நன்றி குங்குமம் தோழி
செவன் டவர் அடுக்குமாடி கட்டடம், காலை பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. “மணி ஏழாகுது யாதேஷை எழுப்பு அனி” என்று குரல் கொடுத்தாள் சுதா.செல்ஃபில் இருந்த ரெஜிஸ்டர் தபாலை பார்த்து, ‘‘அனி சொல்ல மறந்துட்டேன்… நேத்து உன் பெயருக்கு ரிஜிஸ்டர் தபால் வந்தது” என்று நீட்டினாள். வாங்கி வாசித்தவன் முகம் மலர்ந்தது. “சு… தா” என வீடே அலறும்படி கத்தினான்.
“என்ன பிராஃபிட்டா எவ்வளவு ஷேர்?”
“ஐயோ! செல்ல பொண்டாட்டி, அதுக்கு மேலே…”
“நாம இப்பவே சிவகங்கை
மாவட்டத்திற்கு போறோம்…”
“நீங்க போங்க என்னால அங்கெல்லாம் வர முடியாது.”
“சுதா விஷயம் இருக்கு கிளம்பு…”
சென்னையில் இருந்து புறப்பட்டனர்.
சிவகங்கை எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபாரத்தில் நின்றது. பெட்டியுடன் சுதா இறங்கினாள். யாதேஷை தோளில் தூக்கியவாறு அனிருத் இறங்கினான். எதிரே புளி மூட்டை பூங்காவனம் முகமே தாமரைப்பூவாக மலர்ந்தது. கருத்த மேனி, எடுப்பான வெள்ளைப் பற்கள், சுருண்ட கேசம்.
“நல்லா இருக்கியா புளி மூட்ட…”
“நல்லா இருக்கேன் சாமி…”
“பெரிய ஐயா எப்படி இருக்காரு புளி மூட்ட?” கேட்கும் பொழுதே அனிருத் கண்கள் குளமானது.
“இந்த எடுபிடி புளிமூட்ட பூங்காவனம் இருக்கிற வரைக்கும் அவருக்கு என்ன குற, சாமி…”
காரில் அவர்கள் மூவரையும் ஏற்றிவிட்டு, பூங்காவனம் சைக்கிளில் ஏறி வீடு வந்து சேர்ந்தான்.
வரலட்சுமி வில்லாவில் கார் நின்றது. சோஃபாவில் அமர்ந்திருந்த கதிரேச செட்டியார் தன் மகன், பேரனை வரவேற்க தொந்தி குலுங்க வேகமாக வெளியே ஓடி வந்தார்.
அவர் தோளில் யாதேஷ் தொற்றிக் கொண்டான்.“என்ன பெத்த ராஜா… இப்பதான் வழி தெரியுதா? சீம துரை வந்தாச்சு கண்ணாத்தா வெளிய வா” எனக் குரல் கொடுத்தார்.
அவள் வந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
கூடத்தில் அனைவரும் அமர்ந்திருக்க, ‘‘அண்ணா தங்கராசு ஐயா வருவாரு, சொத்தை பிரிச்சிடலாம்னு சொன்னாரு. கணக்கு வழக்கு பற்றி உன்கிட்டயும் பேசணும்னு சொன்னாரு’’ என்றார் கதிரேச செட்டியார்.
“மொதல்ல பம்பு செட்ல போயி குளிச்சிட்டு வர்றேன் ஐயா…”
“சரி, சுருக்கப் போயிட்டு வாங்க” என்றார் கதிரேசன். மூவரும் பம்பு செட்டில் குளிக்கும் போது சுதாவின் வைர மோதிரம் கழன்று நீரில் விழுந்தது. அதை கவனிக்காமல் அவள் குளித்து முடித்து வெளியே வந்த பின்புதான் பார்த்தாள்.
“அனி… ஐயோ என் வெட்டிங் ரிங்கை காணோம்…’’ பதற்றத்துடன் கதறினாள். “தாயி பதறாதே… கண்ணாத்தா பொருள கண்ணுல காட்டுவா தாயி… பயப்படாதே’’ என்று நாலு பக்கமும் தேடினான் பூங்காவனம்.“சுதா கவலைப்படாத கிடைச்சிடும்” என்று ஆறுதல் அளித்தான் அனிருத். மோதிரம் மண்ணில் புதைந்திருக்க சூரிய ஒளி பட்டு வைரம் மின்னியது.
