லாகூர்: பாகிஸ்தானில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இம்ரான் கானின் அரசு கவிழ்க்கப்பட்டது. அதன் பின் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 4ம் தேதி சிறையில் இம்ரான் தனது சகோதரியை சந்தித்தார். பின்னர் இம்ரான் தனது எக்ஸ் தள பதிவில், பாதுகாப்பு படை தலைவர் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனிரை மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அவரது அனைத்து வகையான சிறை சந்திப்புகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து இம்ரானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நீண்ட கால தனிமைச் சிறைவாசம் சர்வதேச சட்டத்தின் கீழ் தீங்கு விளைவிப்பதாகும். நியாயமான காரணம் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இதுபோன்று விதிக்கப்படும்போது கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாக கருதப்படுகின்றது. இது கவலையை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
