நன்றி குங்குமம் தோழி
பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் ஸ்பா, மசாஜ் அல்லது அழகு நிலையங்களில் வேலை பார்ப்பது வழக்கம். அவர்களால் உணவுத் துறையிலும் திறமையாக செயல்பட முடியும் என்று நிரூபித்துள்ளார் ஷாலினி கண்ணா சோதி. இவர் தில்லியில் உள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் இயக்குனர். தற்போது இவர் டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சிறுசேரியில் டி.சி.எஸ் அலுவலக வளாகத்தில் ‘பிளைண்ட் பேக்’ என்ற பெயரில் கஃபே ஒன்றை அமைத்துள்ளார்.
இங்கு செஃப்பாக வேலை பார்ப்பவர்கள் அனைவரும் பார்வைத் திறன் குறைபாடு கொண்டவர்கள். பிளைண்ட் பேக் கஃபே உருவான பாதை குறித்து நம்மிடம் மனம் திறந்தார் ஷாலினி. ‘‘எங்களின் அமைப்பு முழுக்க முழுக்க ஒரு பயிற்சி மையம். முதலில் பார்வைத் திறன் குறைபாடு கொண்ட பெண்களுக்கு மட்டுமே பயிற்சி அளித்தோம். தற்போது ஆண்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். பார்வைத் திறன் குறைபாடு உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது தான் எங்க அமைப்பின் முக்கிய நோக்கம். எங்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் கண்டறிதல் துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு பார்வைத்திறன் குறைபாடு இருந்தாலும், மற்ற திறன்கள் கூடுதலாக வேலை செய்யும். சிறு கட்டியையும் துல்லியமாக கண்டறிந்து விடுவார்கள்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு சமையல் பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம். அதற்கு காரணம் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு தனித்து வாழும் சூழல் ஏற்பட்டால் தங்களுக்கான வேலை குறிப்பாக உணவினை அவர்களே சமைத்துக் கொள்ள பயிற்சி அளித்தோம். அப்போது எங்களிடம் பயிற்சி பெற்ற ஒரு பெண் என்னிடம், இங்குள்ள நிறுவனத்தில் ஒரு கேன்டீன் திறக்கச் சொல்லியும் அதில் அவள் சமைப்பதாக கூறினாள். முதலில் தயங்கினேன். ஆனால், அவளின் தன்னம்பிக்கையை பார்த்து கேன்டீன் துவங்கினோம். இந்த சமயத்தில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது என் கணவர் இந்த கேன்டீனை மக்களின் பயன்பாட்டிற்கும் திறக்கலாமேன்னு சொன்னார்.
வெளியாட்களுக்கு என்றால் அதிகளவில் சமைக்கணும். சமைப்பதோ பார்வைத் திறன் குறைபாடு கொண்ட பெண். சமாளிக்க முடியுமான்னு யோசித்த போது செய்வதாக முன்வந்தார் அந்தப் பெண். மக்களும் சாப்பிட வந்தார்கள். அதுவே எங்களுக்கு மோடிவேஷனாக மாறியது. அதனைத் தொடர்ந்து உணவு சமைப்பது மட்டுமில்லாமல் பேக்கிங் பயிற்சிகளும் அளித்தோம். தாஜ் ஓட்டலில் எங்களுக்கு கஃபே திறக்க அனுமதி கொடுத்தார்கள். அதைப் பார்த்துதான் டி.சி.எஸ் நிறுவனம் தங்களின் அலுவலக கிளையில் கேன்டீன் திறக்கச் சொல்லி கேட்டாங்க. அப்படித்தான் பிளைண்ட் பேக் உருவானது.
முதலில் மும்பை தற்போது சென்னையில்’’ என்றவர், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பான பயிற்சி குறித்து விவரித்தார்.‘‘நான் 23 வருடமாக இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறேன். பொதுவாக அவர்களுக்கு ஆபத்தினை விளைவிக்காத வேலையினைதான் பார்த்து தருவோம். சமையல் என்றால் கேஸ் அடுப்பு, நெருப்பு, கத்தியினை கையாள வேண்டும். சிறிது கவனம் சிதறினாலும் ஆபத்துதான். பயிற்சி அளித்த போது இவர்கள் வெங்காயம், காய்கறியினை வெட்டுவதைப் பார்த்து நானே மிரண்டு போனேன்.