“இதுதானே உங்க மோதிரம் தாயி’’ என்று எடுத்துக் காட்டினான் புளி மூட்ட.“எவ்வளவு கொடுத்தாலும் தகும்பா’’ என்று கேலி செய்தான் அனி.“புளி என் உயிரையே மீட்டுக் கொடுத்திருக்க… உனக்கு என்ன கைமாறு செய்வேன்’’ என்றாள்.‘‘தாயி உன் இஷ்டம் தாயி… நீ என்ன கொடுத்தாலும் பரவாயில்லை” என்று அவன் யதார்த்தமாக சொன்னதும் காற்றில் அவள் சிந்தனை ஓடியது… எண்கள் கிடுகிடுவென முன்னே வந்து நின்றது.
“பம்பு செட்டில் மோதிரம் மட்டும் காணாமல் போய் இருந்தா?”… நெஞ்சுக்குள் கையை வைத்துக்கொண்டு பதறினாள் சுதா.
“தேவையில்லாத பயத்தை வளர்த்துக்காதே. அதுதான் கிடைச்சிடுச்சுல… கவலையை விடு… சரி காட்டு பங்களாவுக்கு போகலாம்…’’
குதூகலத்துடன் காரில் பங்களாவிற்கு சென்றனர் மூவரும். அறைக்குச் சென்றதும் ஒருவிதமான மோகத்துடன் ஒருவரை ஒருவர் நோக்க பரவசம் அடைந்தனர்.
அதே சமயம் புளிமூட்ட யாதேஷை தனி அறைக்கு அழைத்துச் சென்று கதை சொன்னான்.
சமையல்காரர், “சாப்பாடு ரெடி” என்று டைனிங் ஹாலில் அழைத்ததும் டைனிங் ஹாலில் அனைவரும் ஒன்று கூடினர். கிண்டலும் கேலியுமாக சாப்பிட்டனர். மறுநாள் வரப்பின் மீது நடக்கையில் புதருக்கு அருகே இருந்த பாம்பு ஒன்று வெளியே வந்து படம் எடுத்து ஆடியது. நகர முடியாமல் திகைத்து ஸ்தம்பித்து நின்றாள் சுதா.
புளிமூட்ட, பாம்பை பார்த்ததும், குழந்தையை கீழே விட்டுவிட்டு, இடக் கையினால் லாவகமாக வாலை தூக்கிப் பிடித்து தலைக்கு மேலே மூன்று சுத்து கிறுகிறுவென சுற்றி தூக்கி அடித்தான். அது மரத்தில் மோதி இரண்டாகக் கிழிந்து கீழே விழுந்தது. ‘‘ஐயோ கடவுளே… ஏதாவது உசுருக்கு ஆயிருந்தா” என்று பதறினாள்.
“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது தாயி” என சமாதானம் செய்தான் புளிமூட்ட.அவ்வளவு பயத்திலும் அவ ஏதோ முணுமுணுக்க வானத்தில் எண்கள் பதிவாயின.“சுதா சுதா…” அவள் தோளை குலுக்கினான். நினைவுக்கு வந்தவள், ‘‘ஊருக்குப் போலாங்க” என்றாள்.“சரி சரி கிளம்பலாம்… இப்ப நம்ம முதல்ல வீட்டுக்குப் போகலாம்.’’ “என்னால இங்க தங்க முடியாதுங்க… உடனே கிளம்பணும்.” “தாயி ஊர் திருவிழா இருக்கு… முக்கியமான பேச்சை எல்லாம் பேசணும் தாயி… இரும்மா’’ என அவளுக்கு எடுத்துக் கூறினான் புளி மூட்ட.அதற்குள் பெரியவர் கதிரேசன், ‘‘தாயி நடந்தது எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். ஊர் திருவிழா நடக்கிற வரை இங்கே இரும்மா” என்று அவளிடத்தில் கேட்டார்.‘‘திருவிழா முடிச்சதும் கிளம்பிடுங்க…”“இல்ல, ஊர் திருவிழா முடிஞ்ச அன்னைக்கு ராத்திரியே நாங்க கிளம்பிடறோம்” என்றாள்.
“12 வருடமாக மூடிக் கிடந்த கண்ட தேவி கோயில் திறக்குறாங்க. அனிருத்துக்கு தான் பரிவட்டம். சொத்து பிரிக்கும் போது முதல் மரியாதையும் நமக்குதான் தாயி’’ என்று அவர் கூறியதும் மறுக்க முடியாமல் தலையாட்டினாள். பீரோவை திறந்தாள். ஒன்னு, ரெண்டு, மூணு என்று அவள் தலையை நிமிர்த்தி பார்க்கின்ற பொழுது சுவரிலே எண்கள் கிடு கிடுவென வந்து சென்றது. பண்ணையார் கதிரேசன் செட்டியார் ஒன்னுவிட்ட தம்பி மகன் ராஜசேகரன்.
