நன்றி குங்குமம் தோழி
சிலப்பதிகாரத் தூதுவர்களாக அரசுப் பள்ளி மாணவிகள்!
முத்தமிழால் சங்கமிக்கும் சிலப்பதிகாரம் 5,270 அடிகள் கொண்டது. அரசுப் பள்ளி மாணவிகளான வேணி மற்றும் வீரச்செல்வி இருவரும் சிலப்பதிகாரத்தில் சாதனை படைத்து, ‘ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
மும்பை அணிக்கு தேர்வான கமலினி
பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் என மூன்று துறையில் ஆல்ரவுண்டராக திகழ்ந்த மதுரையை சேர்ந்த 16 வயது கமலினியை மும்பை அணியில் விளையாட 1.60 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்தது மும்பை அணி.
Rarest of Rare Cases
கேரள பாறைசாலை பகுதியில், காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில், க்ரிஷ்மா என்ற பெண்ணுக்கு நெய்யட்டிங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய அதே நாளில், கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், சியல்டா நீதிமன்றம் சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியப் பெண்கள்
உலகில் சாதனை படைத்த 50 வயதுக்கு மேற்பட்ட பிரபலங்களின் பட்டியலை அமெரிக்க வர்த்தக நாளிதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஊர்மிளா ஆஷல், கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் இடம் பிடித்தனர்.
முதல் பெண் விமானி!
இந்திய விமானப் படையின் முக்கிய சொத்தாக கருதப்படுகிற ஜாக்குவார் போர் விமானப் படையில் ஒரு பெண் விமானி கூட இல்லாத நிலையில், ஃப்ளையில் ஆபீசர் தனுஷ்கா சிங், ஜாக்குவார் படையில் நிரந்தரமாய் சேர்க்கப்பட்ட முதல் பெண் விமானி என்ற சிறப்பை தன் வசமாக்கினார்.
சுனிதா வில்லியம்ஸ் திக்… திக்… நிமிடங்கள்!
அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த இருவர், ஜப்பான் நாட்டின் ஜாக்ஸாவை சேர்ந்த ஒருவர், ரஷ்யாவின் ராஸ்கோஸ்மாஸை சேர்ந்த ஒருவர் என நால்வர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்து, சுனிதா வில்லியம்ஸ் உட்பட நால்வர் குழுவை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்தது.
ஒலிம்பிக்ஸ் நம்பிக்கை!
2025க்கான உலகக் கோப்பை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வென்ற சுருச்சி இந்தர் சிங், இரட்டையர் ஜோடியில் சவுரப் சவுத்திரியுடன் இணைந்து 10 மீட்டர் தூர ஏர் பிஸ்டல் சுடும் போட்டியிலும் பதக்கம் வென்றார்.
சாதனை படைத்த லேடி காக
உலகப் புகழ் பெற்ற பாடகி லேடி காக, பிரேசிலில் ரியோ நகரில் கோபகபான கடற்கரையில் நடத்திய இசை நிகழ்ச்சியில் சுமார் 25 லட்சம் பேர் நேரடியாகப் பார்வையிட்டனர். ஒரு பெண் இசைக் கலைஞரின் நிகழ்ச்சிக்கு இத்தனை லட்சம் பேர் வந்தது இதுவே முதல் முறை.
Operation Sindoor
லெப்டினென்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோ மிகா சிங் இருவரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில்
ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தி பயங்கரவாத முகாம்களை களைந்தனர்.
96 வயதில் பத்மஸ்ரீ விருது
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் பீமவா டொடடபாலப்பா ஷில்லேக்யாதரா பொம்மலாட்டக் கலையில் சர்வதே அளவில் புகழ் பெற்றவர். ஜனாதிபதி திரௌபதி முர்மு விடமிருந்து பத்மஸ்ரீ விருதை முதுமையில் தள்ளாடியபடி நடந்து வந்து பெற்றது கவனம் ஈர்த்தது.
இலவச நூலகம் அமைக்கும் சிறுமி
ஹைதராபாத்தைச் சேர்ந்த 13 வயதே ஆன ஆகர்ஷனா தனது 9 வயதில் இருந்தே நூலகம் அமைக்கும் செயலில் ஈடுபட்ட வர். இதுவரை 19 இலவச நூலகங்களை அமைத்திருக்கிறார்.
ஆழ்கடலில் 50 ஆயிரம் கிலோ மீட்டர்
கடந்த 8 மாதங்களாக இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகளான லெப்டினென்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமி, லெப்டினென்ட் கமாண்டர் தில்னா கோனாத் இருவரும் ஆர்ப்பரிக்கும் கடலில் ‘ஐ.என்.எஸ்.வி தாரிணி’ என்ற சிறிய படகில் இரவு பகல் பயணித்து வரலாறு படைத்தனர்.
விருது பெற்ற தமிழக செவிலியர்கள்
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 15 செவிலியர்களை தேர்ந்தெடுத்து ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவிக்கிறார். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அலமேலு மற்றும் மணிமொழி இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
புற்றுநோயிலிருந்து மீண்ட உலக அழகி
‘நான் உயிருடன் இருப்பதே எனக்கு பரிசுதான்’ என்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது ஓபல் சக்சாடா சுவாங் ஸ்ரீ, ‘வெற்றி அழகுக்கு மட்டுமல்ல, மனத் துணிவுக்கும், வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும் கிடைத்த மகுடமாகும்’ என்கிறார். இவரது 16 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்.
