×

சாபங்களைப் போக்கும் இரட்டை திருப்பதி

“ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல் கெடுப்பாரும் இல்லை” என்பது பழமொழி. ராகு தசை வந்தது என்றால், ஒருவர் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும் லௌகீக ஆசைகள் திடீர் யோகம் ஏற்படும். பொதுவாக “பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்” என்ற பழமொழியும் உண்டு. அதற்கு ஏற்ப செல்வம் வரும். “கேதுவைப் போல் கெடுப்பாரும் இல்லை” என்பதன் கருத்து, கேது ஆன்மிகம் மற்றும் துறவறத்திற்கு அருகே நிற்பவர். ஒரு மனிதனுடைய பற்றற்ற நிலையை ஏற்படுத்தி, ஞானம் கொடுத்து, புற வாழ்க்கையைக் கெடுப்பார் என்பதுதான் உண்மையான தகவலாகும். ஆகவே, “ராகு மாயாவி”, “கேதுவோ மாயத் துறவி’’. ராகு ஆசையைத் தூண்டுபவர்.

கேதுவோ ஞானத்தை அருள்பவர்

பற்றற்ற நிலை ஏற்பட்டால்தான் முக்திக்கு அருகாமையில் செல்ல இயலும், பக்தியை மனதில் விதைப்பவர் கேது ஆவார். அதனால் ஒருவருடைய, ஜாதகத்திலும் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்றால், ராகு, கேது இரண்டும் ஒரே தலத்தில் அருகருகே அமைந்த இடம்தான் நவ திருப்பதி வரிசையில் எட்டு, ஒன்பது என்ற “இரட்டை திருப்பதி”. இக்கோயில் ராகு, கேது தலமாகும், இதை இரட்டை திருப்பதி என்றும் வழங்குவர். துலாவில் என்பது திருதொலைவில்லி என்றுதான் பொதுவாக அழைப்பர்.

ஆனால், இவ்விடம் மிகவும் அற்புதமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். திருப்பூளியங்குடி என்கின்ற புண்ணிய தலத்திற்கு அருகாமையில், இரட்டை திருப்பதி என்று அழைக்கப்படும் ராகு, கேதுவின் தலம் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் வயல்களும், கண்களுக்கு எட்டிய தூரம் வரை பசுமையும் நீர் ஓடைகளையும் காண்பதற்கு உன்னதமான காட்சியாகும். இங்கே வீற்றிருக்கும் திருமால் அரவிந்தலோசர்.

திருமால் விரும்பிய செந்தாமரை

ஆத்ரேய கோத்திரத்தில் ‘சுப்ரபர்’ என்ற முனிவர் தோன்றினார். இளமை வயதிலிருந்து திருமாலின் மீது மாறாத காதல் கொண்டு, எப்பொழுதும் பூசைகள் செய்து மகிழ்ந்தார். அதற்காக அவர் தாமிரபரணி வடக்கு ஆற்றங்கரை ஓரம் உள்ள தடாகத்தில் செம்மை நிறமுடைய தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். முனிவர், மலர்களிலுள்ள நறுமணத்தை நுகரக் கூடாது என்பதற்காக, முகத்துணியை அணிந்து இம்மலர்களைப் பறித்து வந்து எம்பெருமான் அரவிந்தலோசருக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்வது வழக்கம். அம்மலரில் இருக்கும் வாசம் திருமாலுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு நாள் முனிவர், குளத்தில் உள்ள தாமரை மலர்களைப் பறிக்கும் பொழுது, ஒருவர் பின் தொடர்ந்தார். யாரோ தன்னைத் தொடர்ந்து வருவதைப் போல உணர்ந்தார். யார்? என்று அறிய திரும்பி பார்த்தார். அங்கே நின்ற வரை கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார். அரவிந்தலோசர் தன் திவ்ய ஸ்வரூபத்தைக் காட்டி மகிழ்வித்தார்.

புராண செய்தி

சுப்ரபர், திருமாலின் அழகிய தரிசனத்தைக் கண்டதும், பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இறைவன், திருவடியில் சேர வேண்டும் எனில், யாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. பூஜையில் இருந்த பக்தி மணம், யாகம் செய்ய தூண்டியதால்; யாகத்திற்கான இடத்தைத் தேடிக் கண்டறிந்தார். பின்பு, அந்த நிலத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்பதினால், நிலத்தை உழுது செம்மைப் படுத்தினார். அச்சமயம், மண்ணுக்கு அடியில் ஒரு கிண்ணம் போன்ற தராசும், வில்லும் கிடைத்தது. அதனைக் கண்டு அவருடைய மனம் தெய்வீக உணர்வைப் பெற்றது. வில்லும், தராசும் கண்ணால் கண்டவர் அதை மெதுவாக, விரல்கள் தொட்டுப் பிடித்து எடுத்தார். என்ன ஆச்சரியம் அந்த வில்லும், தராசும் உரு மாறின.

