நன்றி குங்குமம் தோழி
கே.ஆர்.மீரா
அன்றாட செய்தித்தாள்களில் நாம் படிக்கின்ற கொலை குற்றங்களுக்கு, பெண்களை மட்டுமே சமூகம் பொறுப்பாளியாக்க, ஆணின் நடத்தையை மன்னிக்கும் நாம்தான் பெண்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கி அவமானத்துக்கு உட்படுத்துகிறோம்.இன்றைய சூழலில், நம் சமூகத்தில் பெருகிவரும் தவறான உறவுகளையும், அதன் விளைவாகத் தன் உறவுகளையே பலி கொடுக்கும் நிலைக்கு பெண்கள் செல்வது அதிர்ச்சிக்குரியதே. பெண்மை, தாய்மை என, பெண்களை புனிதப்படுத்தி கொண்டாடி வரும் நிலையில், பெண்களின் வக்கிர எண்ணங்களையும், அவர்களின் அக உலகையும் அப்பட்டமாய் தன் ஒவ்வொரு படைப்பிலும் பறைசாற்றி வருகிறார் எழுத்தாளர் கே.ஆர்.மீரா.
சமகால மலையாள எழுத்துலகில் தவிர்க்க முடியாத பெண் சக்தியாக உருவெடுத்துள்ளார் இவர். பெண்ணியம் என்பது வெறும் ஆண், பெண் சமத்துவ கோஷமாக அல்ல, அது பெண்ணின் உடல், மனம், விருப்பம், எதிர்ப்பு அனைத்தையும் உள்ளடக்கிய ஆழமான அரசியல் சிந்தனையாக இருக்கிறதென, பெண்ணியத்தை கருணையோடு அணுகாமல், கூர் தீட்டி எழுதுகிறார் இவர். இவரின் அனைத்து படைப்பிலும் கனன்றெரிவது பெண்மையே.
பெண்களை மௌனியாகவும், தியாகத்தின் மறு உருவாகவும் பார்த்தும் படித்தும் வந்த நமக்கு, தன் நிலையில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாத இவரின் பெண் கதாபாத்திரங்கள் தனித்துவத்துடன் விளங்குவதோடு, பெண் கதாபாத்திரங்களை கட்டமைப்பதில் இவரும் தனித்தே மிளிர்கிறார்.இவரின் கதைகளில் வரும் பெண்களின் மனநிலையும், அதன் உண்மைத்தன்மையும், உளவியல் ரீதியாய் அச்சுறுத்தும் வகையில் இருப்பதுடன், காதலுக்காகவும், காதல் வயப்பட்ட நபரின் மீதிருக்கும் மோகத்தாலும், அவர்கள் எடுக்கின்ற முடிவுகள், கதைகளில் மட்டுமல்லாது, நம் சமூகத்தில் நடந்தேறும் பல்வேறு கொலை குற்றங்களாகவே பார்க்க முடிகிறது. இவரின் கதைகளில் வருகிற பெண் கதாபாத்திரங்கள், தன்னைச் சார்ந்தவர்களையும், தன் குழந்தைகளையுமே இழக்கத் துணியும் இடத்திற்கு நகர்கிறார்கள்.
‘மீராசாது’ என்ற தனது புதினத்தின் வழியாக, காதல் என்பது கத்தியை போன்றது. எந்தளவு நாம் ஒரு நபரின் மீது நேசம் கொள்கிறோமோ அதே அளவு அந்நபரின் மீது தீராத வன்மமாகவும் மாறி, தன்னையும் அழித்து தன் சுற்றத்தையும் அழிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை அப்பட்டமாக உருவகப்படுத்தியுள்ளார். இவரது ‘மீராசாது’ கதையின் நாயகி துளசி, நாவலின் பெயருக்கேற்ப பக்தை அல்ல. தனது காதல், உடல், உணர்ச்சி, மனம், கணவனின் உண்மைத்தன்மை மீது நாயகி உரிமை கோரும் போது, சமூகம் அதை ஏற்க மறுக்கின்றது. வஞ்சிக்கப்படும் துளசி, தனது குழந்தைகளை கொன்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து வெளியேறி மதுராவுக்கு செல்கிறார்.
