டாவோஸ்: செயற்கை நுண்ணறிவு இணையத்தில் கன்டென்டுகள், படங்கள், வீடியோக்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, சாலை விபத்துக்களை கணிப்பதன் மூலம் இயல்பு வாழ்க்கையிலும் மனித குலத்திற்கும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என சேவ்லைப் அறக்கட்டளையின் நிறுவனர் பியூஷ் திவாரி கூறி உள்ளார். உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோசில் நேற்று தொடங்கியது. இதில், செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக புத்தாக்க அமர்வில் பங்கேற்ற சாலை பாதுகாப்பு தொடர்பான சேவ்லைப் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சிஇஓ பியூஷ் திவாரி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு மூலம் கன்டென்ட்களை மட்டுமின்றி, சாலை விபத்துகளை கணிப்பதற்கான பணிகளையும் செய்ய முடியும். எங்கள் அமைப்பில் நாங்கள் கடந்த 8 ஆண்டாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகிறோம். சாலை பாதுகாப்பில் ஏஐக்கு இந்திய அரசும் பெரும் ஆதரவு அளித்து வருகிறது.
உதாரணமாக நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை முன்கூட்டியே அடையாளம் காண, டிரோன்களில் பொருத்தப்பட்ட கேமராக்களுக்கு ஏஐ பயன்படுத்தி பயிற்சி அளித்துள்ளோம். சாலை பாதுகாப்பை பொறுத்த வரை பின்னால் இருந்து மோதும் விபத்துகள் பெரிய பிரச்னையாக உள்ளன. அதே போல சந்திப்புகளில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணவும், ஆபத்தான வளைவுகளை அடையாளம் காணவும் ஏஐ மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட கேமராக்களை பயன்படுத்தி உள்ளோம். எனவே சாலை பாதுகாப்பு துறையில் ஏஐக்கு கணிசமான அளவு பயன்பாடு உள்ளது. ஏஐ ஆல் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
