புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை லஞ்சம் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், தற்போது வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது மனுவில், ‘அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்.
இதுபோன்ற அறிவிப்புகளால் அப்பாவி மக்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பதைத் தடுக்கும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வாக்காளர்களைக் கவரும் வகையிலான இலவசங்களை லஞ்சம் என்ற வகைக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோன்று நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்து, அதன் மூலம் வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. அதற்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகளுடன் இணைத்து விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