அவனுக்கு அனிருத் மேலே சின்ன வயசில இருந்து தீராத பகை இருந்தது. அனிருத் இறந்தால் சொத்தில் பாதியும் ஊரு மதிப்பு, பரிவட்டமும் தனக்கு கிடைக்கும் என்று தன் கூட்டாளியோடு சேர்ந்து திட்டமிட்டான். ஊர் திருவிழா அன்று மக்கள் அனைவரும் கோயிலில் கூடியிருந்தனர். அனிருத் தன் இளம் வயதில் திருவிழாவில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தான். ஒரு வித சந்தோஷம் அவன் மனதை ஆட்கொண்டது.
கோயிலில் பரிவட்டம் கட்டி முடித்த பின்பு தீப்பந்து, கத்தி சுழற்றும் விளையாட்டு என ஒருவரை ஒருவர் வேகமாக சுழற்றி, ஆக்ரோஷமாக விளையாடினர். கோயிலில் இருந்து வெளியே வந்த அனிருத் மீது கத்திச்சண்டை போடுபவரும் தீப்பந்தம் சுழற்றியவரும் மோதிய வண்ணம் அனிருத் மீது விழுந்தனர். அவன் பரவாயில்லை என்று கையை தள்ளிவிட்டான். அந்த நேரத்தில் கையில் இருந்த கத்தியை அவன் அனிருத் மீது சொருகப் பார்த்தான். அதை கவனித்த புளிமூட்ட கத்திக்குத்து வாங்கிக் கொள்ள, போலீஸ் ராஜசேகரை கைது செய்தனர்.
சுதா பதறி அனிருத்தை பார்த்து கதறிஅழுதாள்.அனிருத், ‘‘எனக்கு ஒன்றுமில்லை” என அவளை ஆதரவாக அணைத்தான்.“நம்ம ராசாவை காப்பாத்திட்டேன்” என்றான் புளிமூட்ட. மருத்துவச்சி புளிமூட்டையின் காயத்திற்கு மருந்து போட்டு, உயிருக்கு ஆபத்தில்லை என்றாள். “புளிமூட்ட அவரை காப்பாத்திட்டீங்க” என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சுதா.
“அப்ப அவரு பசங்களுக்கு எல்லாம் நாம கல்யாணம் பண்ணிடலாம் இல்லையா சுதா’’ என்று கேட்டான் அனிருத். ‘வேண்டாம்னு சொல்ல மாட்டேன்’’ என்றவள் அவனை திரும்பிப் பார்த்து சிரித்தாள்.
வீட்டிற்கு வந்தவள், ‘‘புளி மூட்ட மக கல்யாணத்துக்கு லட்சம் ரூபாய் தரலாமா?’’ என்று அனிருத்தை கேட்டாள் சுதா. “அவரைப் பத்தி என்ன நெனச்சுக்கிட்டு இருக்க… அவர் ஒத்த பைசா வாங்க மாட்டார். என் உயிரைக் காப்பாற்றிய அவருக்கு விலை பேசுறியா மடச்சி’’ என்றான் அனிருத். அடுத்த நாள் அவர்கள் ஊருக்கு கிளம்பினர்.
புளி மூட்டயிடம், ‘‘இந்த நகையும், ஒரு லட்ச ரூபாய் பணமும் உங்க மக கல்யாணத்துக்கு’’ என்றாள் சுதா. “தாயி… நீங்க கல்யாணத்துக்கு வந்தா போதும்… இதெல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்.’’ “என் திருப்திக்காக வாங்கிக்கோ புளி மூட்ட…”வாங்கிக் கொண்டான். அவளுக்கு மனம் திருப்தி அடைந்தது. ‘‘பார்த்தீங்களா… நான் கொடுத்தேன் வாங்கிட்டாரு’’ என்பதைப்போல அனிருத்தை திரும்பிப் பார்த்தாள். அவன் ஏளனமாக சிரித்தான்.
அந்த நேரம் பஞ்சு மிட்டாய்காரன் சென்றான். யாதேஷை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு, டவுசரில் இருந்து ரூபாய் 20 எடுத்து பஞ்சு மிட்டாய் காரனிடம் கொடுத்து அதை வாங்கி அவன் மணிக்கட்டில் கட்டினார். அதே நேரம் காரில் பின்புறச்சீட்டில் சுதா கொடுத்த நகையும், பணக்கட்டில் உள்ள காந்தி தாத்தாவும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
தொகுப்பு: நீலம் மூன்