மதுராவில் மொட்டையடிக்கப்பட்டு, பிச்சையெடுத்து வாழ்கின்ற பத்தாயிரத்தில் ஒருத்தியாய் தானும் வாழுகிற வாழ்வை காதலின் வெளிப்பாடாக துளசி எடுக்கவில்லை. அவனுடனான அவளின் உறுதியான காதல், கடுமையான பழிவாங்கலாய் உருக்கொள்கிறது. ‘அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ என்ற கதையின் போக்கு, ஒரு பெண் தன்னை காதலுக்காக நிரூபித்துக் கொண்டே இருப்பதாய் நகர்கிறது. நாயகியின் வாழ்வில் வரும் ஆண்கள், அவளை ஒரு பொருட்டாகக் கருதாமல் கடந்து செல்கிறார்கள். எனினும் தான் அனுபவித்த வலிகளை, அப்பெண் மீண்டும் மீண்டும் தேடிச்செல்வது, சிறு வயதில் அவளுக்கு நேர்ந்த அநீதியை நினைவுப் படுத்துவதாகவே உள்ளது.
தனக்கான அங்கீகாரத்தை நாயகி கேட்கும் போது அது மறுக்கப்பட்ட நிலையில், வன்முறைக்குட்பட்டு அவதியுற நேரிடுகிறது. தன்னுடைய இயல்பு வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வந்தபின், வலிகளை தந்த பழைய காதலன் மீண்டும் அவளிடம் வருகிறான். இம்முறை மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியாக வருகிறான். இம்முறையேனும் அவன் காதல் அவளைக் கைவிடாது என்று கருதிய போது மீண்டும் அவனால் நிர்வாணமாக்கப்பட்டு, காதலில் தோல்வியுற்று நிற்கிறாள்.
சில நினைவுகளை மறக்க முயன்றும், அது முடியாமல், நம் வாழ்வில் மீண்டும் மீண்டும் ஏற்படுத்தும் வலிகளை, வடுக்களை இப்புதினம் பேசி அதிர்ச்சியூட்டுவதுடன், பெண்களின் அக உலகை அழகாகவும், வலியுடனும், உண்மையுடனும் வெளிப்படுத்திச் செல்கிறது.‘தேவதையின் மச்சங்கள்’ கதையில், குழந்தைகள் பெற்றுக்கொள்வதே பெண்களின் கடமை என குறிப்பிட்டு, கழுதை பொதி சுமப்பது துயரமாகுமா, அதுபோலத்தான் கதையின் நாயகியும் காதலை பொதி போல் சுமக்கிறாள் என்கிறார்.
தான் காதலித்து மணந்து கொண்ட கணவனே, தனது நண்பனுக்கு மனைவியை இரையாக்கி, அவளின் நேசத்தை கொச்சைப்படுத்துகிறான். அவ்வாழ்வில் இருந்து வெளியேறி சமூகத்தின் கட்டமைப்புகளுக்கும் சில கயவர்களுக்கும் பொருந்தி ஒரு வாழ்வை மேற்கொள்கிறாள். மீண்டும் காதல் வயப்படுகிறாள். காதலின் பரிசாய் காதலனை போலவே மச்சத்துடன் குழந்தை பெறுகிறாள். அதன் பிறகு அவளுக்கு அவளது கணவன் மூலம் அரங்கேறும் குரூரம் அநீதியின் உச்சம்.
‘கருநீலம்’ கதையில் கவித்துவமான, கற்பனையான ஒரு உலகில் நாயகி பயணிப்பதாய் நகரும். பெண்ணிற்கு சாதாரணமாய் தோன்றும் காதலை, வர்ணனைகளோடு ஆசிரியர் இதில் எழுதுகிறார். கதையில் ‘கருநீலம்’ என்பது நிறமல்ல… பெண்ணின் ஆழ்மனதில் பதிந்துள்ள வேதனை. இதில், கதையின் நாயகி தன்னை கருநாகமாய் உருவகித்துக் கொள்கிறாள். அவளது காதலன் குறித்து அவளின் வர்ணனை கற்பனைக்கும் எட்டாத வகையில், அதே நேரத்தில் மயக்கும் வகையில் இருக்கிறது. மனதை கட்டுப்படுத்தாவிடில், இந்தப் பயணம் எத்தகைய சுயநலத்தோடு இருக்கும் என்பதையும் கதை நமக்கு உணர்த்துகிறது.
நாம் நினைப்பதை எல்லாம் நிகழ்த்திப் பார்க்காமல், நம்மை நாமே கட்டுக்குள் கொண்டுவராவிடில் என்ன நேரிடும் என்பதையும், நம்மை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதையும் கதையில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.‘கபர்’ நாவலில் முன்னோர்கள் குறித்து, நம் குடும்பங்களில் காலங்காலமாக நிலவி வருகிற கதைகள், அதன் உண்மைத் தன்மை குறித்து பேசுவதாக உள்ளது. கதையின் நாயகிக்கு முன்பாக நாம் கவனிக்க வேண்டிய கதாபாத்திரம் நாயகியின் தாய். வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை கவனிப்பதில் தொடங்கி, பொருளாதாரத்திலும் பக்கபலமாக செயல்படுவது வரை, தன் வாழ்க்கை முழுவதையும் தனது குடும்பத்திற்காகவே அர்ப்பணிக்கிறார் நாயகியின் தாய். இந்தச் சூழலில் வேலைக்குச் செல்லும் போதும், வரும் போதும் நாய் ஒன்று அவருடன் துணையாக வருகிறது.