முதலில் இவர்களுக்கு எளிதாக சமைக்கக்கூடிய உணவுகளைதான் சொல்லிக் கொடுத்தோம். இப்போது இவர்கள் அனைத்து உணவுகளையும் சமைக்கிறார்கள். இவர்களுக்காக ஸ்பெஷல் உபகரணங்களை வடிவமைத்தோம். கேஸ் அடுப்பு முதல் பேக்கிங் இயந்திரம் என் அவர்களுக்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறோம். என் கணவர்தான் பல ஆய்வுகள் செய்து வடிமைக்க திட்டமிட்டார்.
ஆரம்பத்தில் சமையல் துறையில் இவர்களை நியமிக்க பலர் யோசித்தார்கள். ஓட்டல் தாஜில் இருந்து செஃப் ஒருவர் நேரடியாக வந்து இவர்களின் சமையல் திறமையை ஆய்வு செய்தார். இவர்கள் சமைக்கும் திறனைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர் அதன் பிறகுதான் இவர்களுக்கு வாய்ப்பினை கொடுத்தார். எல்லோரும் எல்லா உணவினையும் சமைக்க விரும்ப மாட்டார்கள். சிலர் பேக்கிங் விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சி அளிக்கிறோம்.
இவர்களுக்கு பயிற்சி அளித்தவர்களும் பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களை நியமித்தோம். அப்போதுதான் தங்களாலும் சமைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் ஏற்படும். மேலும், ஒரு உணவு முழுமையாக சமைத்த பிறகு எவ்வாறு இருக்கும் என்று தொட்டும், சுவைத்தும் பார்க்கச் சொல்வோம்’’ என்றவர், சென்னையை தொடர்ந்து பூனே, கொல்கத்தாவில் உள்ள டி.சி.எஸ் நிறுவன கிளைகளில் கஃபேயினை திறக்க இருப்பதாக கூறினார்.
‘‘நானும் இங்குள்ளவர்கள் எல்லோரும் தில்லியில்தான் சமையல் பயிற்சி பெற்றோம்’’ என்று பேசத் துவங்கினார் பார்வைத் திறன் குறைபாடு கொண்டவர் கஃபேயின் செஃப்பான பாவனி. ‘‘என்னுடைய பூர்வீகம் ஆந்திரா. எங்களுக்கான தனிப்பட்ட குழு மூலம் இந்தப் பயிற்சி குறித்து தெரிந்து கொண்டேன். தில்லியில் மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு இங்கு வேலை பார்க்கிறேன். வட இந்திய உணவான ராஜ்மா, தால் மக்கானி எல்லாம் சமைப்பேன். இங்கு பயிற்சியில் காய்கறிகளை நறுக்குவது, தொடு உணர்தல் மூலம் உணவுகளை எவ்வாறு பதம் பார்ப்பது எல்லாம் தெரிந்து கொண்டேன்.
கிச்சனில் சமைக்கும் போது வேகமாக செயல்படணும். அதற்கான பயிற்சியும் கொடுத்திருந்தாங்க. முதல் நாளே என்ன மெனுன்னு முடிவு செய்திடுவோம். அதற்கு ஏற்பதான் நாங்க உணவுகளை தயாரிப்போம்’’ என்றவரை தொடர்ந்தார் வெண்ணிலா.‘‘+2 வரை படிச்சிருக்கேன். என்னுடைய ஸ்பெஷாலிட்டி புளிசாதம், சாம்பார் சாதம், நூடுல்ஸ், மஞ்சூரியன் கிரேவி, பிரெஞ்ச் பிரைஸ். பயிற்சியில் ஒரு உணவினை சமைக்க தேவைப்படும் பொருளின் அளவினை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் 30 பேர் என்றாலும் நாங்க எளிதாக சமைத்துவிடுவோம். சமைக்கும் போது ஏதாவது பிரச்னை இருந்தால் இங்கு வாலன்டியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லித் தருவார்கள். ஒவ்ெவாரு உணவினை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று ஆடியோ பதிவு உள்ளது. அதைக் கேட்டும் எங்களின் சந்தேகத்தை சரி செய்து கொள்வோம்’’ என்றவரை தொடர்ந்தார் கஃபேயின் பேக்கர் மாதேஷ்.
