*போலீசார் விசாரணை
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு ஜெயமங்கள அவென்யூ பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி (70). இவரது மனைவி சரோஜா (65). தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடசாமி அருகிலுள்ள ஓட்டலுக்கு சென்று உணவு வாங்கி வீடு திரும்பி உள்ளார்.
அப்போது வீட்டில் சரோஜா இல்லை என கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தில் தேடிய போது அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமுகை போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
