×

தங்க குதிரையில் வேடுபறி!

வைகுண்ட ஏகாதசி என்று சொன்னால், முதலில் நம் நினைவுக்கு வருவது ஸ்ரீரங்கம்தான். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முதல் ரங்கா ரங்கா கோபுரம் வரை மின் விளக்குகளால் வண்ணமயமாக ஜொலிக்கும். அதுவும், காவேரி பாலத்தில் இருந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை பார்க்கும் அழகு இருக்கே… அது தனி அழகு. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கியமானது “சொர்க்கவாசல் திறப்பு’’ என்றாலும், ராப்பத்து எட்டாம் திருநாளான “வேடுபறி’’ உற்சவமும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. சோழபேரரசில் தளபதியாக இருந்து, பின்னர் சிற்றரசனான திருமங்கை மன்னன், பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியால், ஸ்ரீரங்கம் கோயிலின் மதில்சுவர், கோபுரம் உட்பட பல திருப்பணிகளை செய்திருக்கிறார்.

இப்படி திருப்பணிகளை செய்துக்கொண்டிருந்த போது, மேலும் திருப்பணிகளை செய்ய போதிய நிதியில்லாமல் கவலையடைந்தார். தன்னிடம் இருக்கும் அத்துனை செல்வங்களை எல்லாம் விற்று திருப்பணிகளை மேற்கொண்டார். நாட்கள் நகர.. திருப்பணிகள் செய்ய ஒரனாகூட இல்லை (ஒரனா என்பது பழைய தமிழ் வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய நாணயத்தை குறிக்கும் சொல்). சில நாட்கள் வரை அரங்கனுக்கு திருப்பணிகளை செய்யாது மனவேதனையில் இருந்தார். இதனை, திருமங்கை மன்னனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கொள்ளையடித்தாவது பெருமாளுக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது. தன் பரிவாரத்தை சேர்த்துக்கொண்டு, வழிப்போக்கர்களிடத்தில் கொள்ளையடித்து, அந்த பணத்தைக்கொண்டு திருப்பணிகளை செய்து வந்தார்.“ஹாஹா… தடைப்பட்ட திருப்பணி மீண்டும் தொடர்கிறது..என் உள்ளம் குளிர்கிறது’’ என்று குதுகளித்தார், திருமங்கை மன்னன். இப்படி இருக்க, ஒரு நாள்.. வழிப்பறி செய்ய தனது பரிவாரத்தோடு ஒரு அரசமரத்தடியில் திருமங்கை பதுங்கி இருந்தார்.

தன்னுடைய பக்தனாக இருந்தாலும், தவறான வழியில் வந்த பணத்தைக்கொண்டு திருப்பணி செய்வதை தடுத்துநிறுத்த பெருமாள், பிராட்டியுடன் (தாயார்) மாறுவேடம் பூண்டு, திருமணக்கோலத்தில், அனைத்துவிதமான அணிகலன்களையும் அணிந்துக்கொண்டு, கமகமவென பல வகை திரவியங்கலோடு அங்கு வருகிறார். இதையறியாமல், திருமங்கை மன்னன், வழக்கம் போல் வழிமறித்தார்.

அவர்கள் அணிந்துக்கொண்டிருந்த அணிகலன்களை எல்லாம் கவர்ந்துக்கொண்டார். ஆனால், கால் விரலில் இருக்கும் மோதிரத்தை மட்டும் கழட்ட முடியவில்லை.“ஹேய்… கால் விரலில் இருக்கும் மோதிரத்தை கழட்டும்’’ – திருமங்கை மன்னன் “என்னால் முடியவில்லை. முடிந்தால் நீ கழட்டிக்கொள்’’ என்றார் நாராயணன். திருமங்கை மன்னன், குனிந்து கால் விரலில் இருக்கும் மோதிரத்தை பற்கலால் கடித்து இழுத்தார்.

எவ்வளவு முயன்றும், மோதிரம் வரவில்லை. சரி… போகட்டும். மீதம் இருக்கும் நகைகளை ஒரு மூட்டையில் கட்டி தூக்க முயன்றார்கள். அதுவும் முடியவில்லை. கோபம் கொண்ட திருமங்கை;“ஹேய்… நீ ஏதோ மந்திரம் செய்துவிட்டாய். அதனால்தான் எனக்கு இத்தகைய தடைகள். உண்மையை சொல்… என்ன செய்தாய்?’’ என பெருமாளிடம் கத்தியை காட்டி மிரட்டினார்.

“ஆம்.. மந்திரம்தான். அந்த மந்திரத்தை உனக்கு சொல்கிறேன். என் அருகில் வா..’’ என்று அழைத்து;“ஓம் நமோ நாராயணாய’’ என்னும் மிக உயரிய எட்டெழுத்து மந்திரத்தை திருமங்கையின் காதில் ஒலிக்க, அவரது பாவங்கள் அனைத்தும் நீங்கி, அந்த கணமே நம் திருமங்கைக்குள்ளே.. கட்டுண்டு கிடந்த கருணை வெள்ளம், கரையை உடைத்து, அகிலமெல்லாம் பாய ஆரம்பித்தது. தான் வழிபறி செய்வதை தவறு என்று எண்ணி வருந்தினார். அது முதல் திருமங்கை மன்னன், “திருமங்கை ஆழ்வாராக’’ மாறினார்.

இந்த நிகழ்வைதான் நினைவு கூறும் விதத்தில், இன்றும் ஸ்ரீரங்கத்தில் “வேடுபறி உற்சவம்’’ நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே மணல்வெளி என்னும் இடத்தில் வேடுபறி நடைபெறும். ரங்கராஜன் ஒய்யாரமாக அமர்ந்து, குதிரையில் மெதுவாக பவனிவருவார். சற்று நேரத்திற்கு பின்னர், கிடுகிடுவென அங்கும் இங்கும் ஓடி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதனை கண்டு உள்ளூர் வாசிகள் குதுகலிப்பர்.

ஜி.ராகவேந்திரன்

Tags : Srirangam ,Srirangam Rajakopura ,Ranga Ranga Tower ,Kaveri Bridge ,
× RELATED தோஷங்களை போக்கும் ஜனார்த்தன தீர்த்தர்!