்கும் ஸ்ரீதேவி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இந்த ஊர் இப்பொழுது மதுர மங்கலம் என்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரையும் தன் உயிர்போல் நேசிக்கும் உத்தம குணம் இவருக்கு உண்டு. ஒரு நாள் வேலிக்கு அருகே புரண்டு கொண்டிருந்த பாம்பின் வாயில் ஏதோ செய்தார். பிறகு குளித்து விட்டு வந்தார். இந்தக் காட்சியைக் கண்ட எம்பெருமானார், இதைப் பற்றி விசாரிக்க, பாம்பின் வாயில் முள் சிக்கி அவஸ்தை பட்டுக் கொண்டிருந்ததையும் அதை தாம் நீக்கியதையும் கூறினார். இதை கேட்ட எம்பெருமானார், இவரின் ஜீவ காருண்யத்தை எண்ணிப் பூரித்தார். இந்த மகானின் ஜென்ம நட்சத்திரத்தை வைணவர்கள் தங்கள் இல்லங்களிலும் பெரும் பாலான பெருமாள் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

31.1.2026 – சனி
மாம்பலம் கோதண்டராமர் தெப்பம்

மேற்கு மாம்பலம், சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மாம்பலம் கோதண்டராமர் கோயில். இந்தத் திருக்கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை யானது. இங்கு ஐந்து நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

1.2.2026 – ஞாயிறு
மதுரை மீனாட்சி அம்மன் தெப்பம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பம் இன்று நடைபெறுகிறது. வருடந்தோறும் தை மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் 12-ஆம் நாள் திருவிழாவாக இன்று நடைபெறுகிறது அதிகாலை சுவாமியும் அம்மனும் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருள்வர் அன்றைய தினம் தெப்பத்தில் எழுந்தருளும் சுவாமியும் அம்மனும் காலையில் இரண்டு முறையும் இரவு ஒரு முறையும் ஆக மூன்று முறை தெப்பத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

1.2.2026 – ஞாயிறு
மயிலை கபாலீஸ்வரர் கோயில் தெப்பம்

சென்னை மாநகரில், பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு. இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில், திருக்குளத்தில் பவனி வருவார்கள். கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வரும் காட்சி கண் கொள்ளா காட்சியாக அமையும்.

1.2.2026 – ஞாயிறு
திருச்சேறை சாரநாதர் தேர் உற்சவம்

தைப்பூசம் கொண்டாடப்படும் வைணவத்தலங்களில் ஒன்று திருச்சேறை. திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 15-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். திருச்சேறை சாரநாதர் கோயில் தேரோற்சவம், பொதுவாக தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது; இந்த விழாவில் சாரநாதப் பெருமாள் தனது பட்டத்தரசிகளான ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி ஆகிய ஐந்து தேவியர்களுடன் எழுந்தருளி, வீதி உலா வருவார், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து பெருமாளை வழிபடுவார்கள்.

1.2.2026 – ஞாயிறு
திரிபுரசுந்தரி ஜெயந்தி

லலிதை, ராஜராஜேஸ்வரி, ஸ்ரீவித்யா, பாலா திரிபுரசுந்தரி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் திரிபுரசுந்தரி பத்து மகா வித்யாக்களில் முதன்மையானவர், ஸ்ரீவித்யா வழிபாட்டின் மையமாகத் திகழ்கிறார் தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். மாயையின் வடிவமானதால், அவளே, மகாமாயையும் ஆகின்றாள். திரிபுரசுந்தரி ஜெயந்தி பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது, இந்நாளில் அம்பிகையை வழிபடுவது மகிழ்ச்சி, செல்வம், ஞானம், அமைதி மற்றும் அபரிமித பலன்களைத் தரும். சூரியனால் ஏற்படும் கிரக தோஷங்களை நீக்கிக்கொள்ள திரிபுர சுந்தரியை வழிபட வேண்டும்.

