×

சங்கராச்சாரியாரை கடுமையாக விமர்சித்த சாமியாரான நடிகையின் மடாதிபதி பதவி பறிப்பு: கின்னார் அகாரா தலைவர் அறிவிப்பு

பிரயாக்ராஜ்: சங்கராச்சாரியாரை விமர்சித்து பேசியதால் முன்னாள் நடிகை மம்தா குல்கர்னி கின்னார் அகாராவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரபல முன்னாள் பாலிவுட் நடிகையான மம்தா குல்கர்னி, ஆன்மீகத்தில் ஈடுபட்டு யமாய் மம்தா நந்த் கிரி என பெயரை மாற்றிக்கொண்டார். இவர் கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது கின்னார் அகாராவின் மகாமண்டலேஸ்வராக (மடாதிபதி) நியமிக்கப்பட்டார். எனினும், அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட பூசல் மற்றும் நிதி தொடர்பான புகார்கள் காரணமாக கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமே இவர் பதவி விலகினார். பின்னர் சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் அமைப்பில் சேர்க்கப்பட்டார்.

கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர், தற்போது மீண்டும் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி அமைப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டில் மாக் மேளா சங்கமம் படித்துறையில் குளிப்பது தொடர்பான விவகாரத்தில், சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு, பல்லக்கில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து கடந்த 25ம் தேதி கருத்து தெரிவித்த மம்தா குல்கர்னி, ‘சங்கராச்சாரியாரை நியமித்தது யார்? கூட்ட நெரிசலில் பல்லக்கில் செல்ல அடம் பிடிப்பது ஏன்? அவரது பிடிவாதத்தால் சீடர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது பேச்சு அகாரா விதிகளை மீறியதாக இருந்ததால், ேநற்று மம்தா குல்கர்னியை இந்த அமைப்பிலிருந்து நீக்குவதாக கின்னார் அகாரா தலைவர் லக்ஷ்மி நாராயண் திரிபாதி உறுதிப்படுத்தினார். இனிமேல் இவருக்கும் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Tags : Sankaracharya ,Kinnar Akara ,Mamta Kulkarni ,Bollywood ,Yamai Mamta Nand Kiri ,
× RELATED கார்ப்பரேட் நிறுவனங்களில்...