×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*ஊத்தப்பம் ஊற்றும் போது நடுவில் துவாரம் செய்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் ருசியாக இருக்கும்.

*கிழங்கு வகைகளை வேகவைக்கும் முன்பு, உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, வேகவைத்தால் விரைவில் வெந்து விடும்.

*உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது, கடைசியில் சிறிதளவு ரஸ்க் பவுடரை தூவிவிட்டால் மொறு மொறுப்பாக இருக்கும்.

*கொழுக்கட்டை செய்ய மாவு பிசையும் போது, சிறிதளவு பால் சேர்த்துக் கொண்டால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும்.

– எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.

*வாழைக்காய்க்கு பதில் கேரட்டை வில்லைகளாக நறுக்கி, அதில் பஜ்ஜி செய்தால் ருசியாக இருக்கும்.

*உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, சிறிதளவு வெல்லம் சேர்த்து பாகற்காயை நறுக்கி அதில் ஊறவைத்து சமைத்தால் கசப்பு தெரியாது.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது, அதிகம் புளிப்பு இல்லாத தயிரை சிறிதளவு சேர்த்தால் ருசியாக இருக்கும்.

*சப்பாத்தி மாவின் மேல் சிறிதளவு எண்ணெயை தடவி, பின்பு ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்களானாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

– ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.

*தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால், தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாது.

*அரிசி உப்புமா செய்யும் போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்து செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.

– புனிதவதி, தொப்பம்பட்டி.

*சாம்பார் வாசனையுடன் இருக்க, கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும்.

*காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து, மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் ரோஸ்ட், சிப்ஸ் போன்ற வற்றில் போட வசதியாக இருக்கும்.

*விளாம்பழ ஓட்டை கழுவி விட்டு ரசத்தில் போட்டால் ரசம் மிகவும் ருசிக்கும்.

*கீர் செய்யும் போது சேமியாவிற்கு பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.

– இந்திராணி தங்கவேல், சென்னை.

*ஒரு கப் குலோப்ஜாமூன் மிக்ஸ் மாவை அதே அளவு பாலில் சிறிதளவு கேசரி பவுடர் கலந்து, கட்டியின்றி கரைத்துக் கொள்ளவும். இத்துடன் 2 பங்கு சர்க்கரை, 3 பங்கு நெய் என்ற விகிதத்தில் சேர்த்துக் கிளறி, கடைசியில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்தால், சூப்பர் அல்வா ரெடி.

*தேங்காய் பர்பி செய்யும்போது 2 தேக்கரண்டி ராகி மால்ட் சேர்த்தால் பர்பி கமகமவென்று இருக்கும்.

*பட்டாணியை ஊறவைத்து பின் உப்பு ேபாட்டு பாதி வெந்ததும் எடுத்து வடிகட்டிய பின் பொரித்தால் வெடிக்காது.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

சாம்பார் பொடி

வெறும் வாணலியில் 150 கிராம் துவரம் பருப்பு, ஒரு டம்ளர் உளுந்து, தலா 200 கிராம் சீரகம், முக்கால் டம்ளர் சாப்பாட்டு அரிசி, அரை டம்ளர் சோம்பு, வெந்தயம், கடுகு, சிறிதளவு பெருங்காயம், கால் கிலோ கறிவேப்பிலை, முக்கால் கிலோ தனியா, முக்கால் டம்ளர் கல் உப்பு, 200 கிராம் விரலி மஞ்சள், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாகப் போட்டு வறுக்கவும்.

இறுதியாக அனைத்தையும் ஒன்றாக கலந்து நைசாக அரைக்கவும். இந்தப் பொடியுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை கலந்து நன்றாக கிளறி, காற்றுப் புகாத டப்பாவில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பொடி ஒரு மாதம் வரை கெடாது. இதில் தேவையான அளவு எடுத்து சாம்பார் வைக்க சுவையும், மணமும் சுண்டியிழுக்கும்.

– ச.லெட்சுமி, தென்காசி.

Tags : Kumkumam Dozhi ,
× RELATED பெண்கள் 2025