கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் குறைந்த தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.
இந்நிலையில், காலிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அணையில் இருந்து அருவி போல் கொட்டும் பகுதியில் மிக குறைவான தண்ணீரே வெளியேறி வருகிறது.
இந்நிலையில், குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு நேற்று அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், கொடிவேரி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்ததாலும் குறைந்த தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில் அருவியின் மேல் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரமாக மரங்கள் அடர்ந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை குடும்பத்துடன் பரிசல் பயணம் செய்தும், குறைந்த தண்ணீரில் குளித்தும், அணையின் கீழ் பகுதியில் கடற்கரை போன்ற மணல் பரப்பில் அமர்ந்தும், அணையில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டும் விடுமுறையை களித்தனர்.
பரிசல் கட்டணம் உயர்வு
கொடிவேரி அணையில் உள்ளூர் மீனவர்கள் 15க்கும் மேற்பட்டோர் பரிசல் மூலமாக சுற்றுலா பயணிகளை ஆற்றங்கரையோரமாக அழைத்து செல்கின்றனர். கடந்த மாதம் வரை சுமார் 30 நிமிட பரிசல் பயணம் மேற்கொள்ள ஒரு நபருக்கு 50 ரூபாய் மட்டுமே பரிசல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்தி வசூலித்து வருகின்றனர்.
உள்ளூர் மீனவர்களின் இந்த இரு மடங்கு கட்டண உயர்வை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள், அணைக்குள் செல்ல 5 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில் பரிசல் பயண கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது சுற்றுலா வளர்ச்சி கழகம் அல்லது நீர்வள ஆதாரத்துறை சார்பில் மோட்டார் படகுகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

