*அதிகாரிகள் படகில் சென்று பார்வையிட்டனர்
*டிரோனில் அணையின் உறுதி தன்மை சோதனை
திருமலை : திருமலையில் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவை மீட்டெடுக்க அணைகளின் ஆய்வு பணி நேற்று தொடங்கியது. கோகர்பம் அணையில் அதிகாரிகள் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
அதில் டிரோன் மூலம் அணையின் உறுதி தன்மை சோதனை செய்யப்பட உள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலையில் கோகர்பம், ஆகாச கங்கை, பாபவினாசம், குமரதாரா, பசபுதாரா ஆகிய 5 அணைகள் உள்ளன. சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் மழைநீரின் ஆதாராமாக கொண்டு இந்த அணைகள் கட்டப்பட்டது.
மலையில் இருந்து வரும் மழைநீர் மணலோடு இந்த ஆணைகளில் சேறுகிறது. இதனால் அணைகளின் கொள்ளளவு குறைந்துள்ளது. எனவே அணைகளின் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவை மீண்டும் மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அணைகள் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. எனவே இதன் உறுதிதன்மையும் ஆய்வு செய்யப்படுகிறது.
தேசிய அணை பாதுகாப்பு ஆணையச் சட்டம், 2021 இன் விதிகளின் கீழ், அணைகளின் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்புக்காக திருமலையில் உள்ள அணைகள் நீர்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அணைகள் கட்டப்பட்டதால், நீர்த்தேக்கங்களில் வண்டல் படிந்துள்ளது.
இதன் விளைவாக நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு குறைந்துள்ளது. இதன வண்டல் மண் சேர்ந்துள்ள பகுதிகளில் ஆய்வு தேவைப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, முதலில், திருமலையில் உள்ள கோகர்பம் அணையில் பூஜை செய்து ஆய்வு பணியை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். இந்த ஆய்விற்குப் பிறகு, நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவை மீண்டும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதேபோல் திருமலையில் உள்ள அனைத்து அணைகளிலும் டிரோன் மற்றும் டிஜிபிஎஸ் கருவி மூலம் அணையின் உறுதி தன்மை, பழுது பார்க்க வேண்டிய தேவைகள், நீர் கொள்ளளவை அதிகரிக்க தேவையான கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் நீர் வளத்துறை இ.இ. சுதாகர், ஏ.இ.டி.முனிரத்னம் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகள் எஸ்.ரவிசங்கர் ரெட்டி, இ.இ.ராஜசேகர் ரெட்டி டி.இ.இ முனி சங்கர், ஏ.இ.இ. பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
