- ஜனார்தன திதர்
- 22 மாஹன்
- ஸ்ரீ ஜனார்தன தீர்தார்
- ஸ்ரீ கிருஷ்ணபுரி மடம்
- ஸ்ரீ கிருஷ்ணபுராமா
- அஷ்ட
- மாதர்
- கிருஷ்ணாபூர் மடம்
*22 மகான்
“ஸ்ரீ ஜனார்த்தன தீர்த்தர்’’ இவர் ஸ்ரீ கிருஷ்ணபுர மடத்தை சேர்ந்தவர். அதுவும், இந்த மடத்தின் முதல் மடாதிபதியாவார். ஸ்ரீ கிருஷ்ணபுரமடம், அஷ்ட மடங்களின் (மத்வர் நிறுவிய எட்டு மடங்கள்) ஒன்றாக கருதப்படுகிறது. சிலர் கிருஷ்ணபூர் மடம் என்றும் அழைக்கிறார்கள். மங்களூரில், சூரத்கல் என்னும் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ., தொலைவில் பயணித்தால், கிருஷ்ணபூர் என்னும் இடம் வந்தடையும். இந்த இடத்தை மையமாக வைத்தே.. “ஸ்ரீ கிருஷ்ணபுரமடம்’’ உருவாகியிருக்கிறது என்கிறது மத்வ நூல்கள். தற்போது, “ஸ்ரீ வித்யாசாகர தீர்த்தர்’’ இந்த மடத்தை தலைமை ஏற்று நிர்வகித்து வருகிறார்.
நிலங்களை பறிக்கொடுத்தது
ஜனார்த்தன தீர்த்தர், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் நேரடி சீடர் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த மடத்தின் வழிபாடு தெய்வமாக மூலவர், “காளிங்க நர்த்தன கிருஷ்ணர்’’ ஆவார். தற்போதுள்ள வித்யாசாகர தீர்த்தர், கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜனவரி 18-ஆம் தேதி அன்று நான்காவது முறையாக பர்யாயம் முறையை ஏற்று, 2024-ஆம் ஆண்டு, ஜனவரி 17- ஆம் தேதி வரை, சுமார் இரண்டு ஆண்டு காலம் உடுப்பி கிருஷ்ணரை பூஜை செய்து, தன் பர்யாயம் முறையை நிறைவு செய்திருக்கிறார்.
(இதோ… இந்தாண்டு பர்யாயம் ஜனவரி- 18 அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சீரூர் மடாதிபதி ஸ்ரீ வேதவர்தன தீர்த்தர், பர்யாயம் செய்ய இருக்கிறார்) கிருஷ்ணபுரமடம், இந்தியா முழுவதிலும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. அதே போல், இந்த மடத்திற்கு கர்நாடக மாநிலத்தில், பல்வேறு இடங்களில் நிலபுலன்கள் இருந்தன. ஆனால் 1974-ஆம் ஆண்டு, அப்போதைய கர்நாடக மாநில அரசு “நிலத்தின் உரிமையாளர் உழவர்’’ என்கின்ற சட்டத்தை அமல்படுத்தியது. இதனால், பல இடங்களில் நிலங்களை பறிகொடுத்தது, கிருஷ்ணபுரமடம்.
மரத்தால் ஆன மடம்
உடுப்பி கிருஷ்ணர் கோயிலை சுற்றி இருக்கும் மாடவீதியில், கிருஷ்ணபுரமடம் இருக்கிறது. இந்த மடத்தின் உள்ளே, முக்யபிராணர் (அனுமன்) சந்நதியும் உள்ளது. தினமும் முக்யபிராணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. அதே போல், இந்த மடம் வழியில் வந்த ஸ்ரீ வித்யாமூர்த்தி தீர்த்தரால், கிருஷ்ணாபூரில் ஒரு மடம் கட்டப்பட்டது. இம்மடம், மிக முக்கிய மடமாக பார்க்கப்படுகிறது. ஸ்ரீ வித்யாமூர்த்தி தீர்த்தர், கிருஷ்ணபுர மடத்தின் இருபத்தி ஆறாவது மடாதிபதியாவார்.
இக்காலத்தில், எங்கு பார்த்தாலும் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள்தான் கண்களுக்கு தெரிகின்றன. ஆனால், துளிகூட பழமை மாறாது, உடுப்பியில் உள்ள அஷ்ட மடங்களின் உள்கட்டமைப்பு, மரத்தால் உருவாக்கப்பட்டவை. அதனை இன்றும் பாதுகாத்து வருகின்றார்கள். குறிப்பாக, கிருஷ்ணபுர மடத்தின் தோற்றம் மிக அழகாக மரத்தால் காணப்படுகின்றன. இன்றைய கான்கிரீட் கட்டிடங்களின் காலத்தில், இந்த வகை அமைப்பு அரிதானது!
