டெல்லி: அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மட்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம். மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனிக் கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது. மாணவிகளுக்கு என தனி கழிப்பறை வசதிகள் செய்து தராதது கல்விபெறும் உரிமையை மீறும் செயலாகும். கல்வி நிறுவனங்கள் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 19ன் படி மாணவிகளின் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
மாணவிகளுக்கு தனிக் கழிப்பறை, சானிட்டரி நாப்கின் கட்டாயம் என கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