‘‘எனக்கு சொந்த ஊர் அரியலூர். இங்கு உணவுப் பயிற்சி அளித்தாலும் எனக்கு பேக்கிங் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. பேக்கிங்கிற்கு அளவுதான் முக்கியம். ஒரு கிலோ மஃபின்ஸ் செய்ய எந்தப் பொருட்கள் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற கணக்கு இருக்கு. அதன் படி எவ்வளவு கிலோ கேக் என்றாலும் என்னால் செய்ய முடியும். இது என்னுடைய முதல் வேலை. இதில் மேலும் பல வகையான கேக் வெரைட்டியை அறிமுகம் செய்ய இருக்கிறேன்’’ என்றவரை தொடர்ந்தார் நவீன்குமார்.
‘‘நான் சிவகங்கையை சேர்ந்தவன். எனக்கு தெரிந்தவர் மூலமாகத்தான் இங்கு பயிற்சி எடுத்தேன். காய்கறி, வெங்காயம் எல்லாம் பொடியாகவும், ஜுலியன் முறையில் கத்தரிப்பதில் நான் எக்ஸ்பர்ட். விரல்களை மடக்கிக் கொண்டு வெட்டினால் கத்தி கை விரல்களை பதம் பார்க்காது. மேகி, சாண்ட்விச், பர்கர் எல்லாம் செய்வேன்’’ என்று கூறும் நவீன்குமார் பாடகரும் கூட. தன்னுடைய ஆல்பத்திற்காக பாடல் வரிகளை கம்போஸ் செய்து வருகிறார்.
சுதீப், டி.சி.எஸ், மனிதவளத்துறை தலைவர்
‘‘நாங்க பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள், LGBTQ பிரிவினர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதில் ஒன்றுதான் பிளைண்ட் பேக் கஃபே. இதை பெரிய அளவில் செய்ய விரும்பியதால், சிறுசேரியில் உள்ள எங்க நிறுவனத்தில் அமைத்திருக்கிறோம்.இது போன்ற திட்டங்களை செயல்படுத்த எங்க நிறுவனத்தில் தனிப்பட்ட குழு உள்ளது. அவர்களின் ஆய்வில்தான் தாஜ் ஓட்டலில் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் கஃபேயில் வேலை செய்வது பற்றி தெரிய வந்தது. அதே மாடலை இங்கு அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஷாலினி அவர்களை அணுகினோம். முதலில் மும்பையில் அமைத்தோம். அதைத் தொடர்ந்து இப்போது சென்னையில்.
கஃபே அமைப்பது முதல் அதில் வேலை பார்க்கும் அனைவருக்கும் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிப்பது எங்களின் பொறுப்பு. இவர்களை பார்த்துக் கொள்ள வாலன்டியர்களையும் நியமித்து இருக்கிறோம். எல்லாவற்றையும் விட எங்க நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவரும் இந்த கஃபேயில் எவ்வாறு நடந்து ெகாள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறோம். கஃபேயில் உள்ள அனைவருமே மாற்றுத்திறனாளிகள் என்பதால் அவர்களிடம் பொறுமையாக பேசவும், அணுகவும் அறிவுறுத்தி வருகிறோம். சிறுசேரியை தொடர்ந்து சென்னையில் உள்ள மற்ற கிளைகளிலும் பிளைண்ட் பேக் அமைக்கும் திட்டமுள்ளது’’ என்றார் சுதீப்.
செய்தி: ஷன்மதி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