குபேரன் இட்ட சாபம்

தராசு மற்றும் வில்லை முனிவர் தொட்டதும், தராசு பெண்ணாகவும், வில் ஆணாகவும் உருவம் மாறினர். அவ்விருவரும் முனிவரின் பாதங்களைத் தொட்டு வணங்கி எழுந்தனர். ஒரு வில்லும், தராசும் மனித உருவத்தில் உயிர் பெற்று எழுந்ததைக் கண்டு வியந்தவர். “நீங்கள் யார்? எதற்காக மண்ணில் புதைந்தீர்?” என்று கேட்டதும், அவ்விருவரும் கதைகூற தொடங்கினர்.

தேவலோகம்

நான் வித்தியாதரன். இவள் என் மனைவி. நாங்கள் தேவலோகத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தோம். சிறு தவறு செய்ததைக் கண்டு சீற்றம் கொண்ட குபேரன், எங்கள் இருவரையும் தராசு, வில் உருவம் கொண்டு மண்ணில் புதைந்து வாழ்வீர் எனச் சபித்தார். “எங்களுக்கு விமோசனம் இல்லையா?” என்று கேட்டதற்கு, அரவிந்தலோசர் அருளால் சுப்ரபர் என முனிவர் யாகம் செய்ய வேண்டி, நிலத்தை உழுவார், முனிவர் உங்களை கண்டு அதை எடுப்பார். அச்சமயம் அவர் கரம் பட்டதும் உங்கள் சாபம் நீங்கி விமோசனம் பெற்று மீண்டும் தேவலோகம் செல்வீர் என்று கூறினார்.

அவ்வாறே உங்களின் கரம் பட்டு எங்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது என்றுகூறி, மீண்டும் அவர் திருவடியை வணங்கி தேவலோகத்திற்குச் சென்றனர். முனிவரின் கரம் பட்டு சாபம் பெற்ற தராசு, வில்லின் பெயரால் ‘தொலைவில்லி மங்கலம்’ என்று இத்திருத்தலம் காரணப் பெயர் பெற்றது. இங்கு வந்து உங்களை வணங்கி செல்பர்களுக்கு, சாபம் நீங்கி நற்கதி அடைய அருள்புரிய வேண்டும் என்றும் முனிவர் வேண்டிக் கொண்டார். தேவலோகத்தில் உள்ள வித்தியாதரனுக்கும் சாப விமோசனம் வழங்கிய பெருமாள் ‘தேவபிரான்’ என்று அழைக்கப்பட்டார்.

விபிதனின் பிணி தீர்த்தல்

கங்கை நதிக்கரையில் அங்கமங்கலம் என்னும் ஊரில், சத்தியசீலன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.

1. வன்னிசாரன்
2. விபிதகன்
3. சொர்ணகேது.

சத்தியசீலனின் இரண்டாவது மகன் விபிதகன் குஷ்டநோயில் மிகவும் அவதிப்பட்டான். தந்தையான சீலனுக்கு அக்காட்சியைக் காண மிகவும் மன வருத்தம் ஏற்பட்டது. ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று தன் மகனுக்கு நோய் குணமாக வேண்டும் என வேண்டி வந்தார்.

நாரதர் வழிகாட்டுதல்

ஒரு சமயம், லோக சஞ்சாரியான நாரதரைக் கண்டார். சத்தியசீலனின் முகவாட்டத்தைக் கண்டு, “சீலரே… உன்னுடைய துயரத்திற்கு காரணம் என்ன?’’ எனக் கேட்டதும், சத்தியசீலர் கண்ணீர் சிந்தி; “தன் மகன் விபிதகனுக்கு குஷ்டமநோய் பீடித்திருக்கிறது; அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லையே” எனக் கதறி அழுதான். அவனின் மன நிலையை அறிந்த நாரதர், “உன்னுடைய மகனின் நோய் நீங்கிவிடும் கவலைப் படாதே” என ஆறுதல் அளித்தார்.

