×

காளி என்ற சக்தி

‘‘யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் காளி, தெய்வ லீலையன்றோ
பூதமைந்தும் ஆனாய் காளி, பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி, பொறியை விஞ்சி நின்றாய்
இன்பமாகி விட்டாய் காளி, என்னுளே புகுந்தாய்’’
– என்று மனமுருகப் பாடினார் மகாகவி பாரதியார்.

காளியை முன்னிலைப்படுத்தி அவர் பக்திப் பரவசமடைந்ததில், பெண் தெய்வத்தை அவர் போற்றிய பாங்கு புலனாகிறது. பொதுவாகவே பெண்மைக்கு உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளித்தவர் அவர். ஆமாம், அவர் தன் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள், அவற்றில் அவருடைய மனைவி செல்லம்மாள் நாற்காலியில் அமர்ந்திருப்பார், அருகே மகாகவி நின்று கொண்டிருப்பார். அந்நாளைய ‘நியதி’ப்படி கணவன் அமர்ந்தவாறும், மனைவி நின்றவாறும் புகைப்படத்துக்குப் போஸ் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், அந்த சம்பிரதாயத்தை மீறியவர் பாரதியார்.

அதனால்தான் அவரால் ‘கண்ணம்மா’ பாடல்களை பாசம், நட்பு, காதல் என்று விதவிதமான உணர்வுகளோடு இயற்ற முடிந்தது. இவ்வளவு ஏன், தெருவில் செல்லும் போது மனைவியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு, ஒரு உன்னத நண்பராக நடந்து செல்வார் அவர். அதைக் கண்டு அவரை கேலி செய்து எள்ளி நகையாடியவர்கள் நிறைய பேர். குலம், சாத்திரம், அடிமைத்தனமான பாரம்பரியம் என்ற போர்வையில், தங்களால் அவரைப்போல நடந்து கொள்ள இயலவில்லையே என்ற ஏக்கம்தான் அவர்களுடைய எள்ளலின் அடிநாதமாக இருந்தது.பாரதியார் மட்டுமல்ல, அவருடைய சீடர், பாரதிதாசனும் சக்தியைப் போற்றியிருக்கிறார். காளியைப் பாடிய குருவின் அதே அடியொற்றி இவரும் சக்தியைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்:

‘‘எங்கெங்கும் காணினும் சக்தியடா தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் அவள்
மந்த நகையங்கு மின்னுதடா…’’

மகாபாரதத்தில், அஞ்ஞாத வாசம் மேற்கொள்ள வேண்டிய பாண்டவர்கள், வனத்திலிருந்து மச்ச நாடு நோக்கிச் சென்றார்கள். நாட்டின் எல்லையருகே ஒரு மயானம். உள்ளே காளி கோயில். அதர்வண வேதத்தின், ‘யாமளம்’ என்ற மந்திரப் பகுதியால் அனைவராலும் துதிக்கப்பட்ட காளி அவள். கரங்களில் சங்கு மற்றும் தண்டாயுதத்தை ஏந்தியிருந்தாள். கரிய நிறத்தவளானாலும், ‘அழகியவல்லி’ என்று பெயர் கொண்டிருந்தாள். அந்தக் காளி கோயிலின் முன்னே மிகப்பெரியதான, பல கிளைகளுடன் விரிந்து பரந்திருந்த வன்னி மரம் ஒன்று இருந்தது. அதன் தண்டு நடுவே மிகப்பெரிய பொந்து ஒன்றும் இருந்தது. அவர்கள் அனைவருமே தங்கிக் கொள்ளும் அளவுக்கு விசாலமான இந்தப் பொந்தில் தம்முடைய எல்லா ஆயுதங்களையும், கவசங்களையும் மறைத்து வைத்தார்கள். பிறகு வெளியே வந்து காளிதேவியை உளமாற வணங்கி தங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண, காளியின் அருளை வேண்டினார்கள்!

நம் நாட்டைப் பொறுத்தவரை காளி என்றால் பொதுவாக ‘கொல்கத்தா காளி’ என்றே அன்னை பிரபலமாகி இருக்கிறாள். குறிப்பாக நவராத்திரி கொண்டாட்டக் காலங்களில், மேற்குவங்க மாநிலம் முழுவதுமே காளி உபாசனையில் திளைத்து மகிழும் – மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ‘கணபதி பப்பா மோரியா’ என்று ஞால முதல்வனின் புகழ் விண்ணதிர ஒலிப்பது போல!

