*வாகன ஓட்டிகள் கோரிக்கை
தஞ்சாவூர் : தஞ்சை இருபது கண்பாலம் அருகே சாலையோரம் இருக்கும் பள்ளத்தை சீர் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பூக்காரத்தெருவில் இருந்து இருபது கண் பாலம் செல்ல சாலை உள்ளது.
இந்த சாலையோரத்தில் புது ஆறு பாய்ந்தோடுகிறது. அதில், பொதுமக்கள் தவறி விழுந்துவிடாமல் இருக்க தடுப்புக ம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலையோரம் உள்ள தடுப்புக்கம்பி பகுதியில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளத்தில் குப்பைகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருவது மட்டுமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
