×

இருதய ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிகை

126 – சாங்கரீ, 127 – ஸ்ரீகரீ, 128 – ஸாத்வீ, 129 – சரச் சந்த்ர நிபாநநா, 130 – சாதோதரீ, 131 – சாந்திமதீ, 132 – நிராதாரா, 133 – நிரஞ்ஜநா.
இதில் எட்டு நாமங்கள் உள்ளன. முதலில் சாங்கரீ என்கிற நாமத்தைப் பார்ப்போம். இதில் சாங்கரம் என்றால் நன்மையைச் செய்பவன் என்று பொருள். சம் கரோதி இதி சங்கராஹா… சாங்கரீ என்று பெயர். யார் நமக்கு நன்மையைச் செய்கிறானோ, அவருக்கு சங்கரன் என்று பெயர். அதனாலேயே சிவபெருமானுக்கு சங்கரன் என்றே பெயர். சங்கரனாக இருக்கக் கூடிய பெருமானுடைய சக்தி சொரூபிணீயாக இருக்கக் கூடியவளாக இருப்பதால் அவளுக்கு சாங்கரீ என்று பெயர். நன்மையை செய்பவளாக இருப்பதால் சாங்கரீ என்று பெயர். இதற்கு அடுத்த நாமா ஸ்ரீகரீ. ஸ்ரீஎன்கிற பதம் மகாலட்சுமியைத்தான் குறிக்கிறது. இதற்கு அடுத்ததாக செல்வம், ஐஸ்வர்யம் என்று பல விஷயங்களை குறிக்கிறது. மந்திர சாஸ்திரத்தில் அம்பாளினுடைய வித்யைக்கு ஸ்ரீவித்யா என்றுதான் பெயர். அப்போது இங்கு ஸ்ரீகரீ என்றால் உயர்வைச் செய்யக் கூடியவள். ஐஸ்வர்யத்தை செல்வத்தை தரக் கூடியவள். இதில் அருளும் பொருளுமாக எல்லாமுமே அடக்கமாகும்.

இதற்கு முந்தைய நாமமான சங்கர என்றால் சிவபெருமானை குறிக்குமோ, அதுபோல ஸ்ரீகர என்கிற நாமாவானது நாராயணனை, பெருமாளை குறிக்கும். மகாவிஷ்ணுவை குறிக்கும். நாராயணனுடைய சக்தி சொரூபமாக இருப்பவளும் அவள்தான். முதல் இரண்டு நாமங்களிலேயே அம்பாள்தான் சிவபெருமானாக இருக்கிறாள். அம்பாள்தான் நாராயணனாக இருக்கிறாள். ஏனெனில், வேதத்திலுள்ள நாராயண வல்லியில் பிரம்மத்தை கிருஷ்ண பிங்களம் என்று சொல்கிறது. இங்கு கிருஷ்ண என்பது பிரம்மத்தினுடைய நாராயணனுடைய சொரூபத்தையும், பிங்களம் என்பது பிரம்மத்தினுடய சிவ சொரூபத்தையும் குறிக்கும். கருணை நிறத்திலிருக்கும் நாராயணன் காருண்யத்தையும், செம்மை நிறத்திலிருக்கும் சிவன் ஞானத்தையும் குறிக்கும். அதனால், இரண்டு வகையிலும் பிரம்ம வெளிப்படுகின்றது. நாராயணனுடைய சக்தி சொரூபமாக, நாராயணனோடு அபின்னமாக இருப்பவள்.