“எப்படி நீங்கும்? எதற்கு இவ்வளவு பெரிய தண்டனை” என்று சத்தியசீலன் நாரதர் இடம் கேட்டார். நாரதர் சிரித்துக் கொண்டே “வினைப்பயன் உன் மகன் முன் ஜென்மத்தில் செய்த பாவமே” ஆகும்.

“அவன் தீராத பாவம் என்ன செய்தான்?”

“குருவை நிந்திப்பது பெரும் பாவமல்லவா? அத்தகைய பாவத்தை உன் மகன் செய்ததால், இப்பிறவில் துயர் அடைகிறான்”. “நோய் நீங்க வழி என்னவோ கூறுங்கள்” என்று வேண்டினார். “தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ‘திருத்தொலை வில்லிமங்கலம்’ திருமாலை வணங்கி பூசை செய்து வழிபட்டு வந்தால், உன் மகன் முற்பிறவியில் செய்த கர்மவினை நீங்கி நோய் குணமாகும். அஸ்வினி தேவர்கள் வேண்டி வரத்தை அரவிந்தலோசரிடம் கேட்டு பெற்றனர்’’ எனக் கூறினார். அதன் பின்பு விபிதகன் தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் ராகு, கேது சந்நதியில் உள்ள திருமாலை வணங்கி பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

அஸ்வினி தேவர்கள்

யாகங்கள் செய்யும் பொழுது யாகத்தில் இருந்து வரும் அவிர்பாகத்தை சரியாக தேவர்களுக்கு கிடைக்கவில்லை. மறுக்கப்பட்டது என்றுகூட கூறலாம். பூவுலகில் மருத்துவ சாஸ்திரத்தின் படி யாகம் சரியாக செய்யவில்லை. அவிர்பாகம் கிடைக்காததால் என்ன செய்வது என்று பிரம்மாவிடம் கேட்க, பூலோகத்தில் முனிவர் சுப்ரபர் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் நிறுவிய அரவிந்தலோசரை வணங்கி பூஜை செய்தால் உனக்கு வேண்டிய அவிர்பாகம் கிடைக்கும் என்று பிரம்மாகூறி, பூவுலகம் அனுப்பி வைத்தார். அஸ்வினி தேவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், அரவிந்தலோசரை வணங்கி வேண்டி அவிர்பாகம் பெற்றதால், இப்பெருமாளுக்கு ‘தேவபிரான்’ என்ற காரணப் பெயர் உண்டாயிற்று.

“துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும், தாமரை தடக்கண் என்றும் குவளை
ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே’’ (3271)

“சிந்தையாலும் சொல்லாலும் செய்கையி னாலு தேவபிரானையே
தந்தை தாய் என்றடைந்து வணிகுரு கூர்வர் சடகோபன் சொல்
முந்தை ஆயிரத்து துள்ளி இதை சொல் மங்களத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லவர் அடிமை
செய்வார் திருமாலுக்கே’’ (3281) திருவிழாக்கள்

கார்த்திகை மாதம் கொடியேற்றி 11 நாட்கள் பெரும் திருவிழாவாக வெகு விமர்சையாக நடைபெறும். இதில் 5ஆம் நாள், இரட்டை கருட சேவை சிறப்பாக நடைபெறும். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார் திருநகரில் நடைபெறும் நம்மாழ்வார் உற்சவம் ஐந்தாம் நாள், தேவபிரான் பெருமாள் சேவை சாதிக்கிறார். இதைத் தவிர புரட்டாசி சனிக்கிழமை, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி, முக்கிய விழாக்களும் சிறப்பாக நடைபெறும்.

பரிகாரம்

ஜாதகத்தில் ராகு, கேது தசை நடைபெறும் பொழுது, இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அரவிந்தலோசரை தேவபிரானை வணங்கி தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால்; கிரக தோஷம் நீங்கி எண்ணியது ஈடேறும்.

மூலவர்: ஸ்ரீனிவாசன்.
தாயார்: அலமேலு மங்கை, பத்மாவதி தாயார்.
உற்சவர்: தேவர்பிரான், ஸ்ரீதேவி, பூதேவி.
தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம்.

விமானம்: குமுத விமானம்.
தல விருட்சம்: விளாமரம்.
நடைதிறப்பு: காலை: 9.00 முதல் மாலை 6.00 வரை.
எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ., பயணித்தால் இரட்டைத் திருப்பதியை அடைந்துவிடலாம்.

பொன்முகரியன்

Tags : Tirupati ,Rahu ,Ketu ,Rahu Dasa ,
× RELATED மறுபிறவி உண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா?