ஒரு காலத்தில், இரண்டு நண்பர்கள் வேலை தேடி ஒரு பெரிய பட்டணத்துக்குச் சென்றார்கள். அவர்களின் கையில் பணமும் இல்லை; எதிர்காலம் பற்றிய நிச்சயமும் இல்லை. இருந்தாலும், எதாவது ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் நகரத்தின் பல இடங்களைச் சுற்றினர்.
ஒருநாள், அவர்கள் ஒரு முதலாளியை சந்தித்து வேலை கேட்டார்கள். அந்த முதலாளி இருவரையும் கவனமாகப் பார்த்தபின், அருகில் இருந்த ஒரு கிணற்றைக் காட்டி, “இருவருக்கும் ஆளுக்கொரு வாளி தருகிறேன். இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீரை முழுவதும் இரைத்து, தரை தெரியும் வரை சுத்தமாகச் செய்யுங்கள்” என்றார்.
அந்த வேலையைக் கேட்ட உடனே, முதல் நண்பன் மனதுக்குள் சலிப்படைந்தான். “இதெல்லாம் தேவையில்லாத வேலை. கிணற்றில் எத்தனை தண்ணீர் இருக்கும்? இதை இரைத்து என்ன பயன்?” என்று எண்ணினான். அவன் வாளியை ஓரமாக வைத்து, அருகில் இருந்த ஒரு மரத்தினடியில் படுத்துக் கொண்டு தூங்கி விட்டான். ஆனால், மற்ற நண்பன் வேறுபட்டவன். முதலாளி சொன்னதைப்பற்றி அதிகமாக யோசிக்கவில்லை.
“சொன்னதைச் செய்வதே என் வேலை” என்று தீர்மானித்து, காலையில் தொடங்கி மாலை வரை சோர்வை பொருட்படுத்தாமல் தண்ணீரை இரைத்து வந்தான். கை வலித்தது. உடல் களைத்தது; ஆனால், அவன் தன் வேலையை நிறுத்தவில்லை.
மாலை நேரத்தில், கிணற்றின் அடிப்பகுதி தென்பட்டது. அப்போது அவன் கண்களில் ஒரு அதிசயம் விழுந்தது. கிணற்றின் தரையில் சில தங்கக் கட்டிகள் மின்னிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அவன் அதிர்ச்சியடைந்தாலும், நேர்மையாக அவற்றை எடுத்து முதலாளியிடம் கொண்டு சென்று ஒப்படைத்தான்.
அவனுடைய உழைப்பையும் நேர்மையையும் பார்த்த முதலாளி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அவனுக்கு அன்று மட்டும் கூலி கொடுத்தது அல்ல; அவனை நிரந்தர வேலையில் சேர்த்தார். அதோடுகூட, வெகுமதிகளும் வழங்கி அனைவரின் முன்னிலையில் அவனைப் பாராட்டினார்.
இறைமக்களே, தேவன் நமக்குச் சொல்வதை நம்பிக்கையுடன் செய்து கொள்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை. அதில் என்ன பயன் வரும், எப்போது ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கீழ்ப்படிதலுடன், உண்மையாய் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் தேவன் கவனிக்கிறார். காலம் வந்தபோது, நாம் எதிர்பார்க்காத விதத்தில் அவர் விளைச்சலைத் தருவார். நமது பொறுப்பு செயல்; விளைவுக்கான பொறுப்பு தேவனுடையதே.
நாம் பல நேரங்களில், “இதில் என்ன பயன்?” “இதனால் என்ன கிடைக்கும்?” என்று எண்ணி தேவன் கொடுத்த வேலையை அலட்சியப்படுத்துகிறோம். ஆனால், விசுவாச வாழ்க்கையில், கீழ்ப்படிதலே வெற்றிக்கான முதற்படி என்பதை மறந்துவிடாதிருங்கள்.
– அருள்முனைவர்.பெவிஸ்டன்.
