×

எங்கள் தலைவர் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுடன் முழுமையான போர் வெடிக்கும்: ஈரான் அதிபர் பகிரங்க எச்சரிக்கை

 

தெஹ்ரான்: ஈரானிய தலைவர் மீதான தாக்குதல் முழுமையான போராக மாறும் என ஈரான் அதிபர் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடங்கிய போராட்டம், தற்போது மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய புரட்சியாக வெடித்துள்ளது. நாடு முழுவதும் நடக்கும் இந்த கலவரத்தில் பாதுகாப்பு படையினர் 500 பேர் உட்பட மொத்தம் 5,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மனித உரிமை அமைப்புகள் 3,300 பேர் என்றும், இணைய சேவை முடக்கம் காரணமாக உண்மையான பலி எண்ணிக்கை 20,000 வரை இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் 24,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆண்டவனுக்கு எதிராக போர் தொடுத்ததாக கூறி இவர்களுக்கு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்ற அந்நாட்டு நீதித்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை ‘நோயுற்ற மனிதர்’ என்றும், ஈரானில் புதிய தலைமை தேவை என்றும் கூறியதுடன், ராணுவத்தையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார். டிரம்ப் ஒரு ‘குற்றவாளி’ என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ‘தீவிரவாதிகள்’ மூலம் கலவரத்தை தூண்டுவதாகவும் கமேனி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ‘எங்கள் தலைவர் கமேனி மீது தாக்குதல் நடத்தினால் அது அமெரிக்கா உடனான முழுமையான போருக்கு வழிவகுக்கும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : United States ,Iran ,TEHRAN ,
× RELATED எச்சரிக்கையை மீறியதால் பனிச்சரிவில்...