தங்களுடைய கடினமான காலங்களில், அன்னை காளி தங்களைக் காத்து அருள் புரிவாள் என்பது மேற்குவங்க மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது, இருக்கிறது. அவர்களில் ஓர் உதாரணமாக இந்திய விடுதலை போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைச் சொல்லலாம். அவருடைய தாயார் பிரபாவதி தேவி, இறை பக்தியை குடும்ப சம்பிரதாயப்படி வெகு நேர்த்தியாகக் கடைபிடித்து வந்தவர். அவர் போதனையால் மகன் சுபாஷும் ஞானிகளின் வாக்குகளை மனதில் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, அவற்றை அப்படியே பிறருக்கு உபதேசிக்கும் ஆற்றல் கொண்டவராகவும் விளங்கினார். வங்காள மாநிலத்தின் மிகச் சிறந்த அடையாளமான துர்கா (காளி) பூஜையில் வெகு ஆர்வத்துடன் கலந்து கொண்டு வீர-ஆன்மிக சிந்தனை கொண்டவராக மிளிர்ந்தார். இந்த உணர்வை அவர் சிறைபட்டிருந்த போதும்கூட சிறிதளவும் இழக்கவில்லை.

ஆமாம், 1924ம் ஆண்டு, அரசியல் குற்றத்துக்காக அந்நாளைய பர்மாவில் இருந்த மாண்டலே சிறையில் தண்டனையை அனுபவித்தார். அப்போது அந்தச் சிறையில் ஏற்கெனவே இருந்த வங்காளி கைதிகளுடன் துர்கா பூஜையை நடத்திட விரும்பினார். அதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து, நிதி உதவியும் அளிக்காததால், தங்களிடம் இருந்த பணத்தைச் சேர்த்து பூஜையை கட்டாயமாக நடத்தியே தீருவோம் என்று வாதிட்டார், சுபாஷ். இந்தப் போராட்ட விவரம் வெளியே பரவி விடவே, அதிகாரிகள் இறங்கி வந்து, பண உதவி செய்வதாகவும் ஆனால், அந்தப் பணத்தை மாதா மாதம் கைதிகளுக்குக் கொடுக்கும் பணி ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்வதாகவும் அறிவித்தனர். இதற்கெல்லாம் அயராத சுபாஷ் வெகு சிறப்பாக மாண்டலே சிறையில் துர்கா பூஜையைக் கொண்டாடினார்.

இதைக் குறிப்பிட்டு தன் தாயாருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘‘இந்தச் சிறையிலும் அன்னை துர்கைக்கு வழிபாடு செய்யும் பேறு எனக்கும், சக வங்காள கைதிகளுக்கும் கிடைத்தது, அம்மா. துர்கா மாதா எங்களுடனேயே உறைகிறாள் என்பது புரிந்து நாங்கள் உணர்ச்சிவசப்பட்டோம். வங்காளத்தின் கண்கண்ட தெய்வமான அந்த அம்மையை நாங்கள் பர்மாவிலும் கண்டு கொண்டோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறைப்பட்டிருப்போம் என்று தெரியவில்லை. ஒருவேளை, நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க, தினசரி துர்கா பூஜையுடனான இந்த சிறை வாழ்க்கை எங்களுக்குப் பழகி போய்விடுமோ என்றுகூடத் தோன்றுகிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வடகோடி மாநில காளியைப் போலவே தென்கோடியான தமிழ்நாட்டிலும் காளி, தனிப் புகழ் கொண்டிருக்கிறாள். சென்னை நகரிலுள்ள காளிகாம்பாள் கோயில், அதற்குச் சிறந்ததோர் உதாரணம்.

இங்கே, காளிகாம்பாள், ஆதியில் பிரதிஷ்டையாகி அருள்புரிந்த இடம், தற்சமயம் அரசு அலுவலகங்கள்
அமைந்திருக்கும் ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ என்று வரலாறு கூறுகிறது.

