×

பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தினகரன் நிருபரின் உடல் உறுப்புகள் தானம்: கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை

கிருஷ்ணகிரி: பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவேரிப்பட்டணம் தினகரன் நிருபரின் 2 கண், சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன. அவரின் உடலுக்கு கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அன்பரசன் (57). இவர், கடந்த 20 ஆண்டுகளாக காவேரிப்பட்டணம் பகுதி தினகரன் நிருபராக பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி காலை 8 மணிக்கு காவேரிப்பட்டணம்-பாலக்கோடு சாலையில் கருக்கன்சாவடி பகுதியில் டூவீலரில் தனது வீட்டிற்கு செல்வதற்காக திரும்பினார். அப்போது, பின்னால் அதிவேகத்தில் வந்த பைக், அன்பரசன் மீது மோதியது.

இதில், தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வழிந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அன்பரசன் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் மீண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி மற்றும் மகன்கள் விருப்பம் தெரிவித்தனர். அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2 கண்கள், 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. இதனை தர்மபுரி, சேலம், கோவை அரசு மருத்துவமனை குழுவினர் வந்து பெற்றுச்சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் அன்பரசன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தப் பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சத்யபாமா, கண்காணிப்பாளர் சந்திரசேகரன், நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அன்பரசனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் அன்பரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவேரிப்பட்டணம் இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த தினகரன் நிருபரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து காவேரிப்பட்டணம் பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

Tags : Dhinakaran ,Krishnagiri ,Kaverippatnam ,Dinakaran ,Anbarasan ,Kaverippatnam, Krishnagiri District ,
× RELATED வளர்பிறை சுப முகூர்த்த நாளில் தேர்தல்:...