×

மறுபிறவி உண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா?

?பூஜைக்குப் பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்தலாமா?
– தினேஷ்குமார், திருச்சி.

பூஜைக்குப் பயன்படுத்தியது நிர்மால்யம் என்பார்கள். அதனை மறுபடியும் பயன்படுத்துவது கிடையாது. ஆனால், நாம் எடுத்துச் சூடிக்கொள்ளலாம் சந்தனமாக இருந்தால் பூசிக்கொள்ளலாம். இறைவனுக்கு அணிவித்த ஆடைகளை அணிந்து கொள்ளலாம். இதை பெரியாழ்வார் “உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு; தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’’ என்று பாடுகின்றார். துளசி போன்ற இலைகளை (பத்ரம்) திரும்பத் திரும்பப் பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது.

?ஆன்மிகத்தால் அடையக்கூடிய அதிகப்பட்ச பலன் என்ன?
– நிவேதிதா, வேலூர்.

மன அமைதி. மனத் தெளிவு. இந்த இரண்டும் இருந்துவிட்டால், எது நல்லது எது கெட்டது என்பதைப் பிரித்துப் பார்க்க முடியும். பிரித்தறியும் ஆற்றல் வந்துவிட்டால் கெட்டதை விட்டு விலகி நல்லவற்றைப் பற்றி கொண்டு வாழ முடியும். அதற்குப் பிறகு வாழ்க்கையில் துன்பம் வருவதற்கு வழி இல்லை.

?அஷ்டமச் சனி எல்லோருக்கும் கஷ்டத்தைத் தருமா?
– ராஜாராமன், திருப்பதி.

அஷ்டமச் சனி எல்லோருக்கும் கஷ்டத்தைத் தராது. உதாரணமாக இப்பொழுது சிம்ம ராசிக்காரர்களுக்கு மீனத்தில் உள்ள சனி அஷ்டமச் சனியாகச் செயல்படும். ஆனால் சிம்ம ராசிக்கு ஆறாம் அதிபதியாகவும் சனி இருக்கிறார். ஆறுக்குரியவன் எட்டில் மறைகின்ற பொழுது, நன்மையைத் தானே செய்வார். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’’ என்று சொல்லி இருக்கிறார்கள். அடுத்து சிம்ம ராசியில் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு இருக்கின்றார். அது ஒரு பலம். குரு பெயர்ச்சி நடந்து விரய குருவாக மாறிவிட்டாலும்கூட, அவருடைய பார்வை தன்னுடைய சொந்த ராசியாகிய மீன ராசியில் விழுந்து அஷ்டமச் சனி தோஷத்தைக் கட்டுப்படுத்தும். எனவே நீங்கள் அஷ்டமச் சனி கண்டச்சனி என்றெல்லாம் அச்சப்பட வேண்டியது இல்லை. நடப்பது நாராயணன் செயல் என்று பகவான் மீது பாரத்தைப் போட்டு விட்டு விழிப்புணர்வோடு இருங்கள்.

?ஏகாதசியில் இரண்டு ஏகாதசிகள் காலண்டரில் போட்டிருப்பது போல, அமாவாசையிலும் இரண்டு அமாவாசை வருகிறதே?
– சி.வரதபெருமாள், ஆரணி.

ஆம். சர்வ அமாவாசை என்று ஒரு தினத்தையும், அதற்கு முதல் நாளில் போதாயன அமாவாசை என்றும் போட்டு இருப்பார்கள். சில குறிப்பிட்டவர்கள், போதாயன அமாவாசையை அனுஷ்டிப்பார்கள். மற்ற எல்லாருமே சர்வாமாவாசை தினத்தைத்தான் அனுஷ்டிப்பார்கள். சதுர்த்தசியோடு அமாவாசை கலந்தால், அது போதாயண அமாவாசை. முழுமையாக அமாவாசை அல்லது அதில் கொஞ்சம் பிரதமையும் சேர்ந்தால் அது பொதுப்படையான சர்வ அமாவாசை தினம்.

?இறைவனின் இருப்பைத் தெரிவிப்பது எது?
– தனுஷ், சிவகாசி.

இந்த பிரபஞ்சத்தின் விரிவுதான் இறைவனின் இருப்பை யோசிக்க வைக்கிறது. இறைவனுக்கு “அண்டா” என்று ஒரு பெயர். இதுவே அண்டம் என்கிற சொல்லால் அழைக்கப்படுகிறது. ஒரு அண்டாவில் பல்வேறு விதமான பாத்திரங்களை உள்ளே வைப்பது போல அண்டாதி அண்டங்களை எல்லாம் தம்முள் வைத்துக் கொண்டிருக்கும் பேராற்றல் உடையவன் என்பதால் இறைவனை அண்டா என்கிற சொல்லாலே விளிக்கிறார்கள். நம்முடைய விண்மீன் மண்டலத்தில் (galaxy) நமது பூமியைப் போல உள்ள கிரகங்கள். 3.2 டிரில்லியன் இருக்கின்றன. (ஒரு டிரில்லியன், 1,000,000,000,000) நம்முடைய சூரியனைப் போல 200 பில்லியன் நட்சத்திரங்கள் நாம் வாழும் விண்மீன் மண்டலத்தில் உள்ளன. இந்த விண்மீன் மண்டலத்தைப் போல 2 டிரில்லியன் விண்மீன் மண்டலங்கள் நமது பால் வீதியில் (milky way) உள்ளன. இதற்கு அப்பாலும் அண்டம் விரிந்து கிடக்கிறது. அதைத்தான் பிரம்மாண்டம் என்று மெய்ஞானிகள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். “அண்டமாம் எண் திசைக்கும் ஆதியாய் நீதியான பண்ட மாம் பரம ஜோதி” என்ற திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தை யோசித்துப் பாருங்கள். அண்டத்தின் விரிவும், ஆண்டவனின் இருப்பும் புரியும்.

?மறுபிறவி உண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

நிச்சயமாக. புனரபி ஜனனம், புனரபி மரணம் என்பதே நமது அடிப்படை சித்தாந்தம். மனிதன் கடந்த ஜென்மத்தில் தான் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலேயே இந்த ஜென்மாவில் பலனை அனுபவிக்கிறான் என்பதையே பல நூல்களும் வலியுறுத்திச் சொல்கின்றன. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து என்று கல்வி எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அதாவது ஒரு பிறவியில், தான் கற்ற கல்வி ஆனது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாது அவனுக்கு ஏழு பிறப்பிலும் கூடவே சென்று உதவும் என்பதே அக்குறளின் பொருள். அப்படி என்றால் மறுபிறவி உண்டு என்ற கூற்றினை திருவள்ளுவரே வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார் எனும்போது மறுபிறவி குறித்த சந்தேகமே வேண்டாமே.

?சுதர்சன நல்ல நேரம் என்றால் என்ன?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் சுதர்சன சக்கரத்தின் துணையோடு காரியவெற்றி காணும் நேரம் இது என சுதர்சன நல்ல நேரம் என்ற பெயரில் ஒரு அட்டவணையானது சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அன்றைய தினத்தின் சுக்ர ஹோரை காலத்தையும் இந்த அட்டவணை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் ஒரு நாளின் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என நான்கு வேளைகளிலும் ஏதேனும் ஒரு நேரத்தினை இந்த அட்டவணையில் காண முடிகிறது.

Tags : Dinesh Kumar ,Trichy ,Periyazhwar… ,
× RELATED எல்லாம் அவன் தந்தது