சென்னை: மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்க, உலக வரலாற்றிலேயே பாஜவில் ஒரு குழு அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷாவை அழைத்து பெரிய அளவில் மாநாடு நடத்த தமிழக பாஜ தலைமை முடிவு செய்துள்ளது. மதுரையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் அதை மாற்றி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி வரும் 23ம்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதிமுக – பாஜ கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஒரு சேர மேடையேறுவார்கள் என கூறப்படுகிறது. மாநாட்டில் கூட்டணி கட்சிகள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார். அதில், ‘கூட்டம் திரட்டல் குழு’ என ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், முருகானந்தம், கார்த்தியாயினி, அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மோடி கூட்டத்துக்கான ஆட்களை திரட்டுவதற்கான பணிகளை இந்த குழு மேற்கொள்ள உள்ளது.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு மாநாட்டுக்கு கூட்டம் திரட்டுவதற்காக ஒரு குழுவை பாஜ அமைத்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதுவரைக்கும் தமிழக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தினால், அந்த மாநாடு சிறப்பாக நடத்துவதற்கு குழுக்கள் அமைப்பார்கள். அது வழக்கமான ஒன்று தான். ஆனால் கூட்டம் திரட்டுவதற்கு என்று ‘கூட்டம் திரட்டல் குழு’ என்ற ஒரு குழுவை அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விமர்சனத்ைத ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