3.2.2026 – செவ்வாய்
திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்

ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் நான்காவது ஆழ்வார் திருமழிசை ஆழ்வார். பார்கவ மகரிஷிக்குப் பிறந்தவர். திருச்சந்தவிருத்தம், நான் முகன் திருவந்தாதி என்ற இரண்டு பிரபந்தங்களை எழுதியவர். யோகீஸ்வரர். தமிழால் பெருமானை எழுப்பி தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றவர். அப்படி அவர் சென்ற இடம் தான் காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கக்கூடிய ஓரிருக்கை. கிளம்பிய பெருமாள் சொன்ன வண்ணம் செய்த பெருமாள். திருமழிசை ஆழ்வார் அவதார ஸ்தலம் சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்னும் ஊர். பத்து நாட்கள் அந்த ஊரில் திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடைபெறும்.

5.2.2026 – வியாழன்
சண்டேச நாயனார் குருபூஜை

சைவ சமய நாயன்மார் 63பேர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. அதில் சண்டேஸ்வர நாயனார் தனிச்சிறப்பு மிக்கவர். சிவன் கோயில்களில் கர்பகிரகத்தின் இடப்புறமாக கோமுகி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே சண்டிகே சுவரருக்கு சந்நதி அமைக்கப்படுகிறது. பொதுவாக கோமு கிக்கும், கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் இடையே அமைக்கப்படுகிறது. அவர் அவதாரத்தலம் கும்பகோணம் அருகே திரு வெள்ளியங்குடி என்ற ஊருக்கு பக்கத்தில் உள்ள சேங்கனூர். (சேய்ஞலூர்) எனும் ஊரில் அந்தணரான எச்சத்தன் – பவித்திரை தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். இவர் சிவபெருமானுக்கு பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே அதற்கு இடையூறு செய்தார். அதனால் கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார். சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசு வர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.

6.2.2026 – வெள்ளி
கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்

சுவாமி ராமானுஜரின் சீடர். மிகச் சிறந்த பண்டிதர். அவர் அவதாரம் செய்தது தை மாதம் ஹஸ்த நட்சத்திரம். பிறந்த ஊர் சென்னைக்கு அருகே கூரம் எனும் ஊர். ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீபாஷ்ய பெருவுரையை தனது திருக்கரத்தால், ஸ்ரீ ராமானுஜர் சொல்லச் சொல்ல எழுதிய மகாவித்வான். தன்னுடைய செல்வங்கள் எல்லாவற்றையும் ஏழைகளுக்குத் தந்து விட்டு, ஸ்ரீ ராமானுஜரோடு திருவரங்கம் சென்று வாழ்ந்து வந்தார். முக்குறும்பு (ஜாதி, பணம், கல்வி) அறுத்தவர். அவர் ஒரு முறை நம்மாழ்வாரின் பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கச் சென்றார். ஆழ்வார் பாசுரத்திலேயே மூழ்கி கண்களில் கண்ணீர் விட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தம் எதிரிலேயே இருந்த அன்பர்களையும் கண்ணீர் விடச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீ ராமானுஜர் ‘‘நீ ஆழ்வாரை முற்றிலும் உணர்ந்தவன். ஆழ்வார் நிலையில் இருப்பவன் என்பதால் இனி நீ கூரேசன் கிடையாது. கூரத்து ஆழ்வான்” என்று திருநாமம் இட்டு அழைத்தார். அவர் திருநட்சத்திரம் இன்று.

6.2.2026 – வெள்ளி
தேரழந்தூர் பெருமாள் கோயில் குடமுழுக்கு

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் மயிலாடுதுறை, குத்தாலம் வட்டத்தில், அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று. சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம். திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகத் திகழ்கிறது பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்குத் துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ‘ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம். பாஞ்சராத்ர ஆகமப்படி அமைந்துள்ள இந்த ஆலயத்தில் குடமுழுக்கு விழா (மகா சம்ப்ரோட்சணம்) இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது.

Tags : Ramanujar ,Shani Embar ,Govindapatar ,Shastra ,Govinda Butter ,Emberumanaar ,
× RELATED தடைகளை அகற்றி வெற்றி தரும் தைப்பூசம்