×

சென்னையில் இருந்து திருப்பதிக்கு ரூ.600 கோடியில் 22 கி.மீ. தூரம் சர்வீஸ் சாலை அமைக்க ஒப்புதல்

 

திருமலை: சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ரூ.600 கோடியில் 22 கிமீ தூரம் சர்வீஸ் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்னை மார்க்கத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை கடந்த 2009ம் ஆண்டு 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் அப்போது சர்வீஸ் சாலைகள் அமைக்கவில்லை. சர்வீஸ் சாலைகள் இல்லாததால் வாகன ஓட்டிகளும், உள்ளூர்வாசிகளும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, விபத்துகளை குறைக்கவும், சாலையை கடப்பதில் உள்ள சிரமங்களை நீக்கவும் சர்வீஸ் சாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 22 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் சாலை அமைக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருப்பதி அருகே உள்ள கே.எல்.எம். மருத்துவமனை சந்திப்பில் இருந்து புத்தூர் மராத்தி கேட் வரை 22.6 கி.மீ தூரத்திற்கு சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.600 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சாலை அமைப்பதால் சாலையின் இருபுறமும் உள்ள புத்தூர், ரேணிகுண்டா, வடமலைப்பேட்டை மண்டலங்களில் உள்ள 19க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

மேலும் நீண்ட தூர வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் தனித்தனி பாதைகளில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படாது. இந்தபணிகள் முடிந்ததும், திருப்பதியிலிருந்து சென்னைக்கு பயணம் மிகவும் எளிதாகிவிடும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Tirupati ,Tirumalai ,Lord Shiva ,Tirupati Ezhumalaiyan Temple.… ,
× RELATED கேரளா பேரவை தேர்தலில் நடிகை பாவனா...