இதற்கு முன்பே பார்த்திருக்கிறோம். அம்பாள் வேறு. விஷ்ணு வேறு அல்ல. பெருமாளுக்கு சகோதரியாக இருக்கிறாள். விஷ்ணுவினுடைய ஸ்த்ரீ சொரூபமாக அம்பாள் இருப்பதால், ஸ்ரீவைஷ்ணவத்தில் நாராயணனுக்கு என்னவெல்லாம் சொல்கிறோமோ அதெல்லாமும் அம்பாளுக்கு பொருந்தும். அதேபோல, சைவத்தில் சொல்லக்கூடிய எல்லாமுமே அம்பாளுக்கு பொருந்தும். அதனால், அம்பாள் என்கிற நிலையானது நமக்கு பரப்பிரம்ம நிலையை காண்பித்துக் கொடுக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஸாத்வீ என்கிற நாமம் வருகிறது. நாம் அத்யாத்ம வழியில் இருப்போரை, சத்வ குணத்தோடு இருப்பவரை சாது என்று குறிப்பிடுவோம். இந்த சாது என்பது ஆணை குறிக்கக் கூடிய வார்த்தை. இந்த சாது என்கிற வார்த்தைக்கு பெண்பால் வார்த்தையே ஸாத்வீ என்பதாகும். உயர்ந்த அனுஷ்டானங்கள், சுத்த சத்வ குணங்கள் கொண்ட பெண்ணை குறிப்பிடும்போது ஸாத்வீ என்று குறிப்பிடுகிறோம்.

இங்கு சூட்சுமமான விஷயம் ஒன்று உண்டு. சாங்கரீயாக இருந்து சிவ சொரூபிணீயாகவும், ஸ்ரீகரீயாக இருந்து விஷ்ணு சொரூபிணீயாகவும் இருக்கிறாள் என்று பார்த்தோம். இதற்கெல்லாம் அடுத்த நாமமாக ஸாத்வீ என்று வருகிறது. இங்கு ஸாத்வீ என்ற நாமத்திலிருந்து ஒரு விஷயம் காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. அவள் சாங்கரீயாக இருக்கிறாள். ஸ்ரீகரீயாகவும் இருக்கிறாள். சாங்கரீ என்பது நன்மையைச் செய்பவள் என்று பார்த்தோம். ஸ்ரீகரீ என்பவள் நாம் விரும்பியவற்றை, உயர்ந்த ஐஸ்வர்யங்களை செல்வங்களை தருபவள் என்று பார்த்தோம். இதை வேதாந்த சாஸ்திரத்தில் ஸ்ரேயஸ், ப்ரேயஸ் என்று பிரிப்போம். ஸ்ரேயஸ் என்றால் நமக்கு நன்மை தருவது. ப்ரேயஸ் என்றால் நாம் விரும்புவது. பொதுவாக ப்ரேயஸை விரும்பாமல், ஸ்ரேயஸை நாட வேண்டுமென்று சொல்கிறோம். அம்பாளுக்கு நாம் குழந்தையாக இருப்பதால், விரும்புவதை செய்கிறாள். ஆனால், அதையும் நமக்கு நன்மையாகும்படி செய்கிறாள். இப்படி ஒரே நேரத்தில் காருண்யமாகவும், ஞானமாகவும் இருக்கிறாள்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி ஓரிடத்தில் நீங்கள் ஒரு கடவுளை விரும்புகிறீர்கள். ஆனால், நீங்கள் விரும்புவது nothing but your projection என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்கிறார். இப்படி ஞானத்தை இவ்வளவு கடினமாக சொன்னால் நம்மால் தாங்க முடியுமா? ஆனால், அதே ஜே.கிருஷ்ணமூர்த்தி, இன்னொரு இடத்தில் அந்த உயர்ந்த வஸ்துவை பார்க்க வேண்டுமெனில் இயற்கையை பார். அன்பைப் பார் என்றெல்லாம் பேசுகிறார். அப்போது this is the point where wisdom meets love. இப்படியாக காருண்யமும் ஞானமும் சந்திக்கக் கூடிய இடம் இதுதான்.இப்படியாக சாங்கரீ என்கிற சிவ சொரூபிணீயாக இருந்து விட்டால் நம்மால் அதை தாங்கவே முடியாது. அதே சமயம் ஸ்ரீகரீயாக நாராயண சொரூபிணீயாக இருந்து காருண்யத்திலும் இருப்பதால், ஞானத்தை எய்தலாம்.