425 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனியார், தற்போதைய சென்னைப் பகுதியில் மூன்று குப்பங்களை விலைக்கு வாங்கித் தங்கள் வியாபாரத்தைத் துவக்கினர். பிறகு, தமக்காக ஒரு கோட்டையை நிர்மாணித்துக் கொண்டனர். பேரி செட்டியார்கள், முதலிமார்கள், விஸ்வகர்மாக்கள், மீனவர்கள் ஆகியோர் அந்தப் பகுதியில் அவரவருக்கான தொழில் புரிந்து கொண்டிருந்தனர். கூடவே, தங்கள் இன வழிபாட்டிற்கேற்பத் தனித்தனியே ஆலயங்களையும் அமைத்துக் கொண்டார்கள்.

அவ்வகையில் விஸ்வகர்மா சமூகத்தினர் அமைத்துக் கொண்ட ஆலயம்தான் காளிகாம்பாள் – கமடேஸ்வரர் திருக்கோவில். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரிய ஆரம்பித்த போது இந்த சென்னைப் பகுதி ஆங்கிலேய ராணுவத்துக்கான பகுதியாகி விட்டதால், கோட்டைக்குள் அமைந்திருந்த காளி ஆலயத்தில் வழிபாடு செய்வது தடைபட்டது. ஆனால், யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில், பக்தர்கள் மாகாளியை எங்கு வைத்து வழிபட விரும்புகிறார்களோ அங்கே மீண்டும் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தாங்களே செய்து தருவதாகவும் ஆங்கிலேய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

அதுவரை கோட்டைக்குள் கொலுவிருந்த அம்பிகையை, தற்போதைய தம்பு செட்டித் தெருவில் ஒரு கோயில் அமைத்து 1640ம் ஆண்டு அங்கே குடியேற்றினார்கள். இந்த அம்மனை ‘கோட்டையம்மா’ என்றும், செந்தூரம் பூசி வழிபட்டதால் ‘சென்னம்மன்’ என்றும் மக்கள் போற்றித் துதித்தனர்.மகாராஷ்டிர மாமன்னன் சத்ரபதி சிவாஜி, தென்னிந்தியாவிற்கு, ஆங்கிலேயருக்கு எதிரான போர் ரீதியில் விஜயம் செய்தார்; 1677ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 3ம் தேதி சென்னைக்கு வந்து இக்கோயிலில் உள்ள காளியம்மனை வழிபட்டுச் சென்றார் என்று அரசாங்க வரலாற்று ஏடுகளில் (கிழக்கிந்திய வாணிபக் குழுவின் குறிப்புகள், சென்னை நகர வரலாறு (ஆசிரியர் எச்.டி.லவ்) பாகம் ஒன்றில் பக்கம் 357, 371 மற்றும் பாகம் மூன்றில் பக்கம் 309) காணக் கிடைக்கிறது. கோயிலிலும் கல்வெட்டு மற்றும் ஓவியம் ஒன்றின் மூலமும் இந்தத் தகவல் உறுதிபடுகிறது.

இத்தலத்தில் ஸ்ரீ சக்கரம் (அர்த்தமேரு) பிரதிஷ்டை செய்யப்பட்டு,சக்கர மந்திர அதிபதியாய், காளிகாம்பாள் விளங்குகின்றாள். காளி, மகாலட்சுமியையும் சரஸ்வதியையும் இரு கண்களாய்த் தன்னருகே அமையப் பெற்றவளாக, மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பது இவ்வாலயத்தின் சிறப்பு அம்சமாகும். இவ்வாலயத்தில் துர்க்கா தேவிக்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு காலத்தில் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபட்டுத் தாங்கள் கோரிய பலன் ஈடேறுவது கண்கூடு.

தன்னைச் சரணடைந்தோருக்கும், பூஜிப்போருக்கும் மனத்தால் நினைப்போருக்கும் வேண்டுவனவெல்லாம் அளித்து அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் கண்கண்ட தெய்வம் காளிகாம்பாள். பக்தர்களின் கவலைகள் எல்லாவற்றையும் களையும் பேராற்றல் கொண்டவள். தங்கள் குறைகள் நீங்க அம்பாளிடம் சரணடைந்து அவளைத் துதித்து எலுமிச்சம் பழத்தை பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர், பக்தர்கள்.

(தொடரும்)

Tags : Kali ,
× RELATED யானை பலம் தந்திடும் ஸம்பத்கரி தேவி