×

போதைப்பொருள் கலாசாரம் என் படத்தால் தான் பெருகியதா..? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழில் வெளியான ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ ஆகிய படங்களை இயக்கியவர், லோகேஷ் கனகராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:
‘கூலி’ படத்துக்கு பிறகு நான் ஊடகங்களை சந்திக்கவில்லை. அடுத்த படத்தின் பணிகளுக்கு முன்பு, என்னை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வருகிறது. அதுபற்றி தெளிவுபடுத்துவதற்காகவே மீடியாவை சந்திக்கிறேன். ‘கூலி’ படத்தை வெற்றிபெற வைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்துக்கு பிறகு என்னை பற்றி வெளியான எதிர்மறை கருத்துகளை படித்தேன். என்னை பாராட்டும்போது எப்படி ஏற்றுக்கொள்கிறேனோ, அப்படியே என்னை பற்றிய எதிர்மறை கருத்துகளையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறேன். இனி எதிர்மறை கருத்துகள் வராதபடி படங்களை இயக்குவேன். ‘கூலி’ வெளியான பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவதற்கான ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இருவருக்கும் தனித்தனியாக கதை சொன்னேன். தொடர்ந்து அவர்கள் ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்ததால், வேறு ஒரு யதார்த்தமான கதையை எதிர்பார்த்தனர். அப்போது எனக்கு ‘கைதி 2’ படத்தை உருவாக்கும் எண்ணம் இருந்தது. அதற்குள் கார்த்தி வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்.

அந்த இடைவெளியில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது. ‘கைதி 2’ படத்தையும் விரைவில் இயக்குவேன். ஆமிர் கான் படத்தின் மூலம் இந்திக்கு செல்வதற்கான வாய்ப்பு அமைந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது தாமதமாகி வருகிறது. இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘டிசி’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இதுபற்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி ஆகியோரிடம் சொன்னேன். அவர்கள் என்னை வாழ்த்தினார்கள். இயக்குனர் பணியைவிட நடிப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என்னால் முடிந்த அளவுக்கு நடித்து வருகிறேன். அடுத்த படத்தை இயக்கிய பிறகு ஓய்வு கிடைத்தால் வேறு படத்தில் நடிப்பேன். நான் இயக்கும் அல்லு அர்ஜூன் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும். எதை பேசினாலும் கவனமாக பேச வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். டைரக்டர் ஹெச்.வினோத் கேட்டதால், ‘ஜன நாயகன்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளேன்.

எனது படங்களில் வெட்டுக்குத்து, அடிதடி, வன்முறை, ரத்தம், துப்பாக்கி சத்தம் அதிகமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம், நான் அதுபோன்ற படங்களை பார்த்து வளர்ந்தவன். எனது படங்களில், ‘இந்த போதைப்பொருளை எடுத்துக்கொண்டால், இப்படி ஆகலாம்’ என்று எங்கேயும் நான் சொல்லவில்லை. நான் இயக்கும் படத்திலுள்ள நடிகர்களின் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிரான கருத்துகளை சொல்லும்போது, அது அதிக மக்களிடம் போய் சேரும். நான் போதைப்பொருட்களுக்கு எதிராக கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதுபோன்ற படங்களை இயக்குவதை நான் நிறுத்திவிட்டால், இங்கு எல்லாமே மாறிவிடும் என்றால், இனி எனது படங்களில் அதுபோன்ற காட்சிகளை உருவாக்க மாட்ேடன். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் கூறினார்.

Tags : Lokesh Kanakaraj ,Chennai ,Lokesh Kanagaraj ,
× RELATED அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர்...