சென்னை: அரசு மாதிரிப் பள்ளிகளில் 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2026-27ம் ஆண்டு தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த 2021-22ம் கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பவ்வேறு விதமான கட்டமைப்பு வசதிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கி உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை ஊக்குவிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசு மாதிரிப் பள்ளிகளில் 2026-27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 9, 10ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதமும், 11ம் வகுப்புக்கு மே மாதமும் நடைபெறும். எனவே, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோரை கொண்டு இதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்த வேண்டும்.
பிப்ரவரி 2ம் வாரத்தில் மாதிரிப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் முதன்மைக் கல்வி அலுவலர் உடனே மாவட்ட ஆட்சியர் ஒப்புதலைப் பெற்று அவர் தலைமையில் மாணவர்களின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு கூட்டங்கள் நடத்த வேண்டும். இந்த பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வாரத்தில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
