×

ஊத்தங்கரை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து முதியவரை கல்லால் தாக்கி கொன்று 70 வயது மூதாட்டி பலாத்காரம்

 

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்து, அவரது மனைவி 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து தப்பிய மர்மநபரை போலீசார்தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகாவலசை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன் (75). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அவரது மனைவியான 70 வயது மூதாட்டி வீட்டிற்குள் படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் நிர்வாண கோலத்துடன் வந்துள்ளார். வீட்டிற்கு வெளியே படுத்திருந்த கண்ணப்பனை, திடீரென கல்லால் கடுமையாக தாக்கி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி கதவை திறந்து வெளியே வந்தார். உடனே,கல்லை கீழே போட்டு விட்டு, மூதாட்டி மீது பாய்ந்து பலாத்காரம் செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். அதனைக்கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

பின்னர் பொதுமக்கள், முதிய தம்பதியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் உயிரிழந்தார். படுகாயமடைந்த மூதாட்டி மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், எஸ்பி தங்கதுரை, டிஎஸ்பி ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து எஸ்பி கூறுகையில், ஊத்தங்கரை அருகே நடந்த இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஎன்றார். மர்ம நபரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Uthankarai ,Krishnagiri district ,Moonrampatti panchayat… ,
× RELATED கர்நாடகா தொழிலதிபர் கடத்தி கொலை: நண்பர் கைது