மத்வர் வழங்கிய ஆசிரமம்
ஜனார்த்தன தீர்த்தருக்கு, மத்வர் கொடுத்த “காளிங்க நர்த்தன கிருஷ்ணர்’’, மிக சிறிய கிருஷ்ணராக பாம்பின் தலையின் மீது ஒரு காலை வைத்து, மற்றொரு காலை நடனமாடியும், ஒரு கையில் பாம்பின் வாலை பிடித்தும், மற்றொரு கையில் அபய அஸ்த முத்திரையை காட்டியும் மிக அழகாக இருக்கிறார். இன்றும் காளிங்க நர்த்தன கிருஷ்ணரை பூஜித்து வருகின்றார்கள். மத்வருக்கு, ஸ்ரீ ஜனார்த்தன தீர்த்தரை மிக பிடிக்கும்.
ஆகையால், ஜனார்த்தன தீர்த்தர் மத்வருக்கு ஓர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதில், ஸ்ரீ உக்ர நரசிம்ம விக்ரகத்தை தனக்கு வழங்கும் படி கேட்கிறார். அவர் கேட்ட மறுநொடியில், உக்ர நரசிம்ம விக்ரகத்தை, ஜனார்த்தன தீர்த்தருக்கு வழங்கினார், மத்வர். ஹிரண்யகசிபுவை மடியில் வைத்துக் கொண்டு, நரசிம்மர் வதம் செய்வது போல் இருக்கும் ஸ்ரீ உக்ர நரசிம்மரின் விக்ரகம். ஸ்ரீ ஜனார்த்தன தீர்த்தரின் பூர்வாஸ்ரம பெயர் என்ன என்பது பற்றி தெரியவில்லை. ஜனார்த்தன தீர்த்தரின் திறமையை நன்கு கவனித்த மத்வர், தானே முன்வந்து சந்நியாசம் வழங்கி, கிருஷ்ணபுர என்னும் தனி மடத்தை நிறுவி, ஆசிரமம் வழங்கினார்.
தோஷம் நீங்க
மத்வ நூலான, சுமத்வ விஜயத்தில் “ஜனநாத்யுபமர்தின:’’ என்று கூறுகிறது. இதனை பகுத்தால்;
* ஜன = மக்கள்.
* அநாத்ய / அநாத்யா = பாதுகாப்பில்லாதவர்கள் / துயருற்றவர்கள் / ஆதரவற்றவர்கள்.
* உபமர்தின = அழிப்பவர், ஒழிப்பவர், நசிப்பவர்.
ஆக, மக்களின் துயரத்தை அழிப்பவர், ஆதரவற்ற மக்களின் வேதனையை ஒழிப்பவர், பொதுமக்களின் துன்பங்களை நீக்குபவர் என்று பொருளாகும். ஒருவரின் பிறவியிலேயே ஏற்பட்டுள்ள தோஷங்களை, நீக்கும் திறன் கொண்டவர், மகான் ஸ்ரீ ஜனார்த்தன தீர்த்தர் என்று கூறுகிறது. ஆகையால், ஜாதக ரீதியில் தோஷங்கள் ஏற்பட்டு, திருமணம், குழந்தைபேறு போன்றவை தடையாக இருக்கும் பக்தர்கள் பலரும், மகான் ஸ்ரீ ஜனார்த்தன தீர்த்தரை வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டிக் கொண்ட சில காலத்திலேயே தோஷம் நீங்கி, பலரும் பலனடைந்திருக்கிறார்கள் என்று அனுபவப்பூர்வமாக தெரிவிக்கிறார்கள்.
பிருந்தாவனம் தெரியவில்லை
ஸ்ரீ ஜனார்த்தன தீர்த்தருக்கு, “ஸ்ரீ ஸ்ரீவத்சங்க தீர்த்தர்’’ (இவரின் பூர்வாஸ்ரம பெயரும் தெரியவில்லை) என்னும் சீடர் இருந்தார். அவருக்கு, ஆசிரமத்தை கொடுத்துவிட்டு, புனித யாத்திரைக்காக, வட இந்தியாவிற்கு சென்றார். அதன் பிறகு, வட இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு மத்வ சம்ரதாயத்தை போதித்த பெருமை, ஸ்ரீ ஜனார்த்தன தீர்த்தருக்கே சாரும். பின்னர், பிரயாகையில் வைசாகம் மாதம் சுத்த துவாதசி அன்று, ஸ்ரீ ஜனார்த்தனதீர்த்தர் பிருந்தாவனமானதாக கூறப்படுகிறது. ஆனால், இவரின் மூலபிருந்தாவனம் எங்கு உள்ளது என்பது இன்னும் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது.இத்தகைய மாபெரும் மஹானாக இருப்பதற்கு, மத்வரின் சீடர் என்பதை தவிர, வேறு என்னவாக இருக்க முடியும்!
ரா.ரெங்கராஜன்
