புதுடெல்லி: பிரதமர் மோடி இஸ்ரேல் செல்ல உள்ள நிலையில், அரபு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2016ம் ஆண்டில் பஹ்ரைனில் முதல்முறையாக இந்தியா – அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இத்தகைய உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை தற்போது டெல்லியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்த நிலையில், கடந்த 28ம் தேதியன்று இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்று பல்வேறு விவாதங்களை நடத்தினார். சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தற்போது தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் வரும் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் மீண்டும் அந்நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் இஸ்ரேல் வருகைக்காகத் தயார் நிலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் 2வது இந்தியா – அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து நடத்துகின்றன. பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் வார்சென் அகபெக்கியன் ஷாஹின் மற்றும் அரபு லீக் பொதுச்செயலாளர் அகமது அபுல் கெய்ட் உள்ளிட்ட 22 அரபு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பிராந்திய நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்தியா உதவ வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரபு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான இந்தியாவின் இந்தச் சமச்சீர் வெளியுறவுக் கொள்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