7 கண்டங்களை தொட்ட முதல் தமிழ்ப் பெண்
விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியை சேர்ந்த, முத்தமிழ் செல்வி, 7 கண்டங்களின் மிக உயரமான சிகரங்களைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமை பெற்றுள்ளார்.
இந்திய செவிலியருக்கு ஏமனில் தூக்கு
ஏமன் நாட்டில் 2017ல் நடந்த ஒரு கொலை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.
செஸ் உலகக் கோப்பை வென்ற இந்தியப் பெண்!
நாக்பூரைச் சேர்ந்த 19 வயது திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று, செஸ் மகளிர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டமும் இவர் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. குறிப்பாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 4 பெண்களில் ஒருவராக திவ்யா இருக்கிறார்.
விளக்காய் ஒளிர்ந்த கல்வியாளர்
தமிழ்நாட்டின் கல்வித் துறையில் பெண்களின் பங்களிப்பை உயர்த்திய முன்னோடி கல்வியாளர், எழுத்தாளர், சமூகப் போராளி வே. வசந்திதேவி தனது 86 வயதில் காலமானார்.
சுற்றுலா தூதுவராக சாரா டெண்டுல்கர்
கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் ஒரே மகளான சாரா டெண்டுல்கர் ஃபேஷன் உலகின் ஸ்டைல் ஐகானாக வலம் வருபவர். உலகின் ஒவ்வொரு நாட்டின் பிரபலங்களையும் சுற்றுலாத் தூதுவராக நியமித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவில் சாரா டெண்டுல்கரை நியமித்துள்ளது.
உலக மேடையில் சென்னை சிறுமி
சென்னையை சேர்ந்த 10 வயது சிறுமி மாயா நீலகண்டன், தனது கித்தார் இசை மூலம் கர்நாடக இசையையும், ராப் இசையையும் இணைத்து மேடையை அதிரவிட்டது உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களின் இதயத்தை வசீகரித்தது.
தங்க மங்கைகள்
அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார். அதேபோல் நீரு தாண்டா, ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார்.
பாறை பொறியியல் துறையில் பெண்
செனாப் ரயில் பாலத் திட்டத்தை, தனது தொலைநோக்குப் பார்வை, திறமை மற்றும் அர்ப்பணிப்பால் வடிவமைத்து கூடுதல் சிறப்பு மிக்கதாய் மாற்றியவர், ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாறை பொறியாளர் மாதவி லதா.
சாதனைப் பெண்கள்
உலக குத்துச்சண்டை போட்டியில், 48 கிலோ எடைப் பிரிவில், ஹரியானாவைச் சேர்ந்த வீராங்கனைகள் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கமும், 57 கிலோ எடைப் பிரிவில் ஜெய்ஸ் மின்லம்போரியா தங்கப் பதக்கமும், 80 கிலே எடைப்பிரிவில், பூஜா ராணி வெண்கலப் பதக்கமும், 80 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவில் நுபுர் ஷியோரன் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். இந்த நால்வரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
பீலா வெங்கடேசன் மறைவு
தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கொரோனா பேரிடர் காலத்தில், சுகாதாரத் துறை செயலாளர் பதவிக்கு வந்து, முன்களப் பணியாளராய் ஊடகங்களில் தோன்றி, பொதுமக்களுக்கு, கொரோனா பெருந்தொற்று தகவல்களை இவர் வழங்கியதை எளிதில் மறக்க முடியாது.
மரியா கொரினா மச்சாடோ
வெனிசுலாவின் இரும்பு மனுஷியான இவர், அமைதிக்கான நோபல் பரிசுக்காக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
முதல் பெண் பேராயர்
இங்கிலாந்தில் கடந்த 1400 வருடங்களாக 105 பேர் பேராயர் பதவியில் இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே ஆண்கள். 106வது பேராயராகப் பதவியேற்றிருக்கிறார் சாரா மலாலி. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு துறையின் மரபை உடைத்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இவர்.
வில்வித்தை சாம்பியன் ஷீத்தல் தேவி
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், ஷீத்தல் தேவி தங்கப் பதக்கம் வென்று, உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
சமூக நீதிக்கான வைக்கம் விருது
2025ம் ஆண்டிற்கான வைக்கம் விருது அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தேன்மொழி சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.
முதல் இந்தியப் பெண் ரேஸர்
சர்வதேச கார் பந்தயத்தில் ஃபெராரி காரை ஓட்டிய முதல் இந்தியப் பெண் ரேஸர் என்ற பெருமையை தன் வசமாக்கியிருக்கிறார் டயானா பண்டோல்.
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட்
2025 கிரிக்கெட் போட்டியை உத்வேகத்துடனும், விவேகத்துடனும் விளையாடி முதல் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி.
72 வயது மலையேற்ற வீராங்கனை
டான்சானியா நாட்டில் அமைந்திருக்கும் உயரமான மலையில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் 72 வயது வித்யா சிங். கிளிமஞ்சாரோவில் ஏறிய அதிக வயதுடைய இந்தியப் பெண்ணும் இவர்தான்.
பார்வையற்றோர் உலகக் கோப்பை
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற, பார்வையற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை வென்றிருக்கின்றனர் இந்திய மகளிர் அணி.
கேரம் உலக சாம்பியன்ஷிப் போட்டி
மலேசியாவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில், இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த கீர்த்தனா ஒற்றையர், இரட்டையர், குழு ஆகிய மூன்று பிரவுகளிலும் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
தொகுப்பு: தோழி டீம்
