×

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பாலஸ்தீன படங்களுக்கு தடை: ஒன்றிய அரசு மீது நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்

 

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பாலஸ்தீன படங்களைத் திரையிட ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 17வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படும் இவ்விழாவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஐந்து பாலஸ்தீனத் திரைப்படங்களில் நான்கு படங்களுக்கு ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்து தடை விதித்துள்ளது. ‘பாலஸ்தீனம் 36’, ‘வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாப்’ உள்ளிட்ட முக்கியத் திரைப்படங்கள் இதில் அடங்கும். ஏற்கனவே கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, அம்மாநில அரசு அதை எதிர்த்துப் படங்களைத் திரையிட்ட முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டி, இங்கும் அதே போன்ற நடவடிக்கை தேவை எனத் திரையுலகினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பாலஸ்தீனத் திரைப்படங்களைத் திரையிட ஒன்றிய அரசு தடை விதித்திருப்பதற்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். புகழ்பெற்ற பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்விஷின் கவிதையை வாசித்த அவர், ‘கலாசார நிகழ்வுகளில் அரசியல் குறுக்கீடு இருப்பதை ஏற்க முடியாது, பிற நாடுகளின் வலிகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் திரைப்பட விழாக்களில் இத்தகைய தடைகள் விதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது’ எனத் தெரிவித்தார். மேலும் கேரளா அரசைப் போன்று கர்நாடக அரசும் ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்துப் போராட வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவிடம் அவர் நேரடியாகக் கோரிக்கை விடுத்தார். இது குறித்துப் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, சமூக அநீதிகளை சினிமா பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட போதிலும், அந்தத் திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பாக எந்தவொரு உறுதியான முடிவையும் அறிவிக்கவில்லை.

 

Tags : Bangalore International Film Festival ,Prakash Raj Kadam ,EU Government ,Bangalore ,17th International Film Festival ,Bangalore, Karnataka ,
× RELATED கருத்துக்கணிப்பில் வெளியான பரபரப்பு...