ஒரு தாயார் மருந்தை கொடுக்க வேண்டும். ஆனால், அந்தக் குழந்தை அந்த மருந்தை விரும்பும்படிக்கு பழத்திலேயோ, இனிப்பிலேயோ, சாக்லேட்டோடு சேர்த்தோ அந்த மருந்தையும் கொடுத்து, அந்தக் குழந்தையையும் எப்படி மகிழ்விக்கிறாளோ அதுபோல ஞானத்தையும் காருண்யத்தையும் மிக அழகாக சரிசமமாக அருள்கிறாள். இப்படி balance செய்வதற்கு highest decipline தேவை. அது அவளிடம் முழுமையாக இருப்பதால் அவளுக்கு ஸாத்வீ என்று பெயர். அதுவே சுத்த சத்வ சொரூபம். அப்படி சுத்த சத்வ சொரூபிணீயாக இருந்து சமப்படுத்துகிறாள். இப்படி ஸாத்வீயாக இருப்பதால்தான் அவளால் ஒரே நேரத்தில் சாங்கரீயாகவும் இருக்க முடிகின்றது. ஸ்ரீகரீயாகவும் இருக்க முடிகின்றது.

இப்போது மீண்டும் பார்ப்போம். முதலில் சொன்ன சாங்கரீ என்பது சிவ சொரூபத்தையும், ஸ்ரீகரீ என்பது விஷ்ணூ சொரூத்தை குறித்தது. ஸாத்வீ என்பது சத்வ குண பிரதானமான மகா சரஸ்வதியாக இருப்பாள். எனவே, இந்த நாமமான ஸாத்வீ என்பது பிரம்ம சொரூபத்தையும் குறிக்கிறது. இதற்கு பிறகு சரத் சந்திர நிபானன என்கிற நாமத்தைப் பார்ப்போம். இதற்கு முன்பே கூட அம்பாளின் ரூப லாவண்யத்தைப் பார்த்து விட்டோம். ஆனாலும் கூட, ஆங்காங்கு ஏதேனும் ஒருவிதத்தில் அம்பாளின் ரூப வர்ணனை வந்தபடியேதான் இருக்கும். சரத் சந்திர நிபானனா – சரத் காலத்தில் இருக்கக் கூடிய சந்திரன். ஒரு வருடத்தை நாம் ஆறு ருதுக்களாக பிரிக்கின்றோம். அதில் ஒரு ருதுவிற்கு சரத் ருது என்று பெயர். ஐப்பசி – கார்த்திகை இரண்டு மாதங்களும் சரத் ருதுவிற்குள் வரும். அம்பாளுக்கு ஆஷ்வயுஜ மாசம் (ஐப்பசி) வரும் நவராத்திரிக்கு சரண் நவராத்திரி என்று பெயர். இந்த நேரத்தில் அம்பாளை வழிபட வேண்டுமென்று தேவீ மகாத்மியத்தில் சொல்லியிருக்கிறாள்.

இந்த சரத் காலத்தில் சந்திரனை பார்த்தால், மற்ற காலத்தில் இருக்கும் சந்திரனுக்கும் சரத்கால சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியும். என்னவெனில், சரத் காலத்தில் சந்திரன் பிரகாசமாக இருக்கும். அதேநேரத்தில் சரத்கால சந்திரன் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். ஞானமாகிய பிரகாசமும், கருணையாகிய குளிர்ச்சியும் அவள் ஒருத்தியிடம்தான் சேர்ந்திருக்கிறது. அதனால் எப்போதும் அவள் முகம் பிரகாசமாக இருக்கிறது. அதனால் எப்போதும் ஞானத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள். நம்மீது கருணையோடும் இருக்கிறாள். நாம் பொதுவாகவே known field ல் இருப்பதை கொண்டு unknown ஐ சொல்வோம். ஏனெனில், அம்பாளின் முகம் நமக்குத் தெரியாது. ஆனால், சரத்கால சந்திரன் போல் இருக்கிறாள் என்றால் சட்டென்று நமக்குப் புரியும். காருண்யமும் ஞானமும் சேர்ந்தே இருப்பதால் சரத் சந்திர நிபானனா என்று பெயர். இந்த நாமத்தில் இன்னொரு சூட்சுமத்தை பார்க்கலாம்.

