சென்னிமலை : சென்னிமலை அருகே வழி கேட்பது போல் நடித்து வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த கறிக்கடை தொழிலாளிகள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பரோஜ் (42).
இவர், சென்னிமலை அருகே குட்டபாளையத்தில் தங்கியிருந்து சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து அவர் வேலைக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த நான்கு பேர் பரோஜிடம் சென்னிமலைக்கு செல்ல வழி கேட்டுள்ளனர்.
ரோட்டை காட்டி பரோஜ் வழி சொல்லி கொண்டிருந்தபோது பைக்கில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென பரோஜின் பாக்கெட்டில் இருந்து சுமார் ரூ.8,000 மதிப்புள்ள செல்போனை பறித்துள்ளார். பின்னர் நான்கு பேரும் அங்கிருந்து வேகமாக பைக்கில் சென்று விட்டனர். இது குறித்து சென்னிமலை போலீசில் பரோஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர், செல்போனை பறித்து கொண்டு சென்ற நான்கு பேரும் ஊத்துக்குளியில் இருப்பதை அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் ஏட்டு கலைமணி ஆகியோர் அங்கு சென்று நான்கு பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், மார்க்கெட்டிங் வேலை பார்த்து வரும் பிரகாஷ் (23), கட்டிட தொழிலாளி வெற்றிவேல் (23), கறிக்கடை தொழிலாளிகளான தரணிதரன் (18) மற்றும் அருண்குமார் (22) என்றும், நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் ஊத்துக்குளி ஆர்.எஸ் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து இவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இரண்டு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரையும் பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