ஒரு நாள் நாய்க்கு அடிபடவே, அதனைத் தன்னுடன் எடுத்துவந்து முதலுதவி செய்கிறார். இதை விரும்பாத அவரின் கணவர், ஒன்று நாய் இருக்க வேண்டும் அல்லது நான் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்றை தீர்மானி என நிர்பந்திக்கிறார். இத்தனை ஆண்டுகால இல்லறத்தில், தன்னிச்சையாக செயல்பட முடியாத, முடிவெடுக்கக்கூட முடியாத தன் நிலையை எண்ணி, அக்கணமே நாய் குட்டியுடன், குடும்பத்தைவிட்டு வெளியேருகிறார் அந்தத் தாய். தனது குடும்பத்திற்காகவே தன் வாழ்வை அர்ப்பணிக்கிற பெண்களுக்கு, தனது வீட்டில் ஒரு அறை கூட அவர்களுக்கென தனியாக இல்லை என்பதே நிதர்சனம்.
இதில் கதையின் நாயகி பாவனா சட்டக் கல்லூரியில் பயிலும் போதே தன்னைவிட உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர் மீது காதல் வயப்படுகிறார். காதலுக்காக சில போராட்டங்களை செய்து, திருமணமும் செய்து கொள்கிறார். வழக்கறிஞராக பணிபுரியும் வரை சுமூகமாக செல்லும் வாழ்க்கை, நீதிபதியாய் அவர் உயரும் கட்டத்தில் ஆட்டம் காண்கிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஏடிஹெச்டி குறைபாட்டுடன் பிறக்க, திருமண வாழ்வு முடிவுக்கு வருகிறது.
கதையின் மையமான கபர் குறித்து வரும் வழக்கும், அதை தொடுக்கும் கயாலுதீன்-பாவனாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களும், அவர்கள் மேற்கொள்கிற மாயாஜாலத் தந்திரங்களும் நம்மை வியக்க வைக்கிறது. ‘கபர்’ சாதாரண கதை அல்ல… மரணத்தைப் பற்றிய தியானம். பெண் அடையாளத்தைப் பற்றிய விசாரணை. சமூக அதிகார அமைப்புகளை எதிர்கொள்ளும் ஒரு உளவியல் பயணம்.
‘ஆராச்சார்’ கதையின் பின்னணி கொல்கத்தாவை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஆராச்சார் என்பது கதையல்ல… அதிகாரம், நீதி, பெண் சுதந்திரம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகிற நாவலாய் நகர்கிறது. மரண தண்டனையை நிறைவேற்றும் ஆராச்சார் குடும்பத்தின் கடைசி வாரிசான பெண்தான் கதையின் மையம். ஆண்கள் மட்டுமே செய்துவரும் இந்தக் கொடூரத் தொழிலை, சமூக ஒடுக்குமுறை, அரசியல் அழுத்தம், குடும்ப சாபம் காரணமாக ஒரு பெண் ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாய் கதை நகர்கிறது.
‘யூதாஸின் நற்செய்தி’ என்கிற நாவல், பிரேமா மற்றும் யூதாஸின் காதலை, அவர்களின் உளவியல் போராட்டங்களை பேசுகிறது. கதை நகரும் போதே, அவர்களுக்கிடையேயான காதல், வன்முறை, குற்ற உணர்ச்சி மற்றும் அரசியலை பேசியவாறே நகர்கிறது. பெண்களை புனிதப்படுத்தி வரையறைகளுக்கு உட்படுத்தும் இன்றைய காலகட்டத்திலும், கே.ஆர்.மீராவின் ஒவ்வொரு கதைகளும் கதாபாத்திரங்களும் ஒன்றையொன்று மிஞ்சுவதாகவே இருக்கிறது. தனது அனைத்து படைப்புகளிலும் தனித்துவமான முன்மாதிரியை உருவாக்கி, அந்தக் கதாப்பாத்திரங்களுக்கு உளவியல் ரீதியாக விடையளிக்கிறார் இவர்.
தொகுப்பு: காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