சரத் சந்திர நிபானனா என்றால் சந்திரனையே முகமாகக் கொண்டவள் எனில் அவள் எத்தனை பிரமாண்டமாக இருக்க வேண்டும். சென்ற நாமங்களில் சொல்லப்பட்ட பிரபஞ்சத்தை நிர்வகிப்பது மட்டுமல்ல… அவள் செய்வதெல்லாம், பிரபஞ்சமாகவே இருப்பவளும் அவள்தான். விராட் சொரூப சொரூபிணீயாக இருக்கிறாள். சந்திரன் போன்ற முகம் உடையவள் என்றாலும் கூட, சூரியனும் சந்திரனும் யாருக்கு கண்களாக இருக்கிறதோ அந்த பிரம்மமே அம்பாள்தான். நாம் எவ்வளவுதான் பார்த்தாலும் கூட நம் பார்வைக்கு அப்பாற்பட்டவளாக இருக்கிறாள். நமக்காக சுருக்கிக் கொண்டு ஒரு ரூபத்தில் வந்திருக்கிறாள். அந்த முகம்தான் நமக்கு சரத் சந்திரன் போல் இருக்கிறது. அவளே இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறாள். அடுத்து இந்த ஸ்லோகத்தில் அடுத்ததாக சாதோதரீ – சாந்திமதீ என்று வருகிறது.

இப்போது பார்த்த சரத் சந்திர நிபானனா… என்கிற நாமத்திற்கு ஏன் விராட் புருஷ சொரூபத்தைச் சொன்னோம் என்பதை, இந்த சாதோதரீ – சாந்திமதீ என்கிற நாமத்திற்கு பொருள் பார்க்கும்போதுதான் தெரியும். சாதோதரி என்பதில், சாத என்றால் சூட்சுமமானது என்று அர்த்தம். உதரம் என்றால் வயிறு என்று அர்த்தம். சாதோதரி என்றல் சூட்சுமமான வயிறு அல்லது சூட்சுமமான நுண்மையான இடைப் பகுதியை உடையவள் என்று அர்த்தம். ஏற்கனவே, கேசாதி பாதாந்த வர்ணனையில் இதைப் பார்த்துள்ளோம். ஆனாலும், இந்த இடத்தில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இந்த சரத் சந்திர நிபானனா இந்தப் பிரபஞ்சமாகவே அவளிருக்கிறாள் என்று அர்த்தம். இதற்கு முந்தைய நாமங்களில் பிரபஞ்சத்தை நிர்வகிப்பவள் என்று அர்த்தம். ஆனால், இந்த நாமமானது இந்தப் பிரபஞ்சத்தையும் மீறி, பிரபஞ்சத்தையும் தாண்டி, இந்தப் பிரபஞ்சத்தையே தன்னுடைய வயிற்றுக்குள் வைத்து, இந்தப் பிரபஞ்சத்தை ஈன்றெடுக்கும் அன்னையாகவும் அவள் இருக்கிறாள். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை சூட்சுமமாக தன்னுடைய வயிற்றுக்குள் அம்பாள் வைத்துக் கொண்டிருக்கிறாள்.
(தொடரும்)

Tags : Sangaree ,Shrikari ,Sadhvi ,Sarach Chandra Nibanana ,Sadodari ,Chanthimatee ,Niratara ,Niranjana ,
× RELATED மங்கள சின்னத்தின் சூட்சும ரகசியங்கள்