×

கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

2024-25ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில், தென்சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்குவதற்காக சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் சென்னை, கிண்டி கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில், தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் 4,63,544 சதுர அடி பரப்பளவில் ரூ.417 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

750 படுக்கைகள் கொண்ட இந்த குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதன் மூலம், உயர்தர சிறப்புப் பிரிவு குழந்தை மருத்துவ பராமரிப்புக்காக ஒரு தனித்துவமான வசதி உருவாக்கப்படும்.

இது நோயுற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவு, குழந்தை மருத்துவ பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், குழந்தை மருத்துவக் கல்விக்கு ஆதரவளிக்கவும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், மேலும் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை எளிதாக்கவும் உதவும். இது குழந்தை மருத்துவ சிறப்புப் பிரிவு சேவைகளில் ஒரு அதிசிறப்பு மையமாக செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் பிரபாகர ராஜா, கணபதி, அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,King Disease Prevention and Research Institute ,Guindy ,Chennai ,Department of Health and Human Services ,
× RELATED மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன்...